search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "black flag"

    அசாம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, அந்த மாநில மாணவர் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். #PMModi #GoBackModi
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்துக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, அந்த மாநில மாணவர் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இப்போராட்டம் நடைபெற்றது. கவுகாத்தி விமான நிலையத்திலிருந்து, ராஜ்பவன் நோக்கி பிரதமரின் வாகன அணிவகுப்பு சென்றபோது, கவுகாத்தி பல்கலைக்கழக வாயில் பகுதியில் திரண்ட மாணவர் சங்கத்தினர், அவருக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல், எம்.ஜி. சாலை பகுதியிலும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டி மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, பிரதமர் மோடி திரும்பிச் செல்ல வேண்டும், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். இதனால், அந்த பகுதிகளில் சிறிது நேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில், 2-வது நாளாக இன்று வடகிழக்கு மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்யும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என அங்குள்ள அமைப்புகள் கூறியுள்ளன. பிரதமர் மோடி, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, அசாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் இன்று பொதுக்கூட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.



    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பாரசீகர்கள், பௌத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு, குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவின் மூலம் இந்தியக் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு 12 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்று இருந்தது இப்போது 6 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் இருந்தாலும் குடியுரிமை வழங்கப்படும். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதேசமயம், மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. விரைவில் மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. #PMModi #GoBackModi
    திருப்பூருக்கும், கன்னியாகுமரிக்கும் வருகை தரும் பிரதமர் மோடி அவர்களுக்கு எனது தலைமையில் கருப்புக்கொடி காட்டும் அறப்போராட்டம் நடைபெறும் என வைகோ கூறியுள்ளார். #Vaiko #PMModi
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2014 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அரசு மத்தியில் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கின்றது. அரசியல் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து வரும் பா.ஜ.க. அரசு, நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து வருகிறது. ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று மதவெறி சனாதன சக்திகள் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருவதை நிலைநாட்டும் வகையில், மோடி அரசு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவது பேராபத்து ஆகும்.

    மதசகிப்பின்மை, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு எனும் பெயரால் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தோர் நியமனம், திட்டக்குழு கலைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட நிதிஆயோக் மூலம் மாநில உரிமைகள் பறிப்பு, கல்வித்துறை காவிமயம், அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் மத்திய அமைப்புகளின் சீர்குலைவு போன்றவை நாடு பாசிசத்தின் கோரப்பிடியில் போய்க் கொண்டிருப்பதையே காட்டுகிறது.

    மத்திய பா.ஜ.க. அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வருவது அவரது உரிமை. ஆனால் தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் இழைத்து வரும் பிரதமர், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் கருப்புக்கொடி காட்டுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது.



    அதன்படி பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூருக்கும், பிப்ரவரி 19-ம் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தந்து அரசு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது தலைமையில் கருப்புக்கொடி காட்டும் அறப்போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Vaiko #PMModi
    வருகிற 19-ந் தேதி பிரதமர் மோடி குமரி மாவட்டம் வருகை தர உள்ளார். அவருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று பிரின்ஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #congress #pmmodi

    குளச்சல்:

    குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைக்கப் பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஏழைகளின் வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும். ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மீனவர் நல்வாழ்வுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும். குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதிகளை அள்ளி வீசியது.

    மத்தியில் பா.ஜ. ஆட்சி அமைந்து 60 மாதங்கள் நிறைவடைகிறது. ஆனால் மேற்கூறிய வாக்குறுதிகள் காற்றில் கரைந்து விட்டது. பா.ஜ. ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை.

    குமரி மாட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. ரப்பர் தொழிற்சாலை, கயிறு தொழிற்சாலை, கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளம், நவீன பாதுகாப்பு கருவிகள் இப்படி உருப்படியான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை.

