search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chemical Mixed Vinayagar Statue"

    ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்து உள்ளார். #vinayagarstatue
    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறியது முதல் பெரியது வரையிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்து வழிபடுவது வழக்கம். தற்போது திருவள்ளூர் பகுதியில் அதிக அளவில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி அறிவுறுத்தியுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தியின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால், அண்மைக்காலமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட, ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் விடுவதால், நீர் நிலைகளில் மாசு ஏற்பட்டு சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது.

    எனவே, விநாயகர் சிலைகள் தயாரிப்பவர்கள் பச்சை களிமண் (சுடப்படாதது) அல்லது சுற்றுச் சூழலுக்கு உகந்த மற்றும் ரசாயனம் கலக்காத பொருள்களால் மட்டுமே விநாயகர் சிலைகளைத் தயார் செய்ய வேண்டும்.

    மேலும், தண்ணீரில் கரையக் கூடிய வர்ணங்களை மட்டுமே சிலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை, விநாயகர் சிலை தயாரிப்பவர்கள் அனைவரும் தவறாமல் பின்பற்றி, சுற்றுச் சூழல் பாதிப்பை தவிர்க்க வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்

    மேலும் விநாயகர் சிலைகளை நிறுவ முன்கூட்டியே உரிய அனுமதியினை காவல் உதவி ஆணையர்கள், சார்ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்களிடம், விநாயகர் சிலையினை வைக்க விரும்பும் நபர், அமைப்பாளர் மேற்கூறிய அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும்.

    அனுமதி பெற மனு செய்யும் பொழுது, கீழகண்ட துறைகளிடமிருந்து தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.

    1) நில உரிமையாளர்களிடமிருந்து தடையில்லா சான்று பெறுதல் வேண்டும். அரசு நிலமாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து தடையில்லா சான்று. (உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலை அல்லது சம்பந்தப்பட்ட துறை),

    2) காவல் துறையின் தடையில்லா சான்று.

    3) தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் தடையில்லா சான்று.

    4) மின் இணைப்பு எவ்வாறு பெறப்படுகிறது என்பதற்கான கடிதம் மற்றும் தற்காலிக மின் இணைப்பு தொடர்பான மின்வாரியத்தின் தடையில்லா சான்று.

    மேற்கண்ட தடையில்லா சான்றுகளுடன் காவல் உதவி ஆணையர்கள், சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்களிடம் மனு செய்யும் பட்சத்தில் உரிய பரிசீலனை செய்து, உரிய அனுமதி மேற்படி அலுவலர்களால் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #vinayagarstatue
    ×