search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beetles"

    தஞ்சை பெரியகோவிலில் கோபுர சீரமைப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை கதண்டு வண்டுகள் கடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. #Thanjavurbigtemple
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் கடந்த 5-ந் தேதி மாலை இடியுடன் மழை பெய்தது. இதில் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கேரளாந்தகன் கோபுரத்தில் மின்னல் தாக்கியது. இதில் ஒரு யாளி சிற்பம் உடைந்து சேதமாகி கீழே விழுந்தது. இது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து தொல்லியல் துறை சார்பில் கோபுரத்தை சீரமைக்கும் பணி இன்று தொடங்கியது. அங்கு சாரம் கட்டப்பட்டு அதில் தொழிலாளர்கள் ஏறிச்சென்று பணிகளை மேற்கொண்டனர். அப்போது அந்த கோபுரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டு வண்டுகள் கலைந்து வந்து தொழிலாளர்களை கடித்தது. இதில் 2 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். மேலும் வண்டுகள் கீழே பறந்து வந்து பக்தர்களையும் கடித்தது. இதில் 2 பக்தர்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். காயமடைந்த 4 பேரும் 108 ஆம்புலன்சு மற்றும் ஆட்டோக்களில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கதண்டு கடித்ததால் காயமடைந்த பக்தரை ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற காட்சி.

    இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சுற்றுலாவாக வந்த வெளிநாட்டு பயணிகளும், பள்ளி மாணவ- மாணவிகளும், பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் வெளியில் காத்திருந்தனர். முன்பக்க கேட் மூடப்பட்டது.

    காலை 10 மணி முதல் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதுபற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தஞ்சை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதண்டு வண்டுகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கவச உடை அணிந்து இந்த பணியில் ஈடுபட்டனர். கதண்டுகள் அழிக்கப்பட்டதும் மதியம் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். #Thanjavurbigtemple
    ×