    பார்வதிபுரம், மார்த்தாண்டத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களுக்கு மத்திய அரசு உத்தரவாதம் தருமா? பொதுமக்களின் பீதியை போக்க வேண்டும். இந்த நிலையில் வருகிற 19-ந் தேதி பிரதமர் மோடி குமரி மாவட்டம் வருகை தர உள்ளார்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் பிரதமர் குமரி மாவட்டத்திற்கு வருவதை மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே அவர் வருகையின்போது காங்கிரஸ் சார்பில் அவருக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதே பொருத்தம் என குமரி மாவட்ட காங்கிரஸ் கருதுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #congress #pmmodi

    மக்கள் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan #Vaiko
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய மருத்துவ தேவைகளை அரசு வழங்க வசதியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தஞ்சை, நெல்லை உயர்தர பன்னோக்கு மருத்துவமனை மற்றும் பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த பிரதமருக்கு கருப்புகொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் மதுரையில் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் போராட்டம், சாலை மறியல் நடத்தினர்.

    இவை அனைத்தும் ஜனநாயக ரீதியில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் என்ற எல்லையை தாண்டி நாட்டின் பிரதமரை தரக்குறைவாக ஏசியும், பேசியும் அங்கே கடமை ஆற்ற வந்த காவல்துறை அதிகாரிகளை தான் ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற கண்ணியம் இல்லாமல் வைகோ காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் அழைத்து எச்சரித்து தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

    கடமையாற்ற வந்தவர்களை கண்ணியக்குறைவாக பேசுவதுதான் நீங்கள் கூறும் அண்ணா, பெரியாரிடம் கற்றுக்கொண்ட பாடமா?

    கடந்த காலங்களில் இலங்கை தமிழர்களுக்காகவே வாழ்வதாக அடையாளப்படுத்திக்கொண்ட நீங்கள் இன்று அதே இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க துணைபோன தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிகளுக்கு ஆதரவு குரல் கொடுக்கிறீர்கள். இதுதான் உங்களின் அடிக்கடி நிறம் மாறும் அரசியல் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

    ஒப்புக்குகூட தமிழக மக்களை கஜா புயலின் போது பார்க்க வரவில்லை என்று கூறும் வைகோவே, ஒப்புக்கு அரசியல் நடத்துபவர் அல்ல என் தலைவர் மோடி . கஜா புயல் வரும் முன்பே மத்திய அரசு புயல் எச்சரிக்கையையும், உதவியையும் தமிழகத்திற்கு வழங்கியதால்தான் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    வெறும் உதட்டளவில் இல்லாமல் வடமாநில தேர்தல் பிரசாரத்திற்கு நடுவே தமிழக மக்களின் துயரங்களை பகிர்ந்துகொண்டார். மத்திய அமைச்சர்களை தமிழகத்திற்கு அனுப்பி நிவாரண பணிகளை பிரதமர் அலுவலகம் கண்காணித்து உதவியது என்பதே உண்மை.

    ஒப்புக்கு அரசியலும், ஒப்பாரி அரசியலும் உங்களை போல் செய்பவர் அல்ல மோடி.


    நீங்கள் நடத்திய கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் உங்களை விளம்பரப்படுத்தி கொள்ள யாருக்காகவோ ஒப்புக்காக நடத்தியதோ? அரசியலில் கடந்த காலங்களில் கள்ளத்தோணி நாடகம், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவர், வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது என்பது தான் கடந்தகால சாதனை விருதுகள். உங்களை நம்பிவந்து தீக்குளித்த தொண்டர்களின் ஆன்மா இன்று நீங்கள் எந்த ஸ்டாலினை எதிர்த்து வந்தீர்களோ அவரை முதல்வராக்குவேன் என்பதை கேட்டு அந்த ஆன்மா உங்களை மன்னிக்காது.

    உங்கள் கருப்பு கொடி போராட்டம் உங்களின் சுய விளம்பரமே தவிர தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காது.

    மக்கள் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பிரதமரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை தமிழக பா.ஜனதாவும் பொறுத்துக் கொள்ளாது

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #BJP #TamilisaiSoundararajan #PMModi #Vaiko
    மதுரைக்கு 27-ந்தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். அவருக்கு மதிமுக சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ பேசினார். #pmmodi #vaiko #gajacyclone

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் கடுமையாக எதிர்ப்போம்.

    கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இதுவரை வந்து பார்வையிடவில்லை. மேலும் ஆறுதலுக்காக ஒரு அறிக்கை கூட விடவில்லை.

    தமிழக மக்களை பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார். தமிழ் மக்கள் நலனை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.

    மதுரைக்கு 27-ந்தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். அவருக்கு ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும். இதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும்.


