search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBCID inquiry"

    புழல் ஜெயில் கைதிகள் கடத்தல் கும்பலுடன் பேசி இருப்பது தெரிய வந்து தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PuzhalJail

    சென்னை:

    குற்றவாளிகள் தண்டனை அனுபவிப்பதற்காக ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது என்று செய்திகள் வெளியாகின.

    ஜெயில் கைதிகள் வசதியாக இருக்கும் படங்களும் செல்போன் மூலம் வெளியானது. லஞ்ச புகார்களும் எழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    கடந்த 3-ந் தேதி புழல் சிறையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கள்ளத்துப்பாக்கி வழக்கில் கைதாகி புழல் ஜெயிலில் இருக்கும் ஒருவரிடம் இருந்தும், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இந்த ஜெயிலில் இருக்கும் முகமது ரியாஸ் என்பவரிடம் இருந்தும் 2 நவீன ஆன்ட்ராய்டு செல்போன்களும், ஒரு சாதாரண செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், இந்த செல்போன்களை வைத்திருந்த கைதிகள், ஜெயிலில் இருந்தபடியே வாட்ஸ்-அப் மூலம் வெளி நாடுகளில் உள்ள கடத்தல் கும்பலுடன் பேசி இருப்பது தெரியவந்தது.

    இதுதவிர ஜெயிலில் இருந்தே செல்போன் மூலம் பல்வேறு சமூக விரோத செயல்களில் இவர்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 2 கைதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த கைதிகளின் செல்போன் தொடர்புகளை கண்டறிவதற்காக சி.பி.சி. ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. சைபர் குற்றப்பிரிவு போலீசார் அந்த செல்போன்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட இருவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடியாக விசாரணை நடத்த உள்ளனர். ஜெயில் கைதிகள் செல்போன் பயன்படுத்த உதவியவர்கள் குறித்தும் விசாரணை நடை பெற இருக்கிறது. #PuzhalJail

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது சுமார் 130 தோட்டாக்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக‌ சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையில் தெரிவ வந்துள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

    இந்த சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட்  போலீஸ் நிலையங்களில் பதியப்பட்ட 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு என 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

    அந்த குழுவினர் துப்பாக்கி சூடு தொடர்பான பல்வேறு ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் விசாரணையை துரிதப்படுத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபிநவ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்தார்.

    சி.பி.சி.ஐ.டி போலீசாரால் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் பெறப்பட்டுள்ள வாக்குமூலங்கள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். சம்பவம் நடந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த 2 நாட்களாக விசாரணை அதிகாரிகளான டி.எஸ்.பி.,க்களிடம் பல்வேறு கட்ட கலந்தாய்வில் ஈடுபட்டார்.



    விசாரணையின்போது துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குறித்த முழு விவ‌ரப் பட்டியல், காயமடைந்தவர் பட்டியல், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் வன்முறையில் சேதமடைந்த சொத்துக்களின் பட்டியல், தீ வைத்து எரிக்கப்பட்ட மற்றும் கல்வீசி சேதத்திற்குள்ளான வாகனங்கள் எத்தனை, அவற்றின் உரிமையாளர் யார்? என்பது தொடர்பான விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.

    அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நேற்று மாலை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபிநவ் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அரசு தரப்பு வக்கீலிடம் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் தூத்துக்குடிக்கு திரும்பி வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது சுமார் 130 தோட்டாக்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக‌ கூறப்படுகிறது.  சம்பவ இடத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆய்வு செய்து சில தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை இன்னும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாவட்ட போலீசார் ஒப்படைக்கவில்லை.  

    அவற்றை பெறுவதற்கான முயற்சியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவற்றை பெற்ற பின்னர் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி உண்மை கண்டறியும் சோதனை நடத்துகின்றனர். அதில் தான் போலீசார் விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளனரா? என்பது தெளிவாகும் என்று சி.பி.சி.ஐ.டி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×