search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bribe groom death"

    கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் தூக்கி வீசப்பட்ட புது மாப்பிள்ளை லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தை அடுத்த மேலாத்துக்குறிச்சியை சேர்ந்தவர் வில்வநாதன் மகன் முத்தமிழ்ராஜ் (29) இவர் தமிழ்நாடு குடியரசு கட்சியின் மாநில பொது செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு கடந்த அக்.28-ந் தேதிதான் திருமணம் நடந்தது. இவரது மாமன் மகன் கிருஷ்ணன்கோபி (வயது 19). இவர் திருவிடைமருதூர் அருகே மல்லபுரத்தை சேர்ந்தவர்.

    இந்நிலையில் நேற்று இரவு கிருஷ்ணன்கோபி முத்தமிழ் ராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கும்பகோணத்தில் நின்றிருந்த கிருஷ்ணன் கோபியை அழைத்து வர முத்தமிழ்ராஜ் மோட்டார் சைக்கிளில் சென்று அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது கல்லூர்-திருநல்லூர் சந்திப்பில் எதிரே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளுடன் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் முத்தமிழ்ராஜ், கிருஷ்ணன் கோபி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது கும்பகோணத்திலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற ஒரு லாரி முத்தமிழ் ராஜ் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் கிருஷ்ணன் கோபி படுகாயமடைந்தார். விபத்து ஏற்பட்டவுடன் லாரி டிரைவர் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரும் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஹேமலதா, சப்-இன்ஸ்பெக்டர் காசியய்யா மற்றும் போலீசார் முத்தமிழ் ராஜ் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணன் கோபி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருமணம் ஆகி ஒரே மாதத்தில் வாலிபர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×