search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cesarean section"

    • பெண்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
    • மூன்று ஆண்டுகள் கழித்து இயற்கையான கர்ப்பத்திற்கு திட்டமிடலாம்.

    தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கிறார்கள்.

    நிபுணர்களின் கருத்துபடி சிசேரியன் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இல்லை. ஆனால் பெண்களுக்கு 3 சிசேரியனுக்கு மேல் இருக்கக்கூடாது. இது பெண்ணின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும்.

    இருந்த போதிலும் சிசேரியனில் சில சிக்கல்கள் உள்ளன. பெண்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையலாம் மற்றும் நோயில் இருந்து மீள்வதற்கும் நேரம் எடுக்கும்.


    ஆனாலும் இது ஒவ்வொரு பெண்ணின் உடலுடன் ஒப்பிடும் போது வேறுபட்டது. ஒவ்வொரு வகை சிகிச்சைக்கும் உடல் வித்தியாசமாக செயல்படும். சில பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிசேரியன்கள் ஆபத்தானதாக இருக்கலாம். சில பெண்களுக்கு 3 சிசேரியன் செய்தாலும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

    பொதுவாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து இயற்கையான கர்ப்பத்திற்கு திட்டமிடலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இது குழந்தை மற்றும் தாயின் மனநிலையை மனதில் வைத்து கூறப்படுகிறது.

    இருப்பினும் இயற்கையான கர்ப்பத்திற்கு பிறகு சில பெண்கள் 6 மாதங்களில் இரண்டாவது முறையாக கருத்தரித்து ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுப்பவர்களும் இருக்கிறார்கள்.


    ஆனால் சிசேரியன் செய்த ஒரு பெண் முக்கியமாக உடலை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். நிபுணர்களின் கூற்றுபடி சிசேரியனுக்கு பிறகு 18 முதல் 24 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு இரண்டாவது முறை கருத்தரிப்பது பற்றி சிந்திக்கலாம். 

    • சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
    • சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பானது.

    தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புபடி கடந்த ஐந்து ஆண்டுகளில் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

    * பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்வது, பணி நிமித்தம் காரணமாக குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது, 35 வயதை எட்டிய பிறகு கருத்தரிப்பது போன்றவை சிசேரியன் பிரசவத்திற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

    * உடல் பருமனும் சிசேரியன் பிரசவத்திற்கு வழிவகுக்கிறது. பி.எம்.ஐ. அளவு 25-க்கு மேல் இருந்தால் பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது சிசேரியன் பிரசவத்திற்கு காரணமாகிவிடும்.

    * சில பெண்கள் பிரசவ வலிக்கு பயந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்துக்கொள்வதற்கு விரும்புகிறார்கள்.

    * பிரசவ அறையில் அதிக நேரம் செலவிடும் சூழலும் சிசேரியனை தேர்ந்தெடுக்க காரணமாகிவிடுகிறது. குழந்தை பிறப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவை கடந்தும் பிரசவ வலி ஏற்படாதபோது, தாய்-சேய் இருவரது உடல் நலனை பாதுகாக்கும் பொருட்டு சிசேரியனை தேர்ந்தெடுக்க நேரிடுகிறது.

    சுகப் பிரசவத்திற்கு வழிமுறைகள்

    * சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பானது. பிரசவம் தொடர்பான பல்வேறு சிக்கல்களையும், ஆபத்துக்களையும் குறைக்கும்.

    * நீண்ட தூர ஓட்டப் பந்தயத்திற்கு தயாராகுவதற்கு உடலுக்கு போதுமான ஆற்றல் (ஸ்டெமினா) தேவைப்படும். பிரசவமும் அது போன்றதுதான். மாரத்தான் ஓட்டப்பந்தயத்திற்கு தயாராகுவதுபோல 10 மாத கர்ப்ப காலத்தையும் கருத வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

    * தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் இயற்கையாகவே சுக பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனினும் மருத்துவரின் ஆலோசனை பெற்று உடல் நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமானது.

    * 'ஸ்குவாட்' எனப்படும் குனிந்து நிமிரும் உடற்பயிற்சியை செய்வது பிரசவத்தை எளிதாக்கும். கால்களை நேர் நிலையில் வைத்துக்கொண்டு மூட்டுகளை நன்றாக மடக்கியபடி குனிந்து நிமிரும்போது இடுப்பு பகுதிகள் விரிவடையும். கருவில் இருக்கும் குழந்தை எளிதாக பிரசவ நிலைக்கு வருவதற்கு வழிவகுக்கும். இந்த பயிற்சியை மருத்துவ ஆலோசனை பெற்று உடற்பயிற்சியாளரின் அறிவுரையின்படி மேற்கொள்ள வேண்டும்.

    * பிரசவ காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பயிற்றுவிக்கும் மையங்கள் இருக்கின்றன. அங்கு பயிற்சி பெறுவது பிரசவத்தை எளிதாக்கும்.

    * கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமானது. உடலுக்கு போதுமான புரதம் மற்றும் ஆற்றலை வழங்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் கருப்பையை வலுவாக்க முடியும்.

    • சிசேரியன் அதிகரித்து இருப்பதாகப் பல புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
    • அவசர கால சிசேரியன்(Emergency Cesarean) என்று பெயர்.

    இயற்கையான முறையில் பிரசவம் நிகழும்போது, நேரம் அதிகமாக அதிகமாக, பிரசவ வலி அதிகரித்து, கருப்பை வாய் அகலமாக விரிந்து, குழந்தை வெளியில் வரும் அளவுக்குத் திறக்கும். இந்த மாதிரியான முன்னேற்றங்கள் ஏற்படாமல் போகும்போது, மருந்துகள் கொடுத்து இயற்கை பிரசவத்துக்கு முயற்சி செய்தபிறகும், பிரசவத்தில் சரியான முன்னேற்றங்கள் இல்லை எனும்போது, சிசேரியன் தேவைப்படும். மூன்றில் ஒரு பங்கு சிசேரியன்கள் இந்தக் காரணத்துக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.

