search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "businessmen kidnapping"

    காஞ்சீபுரத்தில் தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #kidnapping

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை, திருவேங்கடம் நகரில் வசித்து வருபவர் பசூல் ரகுமான் (65). தொழில் அதிபர். இவர் காஞ்சீபுரம் மேட்டுத்தெரு, ராஜவீதி பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 11 மணி அளவில் அவர் ராஜவீதியில் உள்ள சூப்பர்மார்க்கெட்டை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் தனியாக வீட்டுக்கு புறப்பட்டார்.

    காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் வந்த போது பின்னால் வந்த ஆம்னி கார் திடீரென பசூல்ரகுமான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.

    உடனே காரில் இருந்த 5 பேர் கும்பல் பசூல் ரகுமானுக்கு முதலுதவி செய்வது போல் பேச்சு கொடுத்தனர். திடீரென அவர்கள் பசூல் ரகுமானை கத்தி முனையில் மிரட்டி காரில் ஏற்றி கடத்தி சென்று விட்டனர்.

    நள்ளிரவு நேரம் என்பதால் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் கடத்தல் குறித்து உடனடியாக வெளியே தெரியவில்லை.

    இதற்கிடையே பசூல் ரகுமானின் மகன் ஜயாலுதீனின் செல்போன் எண்ணுக்கு கடத்தல் கும்பல் போன் செய்தனர். அப்போது அவரிடம், “உங்கள் தந்தை பசூல் ரகுமானை கடத்தி உள்ளோம். அவரை விடுவிக்க ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தந்தை கடத்தல் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு தகவல் தெரிவித்தார். டி.ஐ.ஜி. தேன்மொழி உத்தரவுப்படி கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    மேலும் கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதை தடுக்க காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 3 மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இச்சம்பவத்தால் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஜயாலுதினின் செல்போனுக்கு மீண்டும் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் பணம் குறித்து கேட்டனர். இதனை பதிவு செய்த போலீசார் கடத்தல் கும்பலின் இருப்பிடம் குறித்து ஆய்வு செய்தனர்.

    அவர்கள் காஞ்சீபுரத்தை அடுத்த தூசி அருகே மாமண்டூர் பகுதியில் சென்று கொண்டு இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதனை அறிந்து கடத்தல் கும்பல் அதிகாலை 3 மணி அளவில் மாமண்டூர் வயல்வெளி பகுதியில் பசூல் ரகுமானை இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    நிம்மதி அடைந்த பசூல் ரகுமான் அங்கு வசிப்பவர்களிடம் செல்போன் வாங்கி கடத்தல் கும்பல் விட்டு சென்றது குறித்து மகன் ஜயாலுதீனுக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்தார்.

    போலீசார் விரைந்து சென்று பசூல் ரகுமானை மீட்டனர். அவரிடம் கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிககை எடுத்து வருகின்றனர். #kidnapping

    ×