என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bribe"

    • பணியை முறையாக செய்யாததாலும், லஞ்சம் கேட்ட புகாரிலும் சிக்கிய ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று புகார் எழுந்தது.
    • நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையராக பணியாற்றிவர் குமரிமன்னன். இவர் சரிவர தனது பணிகளை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி வாடகை பாக்கி கேட்டு ஜே.சி.பி. டிரைவர் விஜயராகவன் என்பவர் நகராட்சி அலுவலகத்தில் குடும்பத்துடன் வந்து போராட்டம் நடத்தினார். அப்போது அவர் வாடகை தொகை தர ஆணையர் குமரிமன்னன் லஞ்சம் கேட்பதாக கூறினார். இதையடுத்து அவரை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த முயன்றபோது திடீரென தன் உடல் மீது டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தனது பணியை முறையாக செய்யாததாலும், லஞ்சம் கேட்ட புகாரிலும் சிக்கிய ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று புகார் எழுந்தது.

    அதனை தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜாராம் தடையில்லா சான்று கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
    • கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகில் உள்ள விமான் நகரை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 64). இவர் தன்னுடைய மனைவி சந்திராவதிக்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்காக, தடையில்லா சான்று கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

    அப்போது தாசில்தார் வசந்த மல்லிகா மற்றும் அவருடைய கார் டிரைவர் கிருஷ்ணன் ஆகியோர் ராஜாராமிடம் தடையில்லா சான்று வழங்குவதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளனர். இது தொடர்பாக ராஜாராம் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர் பால்துரையிடம் புகார் செய்தார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயன மை தடவிய ரூ.30 ஆயிரத்தை ராஜாராம் நேற்று கோவில்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் வசந்த மல்லிகாவிடம் வழங்கினார். அப்போது தாலுகா அலுவலக வளாகத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர் பால்துரை, இன்ஸ்பெக்டர்கள் சுதா, அனிதா மற்றும் போலீசார் விரைந்து சென்று, தாசில்தார் வசந்த மல்லிகாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் கிருஷ்ணனையும் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் தாசில்தார் வசந்த மல்லிகா நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் சிறையிலும், டிரைவர் கிருஷ்ணன் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கட்டிட வரைப்பட அனுமதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்பாப்பா பாண்டி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்தவர் பொன்பாப்பா பாண்டி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்ட திட்டமிட்டார். இதற்காக கட்டிட வரைப்பட அனுமதி பெற ஊராட்சிமன்ற அலுவலகத்தை நாடினார்.

    அப்போது கட்டிட வரைப்பட அனுமதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்பாப்பா பாண்டி இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவிய பணத்துடன் இன்று காலை கீழராஜகுலராமன் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பொன்பாப்பா பாண்டி சென்றார். அங்கு ஊராட்சி மன்ற தலைவர் காளி முத்துவை சந்தித்து லஞ்ச பணத்தை கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஒரு கட்டத்தில் டிரைவர் பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் நீ கொடுத்த 100 ரூபாயை நீயே வைத்துக்கொள் என்று கூறி டிரைவரிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
    • சஸ்பெண்டான ஜேம்சுக்கு சொந்த ஊர் குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும்.

    செங்கோட்டை:

    தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் காய்கறி, வைக்கோல், கனிமவளங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்கின்றன. இதனை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி அமைக்கப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தென்காசி மாவட்டம் ஆய்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ்(வயது 55) என்பவர் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக வைக்கோல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அந்த லாரி டிரைவர் ரூ.100 லஞ்சமாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஆனாலும் ஜேம்ஸ் கூடுதலாக லஞ்சம் கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் டிரைவர் பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் நீ கொடுத்த 100 ரூபாயை நீயே வைத்துக்கொள் என்று கூறி டிரைவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் போலீஸ்காரர் ஒருவருக்கு போன் செய்து, வைக்கோல் லாரியின் பதிவெண்ணை சொல்லி, அந்த லாரிக்கு அதிக பாரம் ஏற்றியதாக வழக்கு போட்டு அபராதம் விதிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவங்களை அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனை அறிந்த தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்சை நேற்று இரவு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தார். இந்நிலையில் இன்று ஜேம்சை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கூறுகையில், வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தில் அவர் லஞ்சம் கேட்பது தொடர்பாக வீடியோ வந்துள்ளது. அதில் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சஸ்பெண்டு செய்துள்ளேன். இனி அவரிடம் விசாரணை நடத்தப்படும். அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

    சஸ்பெண்டான ஜேம்சுக்கு சொந்த ஊர் குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும். இவர் தற்போது ஆய்குடி போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    • லெனின் தர்மராஜ், சண்முகவேல் ஆகியோர் ராட்டினம் இயக்குவதற்கு அரசு துறைகளில் அனுமதி வாங்கியதாக கூறப்படுகிறது
    • சுமார் ரூ.40 லட்சம் தங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளனர்.