    குழந்தைக்கு மூச்சுத்திணறல்குழந்தையின் கழுத்தைத் தொப்புள் கொடி சுற்றியிருந்தால், கருப்பையின் வாய்ப்பகுதி வழியாக முதலில் தொப்புள்கொடி வெளியில் வந்துவிட்டால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். கருவில் குழந்தையைச் சுற்றியுள்ள திரவம் மிகவும் குறைவாக இருந்தாலோ, மிகவும் அதிகமாக இருந்தாலோ, குழந்தை கருப்பையில் நெடுக்குவாட்டத்தில் படுத்திருந்தாலோ குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். அ்ப்போது இனியும் காத்திருப்பது ஆபத்து என அறியப்பட்டால், சிசேரியன் அவசியப்படலாம். பெரும்பாலான சிசேரியன்கள் இந்தக் காரணத்துக்காகவே செய்யப்படுகின்றன.

    குழந்தையின் அளவும் நிலைமையும் உயரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு இடுப்பெலும்பின் துவாரம் சற்றே குறுகலாக இருக்கும். குழந்தை அதன் வழியாகப் புகுந்து வெளியில் வர இயலாமல் போகும் அல்லது குழந்தையின் தலை பெரிதாக இருக்கும். சில நேரங்களில் குழந்தையின் தலை மேலேயும், கை, கால், பிட்டம் கீழேயும் இருக்கும் அல்லது வெளியில் வர முடியாதபடி தலை சற்றே சாய்ந்தபடி இருக்கும். இம்மாதிரியான நேரங்களில் இயற்கை பிரசவத்தில் சிக்கல்கள் தோன்றலாம் என்பதால், சிசேரியன் செய்யப்படும்.

    பிரசவ நேரத்தில் குழந்தையின் தலைக்கு முன்னால் நஞ்சுக்கொடி இருந்தால், குழந்தை வெளியில் வருவதைத் தடுத்துவிடலாம். குழந்தை வெளியில் வருவதற்கு முன்பே அது கருப்பையை விட்டுத் திடுதிப்பென்று துண்டிக்கப்படலாம். அப்போது அளவுக்கு மீறிய ரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த நிலைமைகளில் சிசேரியன்தான் கைகொடுக்கும்.

    • குழந்தை பிறந்த ஒரு வாரத்தில், ரத்தப் போக்கு குறைந்துவிடும்.
    • வயிற்றில் உள்ள புண்கள் குணமான பின்பு உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

    அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்கள் எளிதில் உடல் நலம் தேறுவதற்கான வழிமுறைகளை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு வலி இருக்கும்.

    அதிகமான ரத்தப்போக்கு, ரத்த உறைவு, வீக்கம் ஆகியவற்றால் திசுக்கள் மற்றும் தசைகள் பாதிக்கப்பட்டிருக்கும். இவை அனைத்துமே முழுமையாக குணமாகுவதற்கு குறைந்தபட்சம் 12 வாரங்களாவது ஆகும். அதாவது, அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் உடல், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு குறைந்த பட்சம் 4 முதல் 5 மாதங்கள் ஆகும்.

    நன்றாக ஓய்வு எடுக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ரத்தப் போக்கு குறைந்து நின்று விடும். பொதுவாகவே குழந்தை பிறந்த ஒரு வாரத்தில், ரத்தப் போக்கு குறைந்துவிடும். ஒரு சிலருக்கு ஒரு மாத காலம் கூட சிறிது சிறிதாக வெளியேறலாம். அளவுக்கு அதிகமாக ரத்தப் போக்கு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

    சிசேரியன் முறையால் கர்ப்பப்பையில் இருக்கும் 'யூட்ரின் தசை' நிறைய மாற்றங்களை எதிர்கொள்கிறது. எனவே அது மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். ஆகையால் முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இடைவெளி இருப்பது சிறந்தது. சிசேரியனுக்குப் பிறகு இரண்டாவது குழந்தை பெற விரும்பும் பெண்கள், மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்து தங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு குழந்தைக்குத் திட்டமிட வேண்டும்.

    அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களில் 70 சதவிகிதம் பெண்களுக்கு அடுத்து சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருக்கிறது. குழந்தை பிறந்த 6 மணி நேரத்தில் பால், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை சாப்பிட வேண்டும். அதையடுத்து திட உணவுகள் உட்கொள்ள வேண்டும். பல பெண்கள் இடியாப்பம், சர்க்கரை உள்ளிட்ட நார்ச்சத்து இல்லாத உணவுகள் சாப்பிடுகிறார்கள். அதைத் தவிர்த்து நார்ச்சத்து அதிகம் உள்ள காராமணி, கேரட், பீன்ஸ், கீரை உள்ளிட்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

    கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி, முட்டை போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சாப்பிடுவது சிறந்தது. எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, அசைவ உணவுகளை சாப்பிடலாம். தையல் போட்ட இடங்களில் தண்ணீர் பட்டால் ஏதாவது ஆகி விடுமோ? என பல பெண்கள் அச்சப்படுகின்றனர். அது தவறான கருத்து. தையல் போட்ட இடங்களில் அழுக்கு சேராதவாறு சுத்தமாக குளிக்க வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வயிற்றில் உள்ள புண்கள் குணமான பின்பு உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் கூறினார்.

    ×