    கஜா புயலால் பாதித்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் சேதமான நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டினால் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். சுப்ரீம் கோர்ட்டை மதிக்காமல் கர்நாடக அரசு புதிய அணை கட்டும் என்பது எனது வியூகம்.

    டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். டெல்டா விவசாயிகளின் உரிமைகளுக்கு ம.தி.மு.க. என்றென்றும் துணை நின்று போராட்டம் நடத்தும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறுஅவர் கூறினார். #pmmodi #vaiko #gajacyclone

    தமிழகத்திற்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகள் கருப்புகொடி காட்டுவோம் என்று சொல்வது சரியல்ல என தமிழிசை தெரிவித்துள்ளார். #tamilisai #pmmodi #gajacyclone

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி சமீப காலமாக மட்டுமல்ல எப்போதுமே தமிழகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். இதை இதற்கு முன்பு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும், தற்போதைய பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும்.

    பிரதமராக இருந்தபோது மன்மோகன்சிங் எத்தனை முறை தமிழகம் வந்துள்ளார். ஆனால் பிரதமர் மோடி ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்க வந்து படகுகளை கொடுத்தார். அதேபோன்று சென்னை ஆவடியில் ஆயுத தொழிற்சாலை கண்காட்சி நடந்ததை தொடங்கி வைத்தார்.

    ஆனால் அப்போது அவர் வந்தபோது எதிர்கட்சியினர் கருப்பு கொடி காட்டினார்கள். தமிழகம் ராணுவ ஆயுத தொழிற்சாலை உற்பத்தியில் சிறந்த இடம் என்பதனால் தான் 5 மாவட்டங்களில் அதை ஏற்படுத்த பிரதமர்மோடி அறிவித்துள்ளார். இதன்மூலம் புதிதாக 2 ½ லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    பிரதமர் மோடி ஆட்சியில் இதுவரை ரூ.5 ½ லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்று யாரும் செய்ததில்லை. தற்போது வருகிற 27-ந்தேதி மதுரையில் ரூ.1,300 கோடியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கி வைக்கப்படுகிறது.

    எனவே பிரதமர் மோடி தமிழகத்தின் மீது எப்போதும் அக்கரை கொண்டவர் தான். கஜா புயல் பாதிப்பின்போது ஏன் அவர் வரவில்லை என மீண்டும் மீண்டும் தவறாக பொய் பிரச்சாரம் செய்யக்கூடாது. புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி உடனே முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார்.


    தொடர்ந்து டுவிட்டரில் தனது வருத்தத்தினை பதிவு செய்தார். தமிழக பிரதிநிதிகளாக என்னையும், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் என எங்களை அனுப்பி வைத்து தங்கி பணியாற்ற வைத்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் இது போன்று செய்தாரா?. எதிர் மறை பிரச்சாரம் எடுபடாது.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரும் வகையில் தமிழகத்திலும் மிகப்பெரிய அடித்தளம் ஏற்படுத்த நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். டெல்லி பொதுக்குழுவில் பேசிய பிரதமர் மோடி, நிலையான ஊழலற்ற ஆட்சி குறித்தும், நிலையற்ற ஆட்சி குறித்தும் தெளிவு படுத்தியுள்ளார். நிலையான ஊழலற்ற ஆட்சி மீண்டும் கொடுக்க பிரதமர் மோடி ஆட்சிக்கு வரவேண்டும்.

    இதற்காக பா.ஜனதா சிறப்பான அடித்தளத்தை அமைத்து வருகிறது. ஜனவரி 26-ந்தேதி ஒரு வாக்குச்சாவடி ஒரு நிர்வாகி என சுற்றுப்பயணம் செய்து தமிழகம் முழுவதும் உள்ள 66 வாக்குச்சாவடிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறோம். பிப்ரவரி 1 முதல் 10-ந் தேதி வரை 5 வாக்குச்சாவடிக்கு ஒரு நிர்வாகி என்ற அளவில் சுற்றுப்பயணம் செய்து பணி செய்கிறோம்.

