search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Burning Tree"

    ஊட்டியில் பெய்த பலத்த மழையில் மின்னல் தாக்கி அரிய வகை மரம் தீப்பிடித்து எரிந்தது
    காந்தல்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூர், கோத்தகிரி, கொட நாடு பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது.

    அப்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் பிரதான பகுதியான பசும் புல்வெளிக்கு அருகில் பிரமாண்ட மரமான குரங்கு ஏறாத மரம் என அழைக்கப்படும் அரக்கேரியா பிட்வில்லி என்ற அரிய மரத்தின் மீது திடீரென மின்னல் தாக்கியது.

    இதனால் அந்த மரத்தின் அடிப்பகுதி வரை தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதில் மரம் சேதம் அடைந்தது. 150 ஆண்டுகள் பழமையான இந்த மரம் ஆஸ்திரேலியாவில் இருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டதாகும்.

    சலங்கை ஒலி உள்ளிட்ட பல திரைப்பட காட்சிகளில் இந்த மரம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    தொடர் மழை - பலத்த காற்று காரணமாக ஊட்டி -குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்ல நள்ளி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் இந்த சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த மரம் ஒரு லாரியின் மீது விழுந்ததில் லாரி சேதம் அடைந்தது. இதே போல் குன்னூர் - கோத்தகிரி சாலையில் மூன்ரோடு பகுதியில் மரம் விழுந்தது. இதனை தீயணைப்பு படையினர் அகற்றினார்கள். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

    கோவை, மேட்டுப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. கோவை நகரில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1300 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர் மட்டம் 88 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    ×