    தென்காசி:

    சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை சேர்ந்த லெனின் தர்மராஜ் மற்றும் ஆய்க்குடியை சேர்ந்த சண்முகவேல் ஆகியோர் கோவில் விழா காலங்களில் பொழுது போக்கிற்காக ராட்டினம் அமைத்து அதன் மூலம் தொழில் செய்து வந்தனர்.

    இந்நிலையில் வாசுதேவ நல்லூரில் உள்ள சிந்தாமணிநாதர் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்கு ராட்டினம் இயக்குவதற்கு அரசு துறைகளில் அனுமதி பெற்று, முன்கட்டணம் உள்ளிட்டவை செலுத்தி அனுமதி வாங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் பொதுப்பணி துறையை சேர்ந்த சில அதிகாரிகள் தங்களுக்கு பணம் மட்டுமே ராட்டினத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்ததாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    இதுதொடர்பாக ராட்டின உரிமையாளர் சண்முகவேல் கலெக்டர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்துள்ளார். அதில், ராட்டினம் அமைக்க அனுமதி வழங்குகிறோம் என்ற பெயரில் அதிகாரிகள் அலைக்கழித்ததாகவும், இதனால் சுமார் ரூ.40 லட்சம் தங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை டாக்டரிடம் கொடுக்க சென்றனர்.
    • டாக்டர் ஷெர்ரி ஐசக் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இதையடுத்து அவர் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    விபத்தில் அந்த பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷெர்ரி ஐசக்கை பெண்ணின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர்.

    அப்போது அவர், அறுவை சிகிச்சை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் லஞ்சம் கொடுக்க மறுத்தனர். இதனால் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் டாக்டர் ஷெர்ரி ஐசக் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் லஞ்சம் கேட்பது குறித்து திருச்சூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜிம்பாலிடம் பெண்ணின் குடும்பத்தினர் புகார் செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை டாக்டரிடம் கொடுக்க சென்றனர்.

    ஒட்டுப்பாறையில் உள்ள டாக்டர் ஷெர்ரி ஐசக் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கிருந்த டாக்டரிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனர். அதனை டாக்டர் ஷெர்ரி ஐசக் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதையடுத்து முழங்குனத்துகாவில் உள்ள டாக்டரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்த ரூ15.25 லஞ்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய லஞ்சம் வாங்கி சிக்கிய டாக்டர் ஷெர்ரி ஐசக் தனது துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனபால், அலுவலக கட்டணம் ரூ.121 என்றும், ஒரு வில்லங்க சான்றுக்கு ரூ. 1000 செலவாகும் எனவும் தெரிவித்துள்ளாா்.
    • உரையாடல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    அவிநாசி:

    திருப்பூா் மாவட்டம், அவிநாசி சாா்பதிவாளா் அலுவலகத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தவா் தனபால். இவரது அலுவலகத்துக்கு வில்லங்க சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்த அவிநாசியை சோ்ந்த நபா், தலைமை எழுத்தா் தனபாலை அணுகி விண்ணப்பிப்பதற்கான தொகை குறித்து கேட்டுள்ளாா்.

    அதற்கு தனபால், அலுவலக கட்டணம் ரூ.121 என்றும், ஒரு வில்லங்க சான்றுக்கு ரூ. 1000 செலவாகும் எனவும் தெரிவித்துள்ளாா். மேலும் இந்த ஆவணத்தில் 20 தாள்கள் இருப்பதால் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வேண்டும் என கேட்டுள்ளாா். அப்போது அந்த நபா், 'வீட்டுக்கு சென்று பணத்தை எடுத்து வருகிறேன்' என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றாா். இந்த உரையாடல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இது குறித்து அவிநாசி சாா்பதிவாளா் கூறுகையில், 'இது தொடா்பாக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உயா் அலுவலா்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம் என்றாா். இந்நிலையில் கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவா் சாமிநாதன், வைரலான வீடியோ பதிவின் அடிப்படையில் தலைமை எழுத்தா் தனபாலை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டாா். இது தொடா்பாக துறைரீதியான விசாரணை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலத்தின் உரிமையாளர் அப்துல்லா சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல்படி அப்துல்லா முன்பணத்தை வழங்குவதாக கூறி நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரங்கநாதனிடம் கொடுத்தார்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள இலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சீவாடி ஊராட்சி. இதன் ஊராட்சி தலைவராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரங்கநாதன் உள்ளார்.

    சீவாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சென்னையை சேர்ந்த அப்துல்லா என்பவர் நிலம் வாங்கி இருந்தார். அந்த நிலத்தை வீட்டுமனை பிரிவுகளாக மாற்றுவதற்காக ஊராட்சியின் அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார்.

    அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், அந்த வீட்டு மனை பிரிவாக மாற்ற அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ.25 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலத்தின் உரிமையாளர் அப்துல்லா சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    லஞ்சஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல்படி அப்துல்லா முன்பணத்தை வழங்குவதாக கூறி நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரங்கநாதனிடம் கொடுத்தார்.