    தாமரை ஜோதி என்ற திட்டத்தில் பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டி வீட்டு முன்பு தாமரைக்கோலம், விளக்கு அமைத்து ஏற்றி வைக்கிறோம். தமிழகத்தில் பா.ஜனதா சிறப்பான அடித்தளத்தை அமைத்துள்ளது. பிரதமர்மோடி மதுரைக்கு வருவதையொட்டி 18-ந்தேதி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து 20-ந்தேதி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி வருகிறார். தமிழகத்திற்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகள் கருப்புகொடி காட்டுவோம் என்பது சரியல்ல.

    கொடநாடு சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் மீதுள்ள குற்றச்சாட்டு குறித்து சட்ட ரீதியான விசாரணைக்கு பிறகு உண்மை தெரியும். பொய் குற்றச்சாட்டு சுமத்தி ஒரு ஆட்சியை கலங்கப்படுத்த முடியாது. நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முடியாது. மு.க.ஸ்டாலின் உண்மை என்கிறார். அது அவர் தரப்பு. அ.தி.மு.க.வினர் பொய் என்கின்றனர். இருவருமே இது தொடர்பாக தமிழக கவர்னரை சந்தித்துள்ளனர். அது அவர்கள் உரிமை. எது உண்மை என சட்ட ரீதியாக தீர்வு ஏற்படுத்தப்படும்.

    கஜா புயலுக்கு நிவாரண உதவி சரியாக வழங்கப்பபடாத நிலையில் பொங்கலுக்கு தமிழக அரசு ரூ.1,500 கோடி வரை ஒதுக்கி ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு கொடுத்ததை தவறு என கூற முடியாது. உதவி செய்வது நல்ல திட்டம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது திருச்சி மாவட்ட தலைவர் தங்க.ராஜையன் உள்பட பலர் உடனிருந்தனர். #tamilisai #pmmodi #gajacyclone

    பிரதமர் தமிழகம் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்ற வைகோவின் சவாலை ஏற்க தயார் என்று மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #PonRadhakrishnan #Vaiko
    கோவை:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மிகப்பெரிய சதிச் செயல் தனக்கு எதிராக நடத்தப்பட்டதை கண்டித்து தி.மு.க.வில் இருந்து வெளியேறினார். அந்த சதிச்செயல் செய்தவர்களை அரசியலில் இருந்து ஓய்வுபெற வைக்க சபதம் புரிந்து, தமிழகத்தை காப்பாற்ற போகிறேன் என ம.தி.மு.க.வை உருவாக்கினார். இன்று என்ன நிலை உருவாகி உள்ளது என அவருக்கு தான் தெரியும்.

    வைகோ தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி எந்த தீய சக்திக்கு எதிராக போராடுவேன் என வெளியே வந்தாரோ, அந்த தீய சக்திக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் களத்தில் இறங்கி உள்ளார். வைகோ மீதான நம்பகத்தன்மையை இது கேள்விக்குறியாகவும், கேலிக்குறியதாகவும மாற்றி உள்ளது.


    பிரதமர் வந்தால் கருப்புக் கொடி காட்டுவோம் என்ற வார்த்தைகள் யாரையோ திருப்தி செய்யவும், அரசியல் ரீதியான ஆதாயம் தேடுவதற்காகவும் சொல்லி உள்ளார். எதுவாக இருந்தாலும் இந்த சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    பிரதமர் தமிழகம் வருவார், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் தருவார். எந்தவித போராட்டத்தையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். தேவையற்ற முறையில் வார்த்தைகளை கூற வேண்டாம் என நான் வேண்டுகோள் வைக்கிறேன்.

    யாரையோ திருப்திபடுத்த, யாரையாவது அவமானப்படுத்த வேண்டாம். அது தமிழகத்தில் நடக்காது. அவருடைய பேச்சு ம.தி.மு.க. தலைவர்களை தலைகுனிய வைத்துள்ளது.

    எப்படியாவது தி.மு.க.வுடன் கூட்டணியில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு ம.தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது எனக்கு வேடிக்கையாக உள்ளது. வேண்டா விருந்தாளியாக வைகோ சென்று கொண்டிருக்கிறார். அவர் யாரை முதல்வராக்க வேண்டும் என நினைக்கிறாரோ அவரை திருப்திபடுத்த நினைக்கிறார். தி.மு.க.வில் உள்ளவர்கள் ம.தி.மு.க.வை ஏளனமாக பார்க்கின்றனர்.

