என் மலர்
நீங்கள் தேடியது "Bribe"
- நரசிம்ம ரெட்டி 1984-ம் ஆண்டு ரூ.650 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
- தற்போது ரூ.40,000 சம்பளமாக வாங்கும் நரசிம்ம ரெட்டிக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் கிடைத்தது என விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் நரசிம்ம ரெட்டி (வயது 55). நெல்லூரில் உள்ள துணை வட்டாரப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
நரசிம்ம ரெட்டி வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரமாதேவி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நரசிம்ம ரெட்டி வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து 2 கிலோ தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ரூ 1. 1 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் முதலீடுகள், ரூ. 10 லட்சம் மதிப்பிலான பாலிசி ஆவணங்கள், நெல்லூரில் வாங்கப்பட்டுள்ள 18 வீட்டு மனை பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
அவரது மேஜையில் இருந்து ரூ.7.5 லட்சம் மதிப்பிலான ரூ.2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் ரூ.9 கோடி மதிப்பிலான பொருட்கள், பணம் கைபற்றப்பட்டுள்ளன.
கூட்டுறவு வங்கிக் கிளைகளில் உள்ள அவரது லாக்கரை திறந்து சோதனை செய்தால் மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நரசிம்ம ரெட்டி 1984-ம் ஆண்டு ரூ.650 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். தற்போது ரூ.40,000 சம்பளமாக வாங்கும் நரசிம்ம ரெட்டிக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் கிடைத்தது என விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தனது அலுவலகம் மற்றும் சோதனை சாவடிகளில் லஞ்சமாக பெற்ற பணத்தை அதிக வட்டிக்கு கொடுத்து சொத்து சேர்த்ததாக தெரிவித்துள்ளார்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெகதீஸ்வரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
- தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
நாகர்கோவில்:
இரணியல் அருகே கண்டன்விளை மட விளாகம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவருக்கு அதே பகுதியில் 7 சென்ட் விவசாய நிலம் உள்ளது.
அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றி தரக்கோரி கல் குளம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்தை பரீசிலித்த கல்குளம் துணை தாசில்தார் ருக்மணி தரிசு நிலமாக மாற்ற ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகதீஸ்வரி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ஜெகதீஸ்வரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
ஜெகதீஸ்வரி அந்த பணத்துடன் கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த துணை தாசில்தார் ருக்மணியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் துணை தாசில்தார் ருக்மணியை கையும் களவுமாக பிடித்தனர்.
பிடிபட்ட அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
மதியம் 1 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நடந்தது. இதைத்தொடர்ந்து நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள துணை தாசில்தார் ருக்மணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ருக்மணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ருக்மணியை இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
நீதிபதி அவரை வருகிற 26-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து துணை தாசில்தார் ருக்மணி தக்கலை பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த லஞ்ச விவகாரத்தில் வேறு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். துணை தாசில்தார் ருக்மணி கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.
- லோகநாதன் மேஜையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
- திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த அரசு திட்டப்பணிக்கான காசோலையை ஒப்பந்ததாரர்களுக்கு லோகநாதன்தான் வழங்கி வந்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையில் போலீசார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் பணம் அதிகமாக புரளும் என்பதை கருத்தில் கொண்டு இந்த ரகசிய சோதனை நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் கணக்கு பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்த அறையில் இருந்த துணை வட்டார வளர்ச்சி அதிகாரி (கணக்கு) லோகநாதன் மேஜையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 200 இருந்தது.
அந்த பணத்துக்கான கணக்கு விவரங்களை லோகநாதனிடம் கேட்டனர். அவரிடம் எந்தவித விவரமும் இல்லை. இதைத்தொடர்ந்து கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா கூறும்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கணக்கு பிரிவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 200, துணை வட்டார வளர்ச்சி அதிகாரியான லோகநாதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த அரசு திட்டப்பணிக்கான காசோலையை ஒப்பந்ததாரர்களுக்கு லோகநாதன்தான் வழங்கி வந்துள்ளார். அந்த காசோலையை வழங்குவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லோகநாதன் லஞ்சம் பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
- புலம்பெயர்ந்தோர் பாதுகாவலராக இந்திய வருவாய் பணி அதிகாரி சேகர் பணிபுரிந்தார்.
