search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child labor program"

    தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் மீட்கப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கப்பரிசை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் குழந்தைகள் மீட்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதன்படி மீட்கப்பட்டு தற்போது எஸ்.எஸ்.எல்.சி படித்து வரும் 25 மாணவ-மாணவிகளுக்கும், பிளஸ்-2 படித்து வரும் 25 மாணவ-மாணவிகளுக்கும் ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, எஸ்.எஸ்.எல்.சி மாணவ-மாணவிகளுக்கு அகராதியும், பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கால்குலேட்டரும் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ஒரு குடும்பத்தின் ஏழ்மை மற்றும் பல்வேறு காரணங்களால் சிறு வயதிலேயே குழந்தைகள் தொழிலுக்கு அனுப்பப்படுவதால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதில் இருந்து குழந்தைகளை மீட்டெடுத்து சிறப்பான கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக, அரசு பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும், குழந்தை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டு உயர்கல்வி கற்கும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 30 மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். குழந்தை தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.

    எனவே, உங்களது வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் உள்ளது என்பதை மனதில் வைத்து, உயர்கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த பணியில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மற்ற குழந்தைகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக இருப்பதோடு, குழந்தை தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் உயர்கல்வி கற்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் ஆதிநாராயணன், திட்ட மேலாளர் செல்வம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கிறிஸ்டி, லைலாம்பிகா, குழந்தைகள் பாதுகாப்பு உதவி இயக்குனர் சுடலைசெல்வம் மற்றும் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
    ×