search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "black flag"

    • மீன்பிடி ஏலதாரர்கள் மீன்களின் எடை பெருக்கத்திற்காக அணை நீரில் கழிவுகளை கொட்டி வருவதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு வந்தது.
    • வைகை அணை நீர்பிடிப்பை சுற்றியுள்ள கிராம பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தேனி:

    தேனி மாவட்டம், வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் மீன்பிடி ஏலம் பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி ஏலதாரர்கள் மீன்களின் எடை பெருக்கத்திற்காக அணை நீரில் கழிவுகளை கொட்டி வருவதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு வந்தது.

    இந்நிலையில் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட சக்கரைபட்டி கிராம பகுதியில் உள்ள வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி நகர பொதுச்செயலாளர் பொன்மணி தலைமையில், மீனவர் பழனியாண்டி மற்றும் கிராம மக்கள் கருப்பு கொடியுடன் அணை நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் வைகை அணையில் மீன் பிடி ஏலத்தை ரத்து செய்ய கோரி கையில் கருப்பு கொடி ஏந்தி, நீரில் நின்று கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் மீன் பிடி நிலத்தை ரத்து செய்யாவிட்டால் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே போராட்டம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில் போலீசார் மற்றும் பெரியகுளம் தாலுகா, தென்கரை வருவாய் ஆய்வாளர் அம்பிகா ஆகியோர் போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து பெரியகுளம் தாசில்தார் அர்ஜூனன் போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து, வைகை அணை நீரில் இறங்கி போராட்டம் நடத்தி வருபவரிடம் உங்களது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தற்போது தேர்தல் நடைபெறும் காலம் என்பதால் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சம்பவம் வைகை அணை நீர்பிடிப்பை சுற்றியுள்ள கிராம பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது.
    • கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ளது உப்பாறு அணை. திருமூர்த்தி அணையின் உபரி நீரை சேமிக்கும் வகையில், இந்த அணை கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது.

    அதோடு, அணைக்கு மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங்களால் தடுப்பணைகள் கட்டப்பட்டதால், அணைக்கு வரக்கூடிய மழைநீரும் வராமல் போய்விட்டது. அணையின் நீராதாரங்கள் அழிக்கப்பட்டதால், உப்பாறு அணையால் பயனடைந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், உப்பாறு அணையை நம்பியுள்ள விவசாயிகள், திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசன திட்டத்தில் உபரி நீரை திறந்துவிடக்கோரி, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்தால் உப்பாறு அணைக்கு தண்ணீர் தருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் வாய்மொழியாக உறுதி அளித்தனர். ஆனால் கூறியவாறு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் நடுமரத்துப்பாளையம் பகுதி பொதுமக்கள் இன்று காலை வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இது குறித்த தகவல் அறிந்ததும் வருவாய் மற்றும் நீர்வளத்துறையினர், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • சுமார் நான்கு நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.
    • தமிழக அரசே நாங்கள் அடிமைகள் அல்ல என வாசகப் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு மேல் வசித்து வரும் பழமை வாய்ந்த கிராமம் ஆகும்.

    போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு கிராமத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் இந்நிலையில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சுமார் நான்கு,ஐந்து கிலோமீட்டர் கடந்து அருகில் உள்ள செங்குணம் கிராமத்திற்கு நடந்து சென்று வாக்களிக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் மேலும் முதியோர்கள், கர்ப்பிணிகள், உடல்நிலை சரியில்லாமல் உள்ளவர்கள் உள்ளிட்டோர் 4,5 கிலோ மீட்டர் நடந்து சென்று வாக்களிக்க சிரமமாக உள்ளது எனவும் நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தங்கள் கிராமத்திற்கு இம்முறை வாக்குச்சாவடி மையம் அமைக்காவிட்டால் தங்கள் ஒட்டுமொத்த கிராமமே அதாவது 700 வாக்காளர்கள் கொண்ட அனைவருமே வாக்களிக்க போவதில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி சுமார் நான்கு நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.