    மேகதாதுவில் அணை கட்ட ஆய்வறிக்கைக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படும் வகையில் அந்த ஆய்வறிக்கை அமையாது என நம்புகிறேன்.

    மேகதாது அணைக்கு முழு எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.350 கோடி மட்டும் நிதி அளித்துள்ளதே? என்ற கேள்விக்கு, கஜா புயல் ஆய்வின் மத்திய குழு அறிக்கை இதுவரை கொடுக்கப்படவில்லை. உள்துறை இணை மந்திரியை நான் சந்தித்து பேசினேன். அவர் பிரதமரின் ஒப்புதலின் பேரில் இந்த நிதியை வழங்கி உள்ளார். கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். குழு அறிக்கை வந்தவுடன் கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்து பார்ப்போம் என்றார். #PonRadhakrishnan #Vaiko
    பாரதீய ஜனதா கட்சிக்கு எதிர் கருத்து கூறிவரும் ஸ்டாலின் புதுவை வரும் போது பா.ஜ.க. வினரால் கறுப்பு கொடி காட்டப்படும் என்று சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #mkstalin

    புதுச்சேரி:

    புதுவை மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் தலைவர்களுக்கு சகிப்பு தன்மை வேண்டும் என்று கூறி உள்ளார். அதை பாரதீய ஜனதா கட்சி வரவேற்கிறது. இனி நாராயணசாமி செல்லும் புதுவை மற்றும் பிற மாநிலங்களில் அவருக்கு எதிராக கோ‌ஷம் போட்டால் அவர் பொறுத்துக் கொள்வார் என்று நம்புகிறோம். பாரதீய ஜனதா கட்சிக்கு எதிர் கருத்து கூறிவரும் ஸ்டாலின் புதுவை வரும் போது பா.ஜ.க. வினரால் கறுப்பு கொடி காட்டப்படும்.

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சினை பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறோம். தேச விரோத சக்திக்கு தொடர்ந்து நாராயணசாமி ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் 4½ ஆண்டு கால சாதனைகளை மறைக்க மக்களை திசை திருப்பி எதிர் கட்சிகள் தொடர்ந்து வேலை செய்து வருகிறது. மேலும் தேச விரோதிகளை இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாராயணசாமி பதவிக்காக தன்மானம் அனைத்தும் இழக்கலாம் ஆனால் மற்ற தலைவர்கள் அவரை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. முதல் -அமைச்சரின் பேச்சால் தேசவிரோத சக்திகளின் புகலிடமாக புதுவை மாறி வருகிறது. பாரதீய ஜனதா கட்சியை எந்த சக்தியாலும் வீழ்த்திட முடியாது. மன்னர் ஆட்சியோ, வாரிசுஆட்சியோ, ஜாதி அரசியலோ பாரதீய ஜனதா கட்சியை நடத்தவில்லை.

    இவ்வாறு சாமிநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து முன்னணி இயக்கத்தில் செயல்பட்டு வரும் முக்கிய மாநில மற்றும் மாவட்ட தலைவர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறார்கள்.

    தற்போது புதுவையிலும் இதே போன்ற கொலை செயலை அறங்கேற்ற உள்ளதாக மத்திய உளவுத்துறை புதுவை மாநில காவல் துறைக்கு சுட்டி காட்டி வரு கிறது. புதுவையில் இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் படுகொலை செய்வதற்காக இஸ்லாமிய பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி வருவதாக புதுவை காவல் துறைக்கு மத்திய உளவுத்துறை ஒரு கோப்பு அனுப்பியுள்ளது.

    இது சம்பந்தமாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் புதுவை காவல் துறை மெத்தனமாகவும், மெண்மையான போக் கோடும் செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை என்ற அசம்பாவிதம் நடை பெறுவதற்கு முன்பு புதுவை மாநில தலைவர் சனில் குமார் அவரின் உயிரை பாதுகாக்கும் வகையில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கி அவரை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு சாமிநாதன் அறிக்கையில் கூறியுள்ளார். #mkstalin

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு கருப்பு கொடி காட்டிய பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். #BJP #AmitShah #BlackFlag
    லக்னோ:

    பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அலகாபாத்தில் உள்ள கோயிலுக்கு காரில் சென்றார்.

