search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • 10 நாள் பயணமாக லண்டன் சென்றிருந்தார்.
    • நேற்றிரவு சென்னை திரும்பினார்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு மே மாதம் 10 நாள் பயணமாக லண்டன் சென்றிருந்தார்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் அவர் லண்டன் சென்றதாக கூறப்பட்டது. அதன் பிறகு அவர் சென்னை திரும்பி னார்.

    இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு கடந்த 4-ந் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுபடியும் லண்டன் புறப்பட்டுச் சென்றார். 5 நாள் பயணமாக லண்டன் சென்றிருந்த அவர் நேற்றிரவு சென்னை திரும்பினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் நாளே பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு.
    • மாணவர்கள் கட்டணமின்றி அரசு பஸ்களில் சீருடையுடன் பயணிக்கலாம்.

    சென்னை:

    கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாடப் புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் வந்ததால், இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

    அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ந் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ந் தேதி வரையும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

    வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியாக இருந்ததால், 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.

    இதனிடையே கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடுமாறு எழுந்த கோரிக்கைகளை அடுத்து, 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன.

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இன்றே வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் 70 லட்சத்து 67 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதோடு, 60 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகளும், 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு புவியியல் வரைபடமும் வழங்கப்பட உள்ளன.

    கல்வியாண்டை உற்சாகமாக தொடங்க உதவும் வகையில், கல்வியாண்டின் முதல் நாளிலேயே இவை வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இவை தவிர்த்து, தமிழக அரசின் சார்பில் புத்தகப்பை, காலணி, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில் மற்றும் கிரையான்கள், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவையும், அவை அவசியப்படும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

    மேலும், புதிய இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கனவே உள்ள பழைய அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் கட்டணமின்றி அரசு பஸ்களில் சீருடையுடன் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

    • சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ந் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    எனவே, மேற்கூறிய தினங்களில் மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

    நேற்று மதியம் 1.15 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி நெல்லை மாவட்டம் நாலுமுக்கு, கோவை மாவட்டம் சோலையாறு ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 11 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. கோவை வால்பாறை, நெல்லை ஊத்து ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    தஞ்சை கீழ் அணைக்கட்டு, மயிலாடுதுறை மணல்மேடு, நெல்லை காக்காச்சி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    மேலும் கன்னியாகுமரி, திருச்சி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, தென்காசி, திருப்பூர், கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் 1 முதல் 5 செ.மீ மழை அளவு பெய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில்களின் எண்களும் 7-ல் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன.
    • பழைய எண்களை அறிவிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    பெருநகரங்களையும், சிறு கிராமங்களையும் இணைக்கும் முக்கிய ரெயில் போக்குவரத்தாக பயணிகள் ரெயில் விளங்குகிறது. கொரோனா பரவலுக்கு முன்பு தெற்கு ரெயில்வே சார்பில் 3,081 கி.மீ. தொலைவுக்கு 487 பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    கொரோனா கட்டுப்பாட்டின்போது நிறுத்தப்பட்ட இந்த ரெயில் சேவை பின்னர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் எனும் பெயரில் இயக்கப்பட்டன.

    இதனால் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.30 ஆக உயர்ந்ததால் தினசரி பயணிக்கும் ஏழை நடுத்தர மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து மெமு, டெமு, பயணிகள் சிறப்பு ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எனவும், கொரோனா கட்டுப்பாட்டுக்கு முன்பு வசூலித்த கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த முன்பதிவில்லா சிறப்பு ரெயில்களுக்கான எண்கள் வழக்கமான பயணிகள் ரெயில்களுக்கான எண்களாக மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவில் இருந்து அனைத்து கோட்ட பொதுமேலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பரவலுக்கு பின்பு அனைத்து பயணிகள் ரெயிலும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்களாக மாற்றி இயக்கப்பட்டன.

    இந்த ரெயில்களின் எண்களும் 7-ல் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன. இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் இயங்கும் அனைத்து முன்பதிவில்லா ரெயில்களின் எண்களையும் மாற்றி மீண்டும் பழைய எண்களை அறிவிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வேயில் இயங்கும் 288 பயணிகள் ரெயில்கள் மற்றும் 8 மலைப்பாதை ரெயில்களின் எண்கள் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி பழைய எண்களை கொண்டு இயக்கப்படும்.