- சேகர் மீது, குடியுரிமை சான்றுக்கு அனுமதி வழங்க ரூ.2 கோடிக்கு லஞ்சம் வழக்கு.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் மத்திய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2007- 2009ம் ஆண்டுகளில் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலராக இந்திய வருவாய் பணி அதிகாரி சேகர் பணிபுரிந்தார்.
சேகர் மீது, குடியுரிமை சான்றுக்கு அனுமதி வழங்க ரூ.2 கோடிக்கு லஞ்சம் பெற்று அதில் சொத்துக்கள் வாங்கியதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
- 'சதி செய்தவர்களை கடவுள் காப்பாற்றட்டும்’ என்று எழுதியிருந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் செவ்வாபதியை சேர்ந்தவர் ஷாஜி(வயது51). இவர் சமீபத்தில் கேரள பல்கலைக்கழகத்தில் நடந்த பிரபலமான மார்க்கம்களி கலைவிழாவின் போட்டி நடுவர்களில் ஒருவராக இருந்தார்.
அந்த போட்டியில் முடிவுகளை அறிவிக்க லஞ்சம் வாங்கியதாக ஷாஜி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஷாஜி உள்ளிட்ட 3 பேர் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது. இதையடுத்து கலைவிழா போட்டி முடிவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மோகனன் குன்னும்மாள் நிறுத்தி வைத்தார்.
மேலும் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணைக்காக ஷாஜி உள்ளிட்ட 3 பேரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கில் ஷாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவர் உள்ளிட்ட 3 பேரையும் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் ஷாஜி தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் நேற்று இரவு பிணமாக கிடந்தார். இதனைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை நடத்தினர்.
அதில் ஷாஜி விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. காலை உணவு சாப்பிட்டுவிட்டு அறைக்குள் சென்ற ஷாஜி, அதன்பிறகு அறையை விட்டு வெளியே வரவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஷாஜி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில் தனது மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்திருக்கிறார். அவர் எழுதியிருந்த கடிதத்தில், 'நான் நிரபராதி, யாரிடமும் பணம் வாங்கவில்லை, நான் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்பது எனது அம்மாவுக்கு தெரியும். இதற்கு சதி செய்தவர்களை கடவுள் காப்பாற்றட்டும்' என்று எழுதியிருந்தார்.
லஞ்ச புகாரில் சிக்கியவர் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரு ஆவணத்திற்கு ரூ.10 வசூலித்து ரூ.5ஐ கமிஷனாகவும் எடுத்துக் கொண்டுள்ளார்.
- ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை.
5 ரூபாய்க்கு இன்று எந்த மதிப்பும் இல்லை என்று நீங்கள் கருதுவீர்கள், ஆனால் அது ஜாம்நகரில் உள்ள மோர்கண்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கணினி ஆபரேட்டரை சிறையில் அடைத்துள்ளது. விவசாயிகளுக்கு அரசு வருவாய் ஆவணங்களை வழங்க ரூ.5 லஞ்சம் வாங்கியதாக நவீன்சந்திர நகும் என்பவதை லஞ்ச தடுப்புத் துறை கைது செய்துள்ளது.
46 வயதான நகும், 2013ம் ஆண்டு முதல் கிராமத்தில் கணினி தொழில்முனைவோராக (VCE) இரண்டு மணி நேரம் மட்டும் பணியாற்றி வந்தார்.
பொதுவாக ஒவ்வொரு ஆவணத்திற்கும், விண்ணப்பதாரரிடம் இருந்து ரூ. 5 பெறுவதாகவும், இதில், ரூ. 3 நகுமிற்கும் ரூ. 2 அரசாங்கத்திற்கும் கொடுக்கப்படுகிறது.