    துமன்கஞ்ச் என்ற இடத்தின் அருகில் அமித்ஷா கார் வந்தபோது 2 பெண்கள் உள்பட 3 பேர் திடீரென காரின் முன்னால் வந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் இருந்த கருப்பு கொடியை காட்டி அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சமாஜ்வாதி கட்சியின் மாணவர் பிரிவினர் என தெரிய வந்தது. இதுதொடர்பாக புகைப்பட காட்சிகள் சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #BJP #AmitShah #BlackFlag
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கன்னியாகுமரியில் 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தியபடி மவுன ஊர்வலம் நடத்தினர்.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி என பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரியில் 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு மவுன ஊர்வலம் நடத்தினர். கன்னியாகுமரி சின்னமுட்டம் ஆரோக்கியபுரம், வாவத்துறை, சிலுவை நகர், புது கிராமம், கோவளம், கீழ மணக்குடி, மணக்குடி, முகிலன் குடியிருப்பு, தென் தாமரைகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களும், கன்னியாகுமரி சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையை எதிர்ப்பு இயக்கத்தினரும் இதில் பங்கேற்றனர்.

    ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் கருப்புக்கொடி ஏந்தியபடி சென்றனர். ஊர்வலம் காந்தி மண்டபத்தை அடைந்ததும் அங்கு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பொதுக்கூட்டம் நடந்தது. கன்னியாகுமரி பகுதியில் உள்ள கிராமங்களில் மின்கம்பங்களிலும், வீடுகளிலும் கருப்புக் கொடி காட்டப்பட்டிருந்தது.

    கருங்கல் பஸ் நிலையம் எதிரே இன்று காலை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட் டது.

    குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குளச்சலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தலைவர் நரேந்திரதேவ் தலைமையில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் நவீன் குமார், மாநில செயலாளர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பத்மநாபபுரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நெல்சன் தலைமையில் அந்த பகுதியில் சாலைமறியிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கிளை தலைவர் முகம்மது ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுவை அருகே தமிழக கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு தயாராக இருந்த விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
    சேதராப்பட்டு:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.

    புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான சர்வம் என்ற தொண்டு நிறுவனம் புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான பூத்துறை என்ற இடத்தில் உள்ளது.

    அதை பார்வையிடுவதற்காக கவர்னர் பன்வாரிலால் வந்தார். அப்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவதற்காக திருச்சிற்றம்பலம் ரோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு இருந்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

    இந்த நிலையில் கவர்னர் சென்னையில் இருந்து பூத்துறைக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென விடுதலை சிறுத்தை கட்சியினர் காரில் வந்து பூத்துறை கிராமத்துக்கு செல்லும் நுழைவு பாதையில் குவிந்தனர்.

    அவர்கள் கருப்பு கொடி காட்டுவதற்கு தயாரானார்கள். உடனே போலீஸ் டி.எஸ்.பி. இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர்.

    அதன் பிறகு கவர்னர் சர்வம் தொண்டு நிறுவனத்துக்கு சென்று இடங்களை சுற்றி பார்த்தார்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ரேசன் கடையை அமைக்காமல் நூலகம் அமைக்கப்படுவதை எதிர்த்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சீனாபுரம் பட்டக்காரன் பாளையம் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் கட்டப்பட்டது.

    ஆனால் 2014-ம் ஆண்டு அந்த பகுதியில் ரேசன் கடை அமைப்பதற்காக இந்த கட்டிடத்தில் இருந்த நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டு ரேசன் கடை அமைப்பதற்கான மராமத்து பணிகள் நடைபெற்றது. ஆனால் இதுவரை இந்த இடத்தில் ரேசன் கடை திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த கட்டிடத்தை மீண்டும் நூலகமாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இதுவரை இந்த பகுதியில் ரேசன் கடை அமைக்காததை கண்டித்தும் பட்டக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளின் முன்பு கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    கடந்த பல வருடங்களாகவே இந்த பகுதியில் ரேசன் கடை இல்லை. இதனால் அருகில் உள்ள ஆயிக்கவுண்டன் பாளையம் சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வருகின்றோம்.

    இங்கு ரேசன் கடை அமைக்க பல முறை மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் தற்போது ரேசன் கடைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை மீண்டும் நூலகமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் அனைவரும் வீடுகளின் முன்பு கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #Tamilnews
    ×