    உதாரணமாக திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் 06728 எனும் எண்ணிலும், மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயில் 06504 எனும் எண்ணுக்கு பதிலாக 56719 எனும் எண்ணிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.
    • பிற வியாபாரிகளும் தக்காளி வாங்க வருவதால் விலை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே 2-வது வாரம் வரை கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதன்பின் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கிலோ ரூ.50 ஆக உயர்ந்திருந்தது. மழை சற்று இடைவெளி விட்ட நிலையில் தக்காளி விலை கிலோ ரூ.27 ஆக குறைந்திருந்தது.

    கடந்த ஒரு வாரமாக தமி ழகம் மற்றும் அதை ஒட்டிய கர்நாடகா, ஆந்திரா எல்லையோர பகுதிகளில் தொடர் மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இதனால் மீண்டும் தக்காளி விலை நேற்று கிலோ ரூ.50 ஆக உயர்ந்து உள்ளது. கேரட்டும் கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே இறுதி வாரத்தில் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டு வந்த பீன்ஸ், நேற்று கிலோ ரூ.70 ஆக குறைந்துள்ளது.

    மற்ற காய்கறிகளான பச்சை மிளகாய் ரூ.65, நூக்கல் ரூ.50, சாம்பார் வெங்காயம் ரூ.60, பாகற்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.28, முள்ளங்கி, பீட்ரூட் தலா ரூ.25, பெரிய வெங்காயம் ரூ.28, முருங்கைக்காய், வெண்டைக்காய் தலா ரூ.20, புடலங்காய் ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.12, கத்தரிக்காய் ரூ.10 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, "கடந்த சில தினங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது.

    தமிழகத்தில் உள் மவாட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி அனுப்பும் ஆந்திரா மற்றும் கர்காடகா மாநில எல்லையோர பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக பிற வியாபாரிகளும் தக்காளி வாங்க வருவதால் விலை உயர்ந்துள்ளது. இம்மாதம் முழுவதும் தக்காளி விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும்" என்றனர்.

    • முதல்கட்ட கலந்தாய்வு வரும் 15-ந் தேதி வரை நடக்கிறது.
    • கலந்தாய்வு அடுத்த மாதம் 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும்.

    சென்னை:

    தமிழக உயா்கல்வித் துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பி.எஸ்சி. பி.காம். பி.ஏ. என பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன.

    இதற்கான, 2024-2025-ம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப் பங்கள் குவிந்தன. அதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவா்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினா்.

    இந்தநிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் இடங்களைப் பெற்றனா்.

    இதை அடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-2025-ம் கல்வியாண்டுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. முதல்கட்ட கலந்தாய்வு வரும் 15-ந் தேதி வரை நடக்கிறது.

    தரவரிசை பட்டியல் அடிப் படையில் மாணவா்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப் படுவா். 2-ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு அடுத்த மாதம் 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும்.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந் தாய்வில் பட்டப்படிப்புக் கான மாணவா் சோ்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் ஜூலை 3-ந்தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.
    • சமீபத்தில் 'குரங்கு பெடல்' படத்தை எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்

    நடிப்பது மட்டுமல்லாமல் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.

    சமீபத்தில் 'குரங்கு பெடல்' படத்தை  எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் குரங்கு பெடல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா ஒடிடி தளம் வாங்கியுள்ளது. இப்படம் வரும் ஜூன்14 முதல் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னையில் 432 இடங்களில் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது.
    • 1 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வுக்கூடத்துக்கு சென்றுவிட வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசின் குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநில உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனிப்பட்ட உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான, போட்டித்தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர்.

    இவர்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 38 மையங்களை உள்ளடக்கி 7 ஆயிரத்து 247 தேர்வு அறைகளில் நடைபெறுகிறது. தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும்.

    தேர்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வுக்கூடத்துக்கு சென்றுவிட வேண்டும் என்று தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னையில் 432 இடங்களில் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 276 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்டு தோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயா்த்தப்பட வேண்டும்.
    • மின் கட்டண உயா்வு தொடா்பாக தமிழக அரசும் முடிவெடுக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடா்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.

    இந்த நிலையில், இந்த நிறுவனங்களின் வருவாய், நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு இல்லாமல், தொடா்ந்து இழப்புகள் அதிகரித்து வருகின்றன.

