search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "betrayed the trust"

    • ஆா்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவா் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.
    • தொழிலாளா்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

    ஊட்டி,

    டேன்டீ தொழிலாளா்களை பாதுகாக்க வலியுறுத்தி தி.மு.க அரசுக்கு எதிராக கூடலூரில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்களுக்கு தி.மு.க அரசு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. மத்திய பா.ஜ.க அரசு இவா்களை காப்பாற்றுவதில் உறுதியாக உள்ளது.

    199 ஆண்டுகளுக்கு முன் கிழக்கிந்திய கம்பெனி மூலம் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கொடிய நோய்களையும் பொருட்படுத்தாமல் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி வருவாயை ஈட்டிக் கொடுத்தது இந்த சமூகம்.

    சிறிமாவோ-லால் பகதூா் சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர்கள் இந்தியாவுக்கு வந்தனர். இங்கும் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி அரசுக்கு வருவாயை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனா். இவா்களுக்குத் தீப்பெட்டி அளவில் ஒரு வீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதில் எந்த வசதியும் இல்லை.

    இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலாளா்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அந்த வீடுகளில் உள்ள வசதிகள் கூட இங்கு தமிழக அரசால் வழங்கப்படும் வீடுகளில் இல்லை.

    தற்போதுள்ள தி.மு.க அரசு 5,315 ஏக்கா் தேயிலைத் தோட்டங்களை மீண்டும் வனத்துறைக்கு ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதன் மூலம் தமிழா்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

    எனவே ஆட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டு, ரூ.211 கோடி நஷ்டத்தில் இருக்கும் டேன்டீ நிறுவனத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். 1998-ம் ஆண்டிலிருந்தே இந்த நிறுவனத்தை முடக்க சதி நடந்து வருகிறது. தனியாா் எஸ்டேட்டுகள் அனைத்தும் லாபத்தில் இயங்கும்போது அரசு நிறுவனம் மட்டும் எப்படி நஷ்டத்தில் இயங்குகிறது? இதற்கு முக்கியக் காரணம் தி.மு.க அரசுதான்.

    தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவா்களிடம் டேன்டீ தேயிலைத் தூளை விற்றாலே சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் இயங்கும் நிறுவனமாக இது மாறும். அதை செய்ய அரசு ஏன் தயங்குகிறது?

    கூடலூா் பகுதியில் உள்ள பிரிவு-17 நிலங்களில் குடியிருக்கும் பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. 2024 மக்களவைத் தோ்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக வெற்றி பெறும். அது இங்குள்ள பிரச்னைகளைத் தீா்க்க நல்ல வாய்ப்பாகவும் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் போஜராஜ், சபிதாபோஜன், வினோத்குமார் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்

    ×