search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavanisagar Dam"

    பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்துவிடப்படும் நீரை வைத்து 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்து பாசன பகுதியில் வேளாண் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள்.

    பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனப்பகுதியில் 25 ஆயிரத்து 500 ஏக்கரும், காளிங்கராயன் பாசனப் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரும் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது.

    நடப்பாண்டு மழைப் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 97 அடியை கடந்துள்ளது. பவானி ஆற்றில் இருந்து வினாடிக்கு 1,650 கன அடி வீதம் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுடி பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள்.

    இது பற்றி வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-

    நடப்பாண்டில் மாவட்ட அளவில் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனப் பகுதியில் 5 ஆயிரம் ஹெக்டேர் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    இது தவிர வாழை, ஆயிரம் ஹெக்டேர், கரும்பு 500 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். கீழ் பவானி பாசனப் பகுதியில் மீதமுள்ள 14 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நெல் சாகுபடியாகும்.

    இயந்திர முறை நெல் நடவால் நேரம், செலவு, வேலையாட்கள் குறைவு நன்மைகள் உள்ளன. சாதாரண நாற்றங்கால் முறையில் 30 நாட்களுக்கு பின் வயலில் நடவு பணி செய்ய வேண்டும். பாய் முறை நாற்றங்காலால் 15 நாளில் நடவு செய்யலாம்.

    இதன் மூலம் அறுவடை காலம் 15 நாட்கள் குறையும். 5 முதல் 10 சதவீத மகசூல் அதிகரிக்கும். சாதாரண நடவில் ஹெக்டேருக்கு 7 டன் மகசூல் கிடைத்தால், இயந்திர நடவில் கூடுதலாக 1 டன்னுக்கு மேல் மகசூல் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 96 அடியை எட்டியது.
    ஈரோடு:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டியதையொட்டி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 45 அடியிலிருந்த பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 8 ஆண்டுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது.

    இந்த நிலையில் பருவ மழை தணிந்து மழை குறைந்தது. இதனால் நீர்வரத்தும் குறைந்தது. நேற்று மாலை முதல் நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப் பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

    நேற்று அணைக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று அதிகாலையில் இருந்து இது மேலும் அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 869 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டமும் உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.13 அடியாக இருந்தது.

    அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வருவதால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி 92.11 அடியாக உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை ஆகும்.

    இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் மூலம் சுமார் 2½ லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த மாதம் தொடங்கும் போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி 92.11 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடி 10 ஆயிரத்து 719 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு வினாடிக்கு 850 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    மேலும் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடியும் திறந்து விடப்படுகிறது.

    பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் 10 நாட்களில் முழு கொள்ளவை எட்டிவிடும் என்று பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை நீர் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து வருவதால் நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி அதிகரித்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு வெறும் 500 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    கடந்த 7-ந் தேதி இரவு முதல் நீலகிரி மலை பகுதியில் பரவலாக மழை பெய்வதால் அணைக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.

    8-ந் தேதி முதல் பருவமழை மேலும் தீவிரம் அடைந்ததாலும், பில்லூர் அணை நிரம்பியதாலும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் உயர்ந்தது.

    படிப்படியாக நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 80 அடியாக இருந்தது. இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி நீர்மட்டம் 81.50 அடியாக உள்ளது. அதாவது ஒரே நாளில் 1½ அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 729 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி தண்ணீரும், கீழ் பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் உத்தரவின்படி பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை கால்வாய்களின் கீழ்பாசனம் பெறும் நிலங்களுக்கு நாளை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    இதற்கான நிகழ்ச்சி கொடிவேரி அணை பகுதியில் நாளை காலை 7.30 மணிக்கு நடக்கிறது. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தண்ணீர் திறந்து வைக்கிறார். மாவட்ட கலெக்டர் பிரபாகர் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
    பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தாலும் அணையின் நீர்மட்டம் 73 அடியை தொட்டிருப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் நீர் ஆதரமாக உள்ள பவானிசாகர் அணை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர்மட்டம் அதிகமாக உள்ளது.

    கடந்தாண்டு இதே நாளில் 39 அடியில் இருந்தது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியாக கூடி அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது.

    இன்று (திங்கட்கிழமை) அணையின் நீர்மட்டம் 73 அடியை தொட்டது. அதே சமயம் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை குறைந்தது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2316 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக வழக்கம் போல் பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தாலும் அணையின் நீர்மட்டம் 73 அடியை தொட்டிருப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்த மாதம் வாய்க்கால்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
    கனமழை மற்றும் பில்லூர் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து 2 மடங்காக அதிகரித்து உள்ளது.
    ஈரோடு:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது.

    ஊட்டிமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டம் மலை அடிவாரத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 3251 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் ஊட்டி மலையில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதையொட்டி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாலும் இன்று பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து 2 மடங்காக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6436 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று 55.46 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 57.46 அடியாக உயர்ந்து உள்ளது.

    கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வருவதையொட்டி அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் பாசனத்துக்கு வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் ஆவலுடன் உள்ளனர்.
    ×