    தற்போதைய நிலவரப் படி ரூ.1.60 லட்சம் கோடி கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் மின்வாரியம் செயல்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இதன் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு மின் கட்டணம் 30 சதவீதத் துக்கும் அதிகமாக உயா்த்தப்பட்டது. இது தொடா்பான ஆணையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயா்த்த அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக ஆணையின் படி இந்த ஆண்டு ஜூலை மாதம் மின்கட்டண உயா்வு அமலாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்துக்கான பண வீக்க விகிதம் அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயா்த்த வேண்டும் என்று விதிகள் உள்ளன.

    அதன்படி, நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 சதவீதம் அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயா்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

    இது தொடா்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    'மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையொப்பம் இட்டிருப்பதால் 2027 வரை ஆண்டு தோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயா்த்தப்பட வேண்டும். வழக்கம்போல வாரியத்தின் வரவு, செலவு விவரங்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம்.

    இதுவரை எந்த அறிவுறுத்தல்களும் இல்லை. மின் கட்டண உயா்வு தொடா்பாக தமிழக அரசும் முடிவெடுக்கவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மறுசீரமைப்பு பணிகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளன.
    • பூமிக்கு அடியில் கம்பிகளை பதித்து, அடித்தளம் போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 50 வருடங்களில் ரெயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு எழும்பூர் ரெயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணிகள் ரூ.734.91 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன.

    இதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. மேலும் அங்கிருந்த மரங்களும் அகற்றப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து அடித்தளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியது. எழும்பூர் ரெயில் நிலையத்தை ஒட்டி காந்தி இர்வின் சாலை பக்கமும், பூந்தமல்லி சாலை பக்கமும் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் ஆகியவை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றன.

    இந்தப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. காந்தி இர்வின் சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக, அடித்தள கம்பிகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    ரெயில் நிலையத்தை ஒட்டி இருந்த பார்சல் அலுவலகம் இடிக்கப்பட்டுவிட்டது. இங்கு அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க அடித்தள பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கு 2 தளங்கள் வரை கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடர்பாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளன. எழும்பூர் ரெயில் நிலையத்தில் காந்தி - இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

    இதற்காக பூமிக்கு அடியில் பல அடி ஆழத்துக்கு கம்பிகளை பதித்து, அடித்தளம் போடப்பட்டுள்ளது. பூந்தமல்லி சாலை பக்கத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் வணிக வளாகத்துக்காக, கட்டிடம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்து விரைவுபடுத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • 2 ரெயில்களும் 8 பெட்டிகளை கொண்டதாக இருக்கும்.
    • 2 ரெயிலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை.

    சென்னை:

    சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை ரெயில் பெட்டிகளை தயாரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

    1955-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட இந்த ஐ.சி.எப். தொழிற்சாலையில் வந்தே பாரத் ரெயில் உள்பட பல்வேறு ரெயில் பெட்டிகள் தயாரிக் கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் 2024-2025-ம் ஆண்டுக்கான ரெயில் பெட்டிகள் தயா ரிப்பு பணியில் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை முக்கிய பங்காற்ற உள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிகவும் அதிவே கத்தில் செல்லும் 2 ரெயில்கள் அங்கு தயாரிக்கப்பட உள்ளன.

    மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரெயில்களை தயாரிப்பது தொடர்பாக கடந்த 4-ந் தேதி மத்திய ரெயில்வே அமைச்சகம் சார்பில் ஐ.சி.எப். தொழிற்சாலைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து புதிய அதிவேக ரெயில்கள் இரண்டையும் தயாரிப்பதற் கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் வேகம் 180 கி.மீ. ஆகும் புதிதாக தயாரிக்கப்பட உள்ள 250 கி.மீ.வேகம் கொண்ட 2 அதிவேக ரெயில்களும் தயாரிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அதுவே அதிவேக ரெயிலாக இருக்கும்.

    இந்த 2 ரெயில்களும் 8 பெட்டிகளை கொண்டதாக இருக்கும்.

    மத்திய ரெயில்வே அமைச்சகம் இவ்வளவு அதிவேகத்தில் செல்லும் 2 ரெயிலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்றும் பணிகள் முடிந்து ரெயில் இயக்கப்பட்டால் அது புதிய மைல் கல்லாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழை.
    • சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னையில் கடந்த 2 நாட்களாக மழைபெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திண்டுக்கல், கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, குமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×