search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cellphone damage"

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உயர்மின் அழுத்தம் காரணமாக 30 டி.வி.க்கள், செல்போன்கள் தீயில் கருகியது. சேதமடைந்த பொருட்களை பொதுமக்கள் சாலையில் வீசினர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு பகுதியை சேர்ந்தது சோழன்நகர். இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.

    நேற்று மாலை 5 மணி அளவில் இந்த பகுதியில் திடீரென்று உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் ஓடி கொண்டிருந்த டெலிவி‌ஷன்கள், கிரைண்டர்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் தீயில் கருகி எரிந்து புகையாகின. இதையறிந்து வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    உயர்மின் அழுத்தம் காரணமாக 30 டி.வி.க்கள், 5 கிரைண்டர்கள், 2 மிக்‌ஷிகள், 10 செல்போன்கள், 15 மின்விசிறிகள் தீயில் கருகி எரிந்து நாசமானது. மேலும் சார்ஜில் போடப்பட்டிருந்த 5 செல்போன் வெடித்து சிதறின.

    சேதமடைந்த டெலிவிஷன், கிரைண்டர், மிக்‌ஷி போன்றவற்றை அப்பகுதி பொதுமக்கள் சாலையில் வீசினர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் பழமையான மின்மாற்றி உள்ளது. இதன் காரணமாக இங்கு அடிக்கடி மின்அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.

    இது குறித்து அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்மின் அழுத்தம் காரணமாக வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமாகி வருகிறது. இனியும் இந்த மின்மாற்றியை மாற்றவில்லை என்றால் பெண்ணாடத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.
    ×