    அதனை ரங்கநாதன் வாங்கியபோது மறைந்து இருந்த சென்னையில் இருந்து வந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுனுக்கு கீழ் தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் முழுமையாக தள்ளு படி செய்து கடந்த 2021 ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
    • பேளுக்குறிச்சி கூட்டுறவு சடன் சங்கத்தில் மொத்தம் 311 நகைக்கடன் காரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக கண்டறியப்பட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கர்ணன், கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது-

    சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கோவிந்தராஜ் (55) என்பவர் கடந்த 2021 ஆண்டு முதல் பொறுப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுனுக்கு கீழ் தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் முழுமையாக தள்ளு படி செய்து கடந்த 2021 ல் தமிழக அரசு உத்தரவிட்டது. 2021 மார்ச் 31-ந் தேதி வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் இந்த சலுகை என அரசு அறிவித்திருந்தது.

    பேளுக்குறிச்சி கூட்டுறவு சடன் சங்கத்தில் மொத்தம் 311 நகைக்கடன் காரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக கண்டறியப்பட்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் செயலாளராக (பொறுப்பு) பணியாற்றிய கோவிந்தராஜ் சங்க உறுப்பினர் யுவராணியிடம் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அவரது பெயரில் 29.1.2021 ந் தேதியில் 30 கிராம் தங்க நகையை வைத்து பெறப்பட்ட 99 ஆயிரம் கடனை தள்ளுபடி செய்து தருவதாக கூறி உள்ளார். மேலும் அதே சங்கத்தில் நகை கடன் பெற்றிருந்த கீர்த்தனா, சீனிவாசன், சந்திரா, பெருமாள், மற்றும் சிலம்பரசன் ஆகியோரிடமும் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் கந்த சாமி என்பவரிடம் நகைக்கடன் தள்ளுபடி செய்ய கடந்த 28.3.2022 அன்று ரூ.1500 லஞ்சமாக பெற்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த புகார் குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. சுபாஷினி விசாரணை நடத்தினார். இதையடுத்து கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இறங்கி உள்ளனர். 

    • பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி தீபா (43) கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜெகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை நேற்று முன்தினம் கைது செய்து சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
    • விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் 2023-24-ம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் முடிந்தது.

    இதில் முதல்கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பித்த பாடப்பிரிவு கிடைக்காதபோது, முதலில் கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர்.

    இதன் பின்னர் அடுத்தடுத்த கலந்தாய்வுகளின்போது அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் காலியிடம் இருந்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு அந்த பாடப்பிரிவிற்கு மாறி உள்ளனர்.

    இவ்வாறு ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாறுவதற்காக தாவரவியல் துறை பேராசிரியர் ரவி, மாணவர்களிடம் கூகுள்பே மூலமும், ரொக்கமாகவும் பணம் வாங்கியதாக கடந்த 14-ந்தேதி குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத் தொடர்ந்து கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய செல்போன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவு, கல்லூரி கல்வி இயக்குனரகம், தமிழக டி.ஜி.பி ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் புகார் பதிவு செய்து உள்ளனர்.

    மேலும் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இதையடுத்து கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் கலைச்செல்வி கடந்த வாரம் ஊட்டி அரசு கலைக் கல்லூரிக்கு நேரில் வந்து 30 மாணவ-மாணவிகள், 4 பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி முதல்வரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

    இதன்பின்னர் விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

    இதற்கிடையே ஊட்டி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதியில் இடம் கிடைக்க கல்லூரி முதல்வர் பணம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனியிடம் ஒரு மாணவர் பிரவுன் கவரை வழங்குகிறார். அந்த கவரில் ரூ.10 ஆயிரம் பணம் இருந்ததாக சொல்லப்படுகிறது. மாணவரை பார்த்து சீக்கிரம் கொடுத்து விடுங்கள். அப்போது தான் இடம் கிடைக்கும் என கல்லூரி முதல்வர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி மற்றும் தாவரவியல் துறை பேராசிரியர் ரவி ஆகிய 2 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கான நடவடிக்கையை உயர்கல்வித்துறை எடுத்துள்ளது.

    • லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் கொடுத்தார்.
    • பாலமுரளி இதுவரை யார் யாரிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கி உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காளையார் கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது சகோதரி ஜானகி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலம் கூட்டு பட்டாவாக இருப்பதால் தனது தம்பி பாலகிருஷ்ணனுக்கு பட்டா பிரித்து தர ஜானகி முடிவு செய்தார்.

    இதையடுத்து அந்த இடத்தின் பட்டாவை பிரித்து தர கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் இருவரும் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அவரும், நில அளவையரும் அந்த இடத்திற்கு சென்று நிலத்தை அளந்துள்ளனர். பின்னர் பாலமுரளி தனிப்பட்டா வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் கொடுத்தார்.

    பணத்தை பெற்றுக்கொண்ட பாலமுரளி அதை சரிபார்த்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலமுரளியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். பாலமுரளி இதுவரை யார் யாரிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கி உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×