search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinnamuttam"

    • 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
    • மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் களை கட்டத்தொடங்கிவிட்டது.

    ராமேசுவரம்:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், தடைக் காலம் நேற்று முன்தினம் இரவுடன் நிறைவடைந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 570-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    இன்று காலையில் கரை திரும்பிய மீனவர்களுக்கு சிறிய படகுகளுக்கு 250 கிலோ முதல் 300 கிலோ வரையிலும், பெரிய படகு களுக்கு 300 கிலோ முதல் 450 கிலோ வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால் மீன், நண்டு, கணவாய் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்கள் கிடைத்திருந்தன.

    61 நாட்கள் தடை காலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு ரூ.8 கோடி வரையிலான இறால் மீன், நண்டு, கனவாய் போன்றவை கிடைத்துள்ள தால் மகிழ்ச்சியடைந்தனர்.

    கன்னியாகுமரி

    மேலும் முதல் நாளான நேற்று ஒரே நாளில் 293 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதில் 4 படகுகள் பழுது காரணமாக பாதி வழியில் கரைக்கு திரும்பிவிட்டன. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மற்ற விசைப்படகுகள் இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினார்கள்.

    கரை திரும்பிய விசை படகுகளில் சீலா, வஞ்சிரம், நெய்மீன், பாறை, விளமீன், கைக்கொழுவை, நெடுவா, முட்டி, கணவாய் சூறை, கிளாத்தி, சுறா, நவரை, அயிலை போன்ற உயர்ரக மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் பிடித்துக்கொண்டு வந்த உயர்ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர்.

    இதனால் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் களை கட்ட தொடங்கிவிட்டது. கடலுக்கு சென்ற முதல் நாளே ரூ.3 கோடி மதிப்புள்ள மீன்கள் சிக்கின. இதனால் சின்னமுட்டம் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×