ஆனால், நகும் ஒரு ஆவணத்திற்கு ரூ.10 வசூலித்து ரூ.5ஐ கமிஷனாகவும் எடுத்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கிடைத்த புகாரை அடுத்து லஞ்ச தடுப்பு துறையினர் நகுமை கைது செய்துள்ளனர்.
மேலும், நகும் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் ஏசிபி குஜராத் இயக்குனரான ஷம்ஷேர் சிங் கூறறுகையில், "லஞ்சத் தொகை சிறியதாக இருந்தாலும், கிராமப்புறங்களில் அன்றாடம் நடக்கும் ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சியை இது பிரதிபலிக்கிறது" என்றார்.
- ராம் கிரிபால் சிங் என்ற சப் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்கும் ஆடியோ இணையத்தில் வைரலானது.
- "உருளைக்கிழங்கு" என்ற வார்த்தை லஞ்ச பணத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உருளை கிழங்கை லஞ்சமாக கேட்ட சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
ராம் கிரிபால் சிங் என்ற சப் இன்ஸ்பெக்டர் ஒரு வழக்கை முடித்து வைப்பதற்கு லஞ்சம் கேட்டதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த ஆடியோவில், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் ஒரு விவசாயியிடம் 5 கிலோ "உருளைக்கிழங்கு" கேட்கிறார். அதற்கு விவசாயி என்னால் 2 கிலோ உருளைக்கிழங்கு தான் கொடுக்க முடியும் என்று பதில் சொல்கிறார். கடைசியாக 3 கிலோ உருளை கிழங்கு கொடுப்பதாக இருவரும் டீல் பேசியுள்ளனர்.
விசாரணையில், "உருளைக்கிழங்கு" என்ற வார்த்தை லஞ்ச பணத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
ஆடியோ வைரலானதை அடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ராம் கிரிபால் சிங் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த கன்னோஜ் எஸ்பி அமித் குமார் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்
- லஞ்சம் தர விருப்பம் இல்லாத நாகன் இது குறித்து தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
- நாகனிடம், முருகேசன் லஞ்ச பணத்தை பெறும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
பாலக்கோடு:
பாலக்கோடு அடுத்த நடுகுட்லானஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் நாகன்.
இவருடைய தாய் காளியம்மாளுக்கு, இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்யும் வகையில் சிக்கதோரணபெட்ட வருவாய் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் (வயது 47) என்பவரிடம் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் மனு கொடுத்தார்.
ஆனால் கிராம நிர்வாக அலுவலர், ரூ.5ஆயிரம லஞ்சம் கொடுத்தால் ஓய்வூதியம் வாங்கி தர ஏற்பாடு செய்ய முடியும் என கூறி உள்ளார்.
லஞ்சம் தர விருப்பம் இல்லாத நாகன் இது குறித்து தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி அன்று தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை நாகனிடம் கொடுத்து வி.ஏ.ஓ, கேட்ட லஞ்ச பணத்தை கொடுக்க செய்தனர்.
நாகனிடம், முருகேசன் லஞ்ச பணத்தை பெறும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை தர்மபுரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, தலைமை குற்றவியல் நடுவர் சந்தோஷ், முருகேசனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
- கோப்புகள் மீது அதிக எடை (பணம்) இருந்தால்தான் அவை வேகமாக செல்கின்றன.
- பொதுப் பணித்துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க காலக்கெடு அவசியம்.
மகாராஷ்டிரா மாநிலம் lபுனே தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த பொறியாளர் தின நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய நிதின் கட்கரி, "சாலை விபத்துகள், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நெடுஞ்சாலை திட்டங்களுக்கான தவறான திட்ட அறிக்கைகள் காரணமாக உள்ளன. அரசு அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தால்தான் வேகமாக வேலை பார்க்கின்றனர். இல்லையென்றால் ஒன்றுமே நடக்காது. நமது கட்டமைப்பில் நியூட்டன்களுக்கே அப்பாக்கள் சிலர் உள்ளனர். கோப்புகள் மீது அதிக எடை (பணம்) இருந்தால்தான் அவை வேகமாக செல்கின்றன.
நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். பொதுப் பணித்துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க காலக்கெடு அவசியம். தற்போது நடப்பதில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.
அரசு அதிகாரிகள் பற்றி நிதின் கட்கரி தெரிவித்துள்ள இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாநகராட்சியில் பணிபுரியும் திவ்யஜோதி சில ஒப்புதல் கையெழுத்து போடுவதற்கே லட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார்
- கணவர் வெளியிட்டுள்ள வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐதராபாத்தில் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக பணியாற்றி வரும் தனது மனைவி திவ்ய ஜோதி, தினமும் லஞ்சம் வாங்குவதாக கணவர் ஸ்வர்ண ஸ்ரீபத் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மாநகராட்சியில் பணிபுரியும் திவ்யஜோதி சில ஒப்புதல் கையெழுத்து போடுவதற்கே லட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார் என்றும் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டு கட்டாக வாங்கிய லஞ்சப் பணத்தினை தனது மனைவி வீட்டின் பூஜை அறை, படுக்கை அறைகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் கூறி கணவர் ஸ்வர்ண ஸ்ரீபத் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியன் திரைப்பட பாணியில் லஞ்சம் வாங்கிய மனைவியை கணவரே காட்டி கொடுத்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஏய்... நான் சொல்றதைக் கேளு. என் முன்னாடி பேரம் பலிக்காது.
- கடை நடத்துனமா வேண்டாமா? நேரடியாக எஃப்.ஐ.ஆர் போடும் அளவுக்கு உங்க கடையில் நிறைய குறைகள் இருக்கு
உத்தரப் பிரதேசத்தில் மெடிக்கல் ஷாப் கடைக்காரரிடம் பெண் மருந்து ஆய்வாளர் [Drug inspector] ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் ஷாமிலி மாவட்டத்தை சேர்ந்த மருந்து ஆய்வாளர் நிதி பாண்டே, மருந்தகம் ஒன்றில் ஆய்வு செய்தபோது உரிமையாளரிடம் லஞ்சம் கேட்கிறார்.
'ஏய்... நான் சொல்றதைக் கேளு. என் முன்னாடி பேரம் பலிக்காது. எவ்வளவு சொன்னாலும் செய். கடை நடத்துனமா வேண்டாமா? நேரடியாக எஃப்.ஐ.ஆர் போடும் அளவுக்கு உங்க கடையில் நிறைய குறைகள் இருக்கு' என்று அவர் மருந்தக உரிமையாளரிடம் லஞ்சப் பணத்துக்கு பேரம் பேசுவது பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ பரவியதை தொடர்ந்து டிசம்பர் 30 ஆம் தேதி பாண்டே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்குதல் மற்றும் பேரம் பேசுதல், வியாபாரியை அச்சுறுத்தல் மற்றும் வியாபாரத்திற்கு இடையூறு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் உ.பி. வருவாய், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் முதன்மை செயலர் பி.குருபிரசாத் இந்த பணிநீக்க உத்தரவை பிறப்பித்தார்.
இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டுகளை பாண்டே மறுத்துள்ளார். தனியார் ஊடகத்திடம் பேசிய அவர், வைரலாகும் வீடியோ முற்றிலும் போலியானது. இது வியாபாரிகளால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ. அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.
- மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
- தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் தலைமறைவானார்.
திருவாடானை:
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா குமிழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பெயரில் உள்ள சொத்திற்கு பட்டா பதிவு மாற்றம் செய்வதாக பகவதிமங்கலம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபனை சந்தித்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் ரூ.37 ஆயிரம் தனக்கு லஞ்சமாக தர வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளித்தார். இதையடுத்து அவர்கள் ரசாயனம் தடவிய ரூ.37 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினர்.
அவர் கிராம நிர்வாக அலுவலர் கூறியதன் அடிப்படையில், ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள இ சேவை மைய உரிமையாளர் அகமது ஜாப்ரின் அலியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.