    மேலும் தமிழக அரசே நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல உள்ளிட்ட பல்வேறு வாசகப் பதாகைகளை எழுதிவைத்து கிராமமே போராட்டத்தில் ஈடுபட்டு வருவது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    எங்கள் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

    • எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கிரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர்.
    • அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடுவோம்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது பழையவூர் கிராமம். இப்பகுதியில், 150 குடும்பங்களை சேர்ந்த, 700க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், ஒண்டியூர் சாலை முதல், பழையவூர் வரை தார்சாலை அமைக்க கடந்த, 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த, 2015-ம் ஆண்டு ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு தார் சாலை அமைக்க, 29 லட்சம் ரூபாய் ஒதுக்கி சாலைகள் போடப்பட்டது. அப்போது, 200 மீட்டர் தூரத்திற்கு சாலை போடவிடாமல் அப்பகுதியில் சிலர் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக போலீசிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட பல இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய அந்த பகுதி மக்கள் தேர்த லை புறக்கணிக்க போவதாக நேற்று தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கி ரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர். எங்கள் ஊருக்கு செல்லும் ஒரே பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். பால்வண்டி, பஸ் வாகனங்களை ஊருக்குள் விடாமல் ஆக்கிரமிப்பாளர்கள் தடுக்கின்றனர்.

    இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள, 500 வாக்காளர்களும் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடு வோம். இல்லாவிட்டால் தேர்தலை கண்டிப்பாக புறக்கணிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    • சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர்.
    • போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்குட்பட்ட பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள புனை வெங்கப்பன் குளத்தின் நீர் புறம்போக்கு பகுதியில் அருந்ததியினர் மற்றும் பிற சமுதாயத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர்.

    இதனை ஒட்டிய பகுதியான மாநகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட பேட்டை தங்கம்மன் கோவில் தெருவிலும் அருந்ததியினர் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

    சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியும் பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்திருந்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி கள் ஒட்டினர்.

    ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர்கள் குடியிருக்கும் பகுதி தெருக்களில் முழுவதும் கருப்புக்கொடி கட்டினர். அனைத்து வீடுகளின் வாசல் முன்பு கருப்புக்கொடி கட்டப்பட்டது.

    அப்பகுதி குடியிருப்புவாசிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் இளமாறன் தலைமையில் அங்குள்ள தங்கம்மன் கோவில் அருகே பந்தல் அமைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளும் அரசு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட் டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடுப வர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.

    தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் போராட்டக்காரர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    • படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.
    • பெரும்பாலான படகுகள் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி உள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாக கூறி சமீப காலமாக தொடர்ந்து கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இதில், படகுகள் பறிமுதல் செய்யப்படுவது டன் இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.

    இதனை கண்டித்து, ராமேசுவரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டனர். மேலும் இலங்கை மீனவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொண்ட ராமேசுவரம் மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு மீண்டும் கடலுக்கு சென்றனர்.

    இதனை கண்டித்து, இலங்கை மன்னார், பேசாளை, நெடுந்தீவு பகுதி மீனவ சங்கத்தினர் கண்டனம் தெரிவித்ததுடன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் வந்து மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று இலங்கை மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்பு கொடியுடன் நடுக்கடலில் போராட்டம் அறிவித்துள்ளனர்.

    இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க செல் லும் மீனவர்களுக்கு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர். மேலும் பெரும்பாலான படகுகள் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி உள்ளனர்.

    ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் போது இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மீண்டும் மீனவர்கள் பிரச்சினை ஏற்படும். இதனை தடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை தமிழ் மீனவர்களிடையே பெரும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தடுக்க குறுகிய மீன்பிடி கடல் பகுதியை கொண்ட ராமேசுவரம் பகு தியில் அரசின் அனுமதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்துவது, அதிவேக படகுகளை மாற்று துறைமுகத்திற்கு கொண்டு செல்லுவது, எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லுவதை கட்டுப்படுத்துவது, இந்திய-இலங்கை மீனவர்கள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இரு நாட்டு மீனவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண் டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிரதமர் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.
    • மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி காட்ட போவதாக அறிவித்து இருந்தனர்.

    ஈரோடு:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெறும் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி காட்ட போவதாக அறிவித்து இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    அதன்படி ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிழக்கு புது வீதியில் வசிக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பிரதமர் நரேந்திர மோடி பல்லடம் வருகை எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகளுடன் சேர்ந்து கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்தார்.

    தமிழகம் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, இன்று வரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு இழப்பீடு வழங்காமல் இருப்பதை கண்டித்தும், ராமேஸ்வரம் மீனவர்கள் சட்ட விரோதமாக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மறைமுகமாக துணை நிற்பதை கண்டித்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை சென்னிமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகிலனை கைது செய்தனர்.

    • கூடுதல் செலவு ஏற்படுவதோடு மாணவர்கள், வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
    • ஊர்மக்கள் கையில் கருப்புக்கொடியுடன் வெள்ள நீருக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18-ந்தேதி பெய்த கனமழையால் உடன்குடி அருகேயுள்ள சடையநேரிகுளம் உடைந்து, குளத்து தண்ணீர் பல்வேறு ஊர்களுக்குள் புகுந்தது.

    இதில் உடன்குடி அருகே வட்டன்விளை, வெள்ளாளன்விளை கிராமம் அதிகமாக பாதிக்கப்பட்டு நான்கு புறமும் தண்ணீரால் சூழப்பட்ட தனித்தீவாக மாறியது.

    போக்குவரத்து வசதி இல்லாமல் வெள்ளாளன் விளை கிராமத்தின் சர்ச் வழியாக வெளியூர்களுக்கு சென்று வந்தனர். இதனால் வட்டன்விளையில் இருந்து உடன்குடி மற்றும் பரமன்குறிச்சிக்கு நேர்வழியில் செல்லும் பாதை தடைபட்டு பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

    இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதோடு மாணவர்கள், வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். பல அடி உயரத்திற்குநீர் தேங்கி நிற்கும் வட்டன்விளை வடக்குத் தெரு தார்ச்சாலை வழியாக பரமன்குறிச்சி- மெஞ்ஞான புரம் பிரதான சாலைக்கு செல்ல தற்காலிகமாக மணலை கொட்டி சாலை வசதி செய்து தர வேண்டி இப்பகுதியில் உள்ள மக்கள் மாவட்ட கலெக்டரிடமும், அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இைதயொட்டி நேற்று ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டப்பட்டது சுமார் 50 நாட்களாக 2 கிலோ மீட்டர் தூரத்தில் செல்லும் நாங்கள் 7 கி.மீ. தூரம் சுற்றி செல்கிறோம் என்றும், 2 கி.மீ. வழியாக சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் அல்லது உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் திரண்ட ஊர்மக்கள் கையில் கருப்புக்கொடியுடன் வெள்ள நீருக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், கிராம அதிகாரி கணேசபெருமாள் மற்றும் அதிகாரிகள் ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.ஓரு வாரத்திற்கு தற்காலிக சாலை வசதி செய்து தரப்படும் என அதிகாரிகள் கூறியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    மேலும் இப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாய தோட்டங்களில் இன்னும் தண்ணீருக்குள்ளே இருக்கின்றன. தோட்டத்திற்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம்
    • பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து நடுவீரப்பட்டு சி.என். பாளையம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து ஒன்றிய தலைவர் வைத்தி லிங்கம் தலைமையில் தீபாவளி பண்டிகையின் போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சம்பளம் வழங்காததால் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட தோடு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டமும் செய்தனர்.மேலும் சம்பளம் வழங்காததால் தீபாவளி பண்டிகை கொண்டாட முடியாத அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுகாதாரமற்ற சூழல் ஏற்படுகிறது.
    • மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட பொழுது நேரில் வந்து பார்த்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    கோவை:

    கோவை உக்கடம் 86-வது வார்டு ரேஸ்மா கார்டன் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தோம்.

    உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணையில் இருந்து தண்ணீர் செல்வதற்கான பாதையில் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் அடிக்கடி தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுகாதாரமற்ற சூழல் ஏற்படுகிறது. இதனால் உடல் பாதிப்பு ஏற்படுகிறது.

    மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட பொழுது நேரில் வந்து பார்த்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடக்காமல் மந்த கதியில் உள்ளது.

    எனவே நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், காலதாமதம் செய்வதை கண்டித்தும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 36 அமைப்பினர் ஆதரவு தெரிவித்து ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
    • வருகிற 16-ந் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

    பல்லடம்:

    தொழில் நிறுவனங்களுக்கான 430 சதவீதம் உயர்த்திய மின்சாரநிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 3பி-யில் இருந்து 3 ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் 25-ந்தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் பனியன் தொழில் சார்ந்த தொழில் அமைப்பினர் மற்றும் சிறு, குறு தொழில் அமைப்பினர் என 36 அமைப்பினர் ஆதரவு தெரிவித்து ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

    இந்நிலையில் இன்று தொழில்துறையின் நிலை குறித்து அரசிடம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில் துறையினர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

    இதில் பங்கேற்ற தொழில் துறையினர் பலர் கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். மேலும் தொழில் பாதிப்பை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் அவரவர் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றினர். ஒவ்வொரு தொழில் சங்கத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    ஒவ்வொரு அமைப்பினரும் மின்கட்டண பாதிப்பு குறித்து மனுவில் கையெழுத்திட்டு கலெக்டரிடம் வழங்கினர். முன்னதாக அனைத்து அமைப்பினரும் ஒன்று சேர்ந்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தின் முன் திரண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மேலும் மனுக்களை முதல்-அமைச்சருக்கு அனுப்ப இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கோபி பழனியப்பன் கூறும்போது, மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி இன்று தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக தொழில்துறையினர் கருப்பு பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் கலெக்டரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வருகிற 16-ந் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இதில் திரளானவர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

    போராட்டத்தையொட்டி திருப்பூர், பல்லடம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. 

    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
    • தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    கோவை:

    கோவை இடையர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் கிரைண்டர், மிக்சி உதிரி பாகங்கள், வாகன உதிரிபா கங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மூலப்பொருட்கள் விலை உயர்வு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல இன்னல்களை தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளதால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட தொழில்துறையினர் தொடர்ந்து பல்வேறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் கூட சென்னை சென்று, அமைச்சர்களை சந்தித்து பேசினர். ஆனாலும் தொழில் முனைவோரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. கோவை இடைய ர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அங்கு பணியாற்றியவர்களும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

    மேலும் கோவை மாவட்ட தொழில் முனைவோர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தபடி ஊர்வலமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இதேபோல் கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களிலும் இன்று கருப்பு கொடியேற்றப்பட்டு போராட்டம் நடந்தது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. அன்று மின்தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், இன்று மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்று வருகிறது.

    நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மேற்கூரை சூரியஒளி ஆற்றல் உற்பத்திற்கு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    12 கிலோ வாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பி-யிலிருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல், 2 ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை கைவி டுதல் என்பன 5 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதில் 12 கிலோவாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பியில் இருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் அரசு நிறைவேற்றியுள்ளது.

    மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எங்கள் கூட்டமைப்பில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் சார்பில் இன்று கோவை உள்பட தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

    தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அடுத்த கட்டமாக சென்னையில் வருகிற 16-ந் தேதி 25 ஆயிரம் தொழில் முனைவோர் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத போரா ட்டம் நடத்தப்படும். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×