search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christian pastor"

    மதஉணர்வை தூண்டும் வகையில் பேசிய கிறிஸ்துவ போதகர் மோகன் சி.லாசரஸ் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கோவை:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள நாலுமாவடியை சேர்ந்தவர் மோகன் சி.லாசரஸ்.

    பிரபல கிறிஸ்தவ போதகரான இவர் ‘ஏசு விடுவிக்கிறார்’ என்ற பெயரில் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். இவர் ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் மோகன் சி.லாசரஸ் பேசியதாவது:-

    இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சாத்தான்களின் இருப்பிடம் அதிகமாக உள்ளது. வட இந்தியாவை எடுத்துக்கொண்டால் பிர்லா மந்திர், அமிர்தசரஸ் பொற்கோவில் என ஆங்காங்கே ஒரு சில இடத்தில் தான் கோவில்கள் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கோவில்கள் தான் இருக்கின்றன. இந்த கோவில்கள் சாத்தான்களின் அரண்கள்.

    தமிழகத்தில் உள்ளது போல சாத்தான்களின் அரண் எங்குமே கிடையாது. இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் இந்த அளவுக்கு சாத்தான் தன்னுடைய எல்லையை கட்டுப்படுத்தி வைத்துள்ளது. ஏன் இவ்வளவு வலுவாக உள்ளது என்பதற்கான காரணத்தை கடவுள் எனக்கு வெளிப்படுத்தி உள்ளார்.

    சமீபத்தில் காஞ்சி சங்கர மடத்திற்கு செல்லக்கூடிய வலிமையை கடவுள் கொடுத்தார். அங்கு இரண்டு பேர் உள்ளனர். பட்டுசேலை, பட்டு வேட்டியை எடுத்து யாகம் செய்து அவர்களை வணங்குகின்றனர். மனிதர்கள், மனிதர்களையே வணங்கும் பழக்கம் தான் உள்ளது. இதுபோன்ற நிறைய ரகசியங்களை தெரிந்து கொள்ள முடிந்தது என பேசி உள்ளார்.

    இந்த கூட்டம் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றது என கூறப்படுகிறது. தற்போது சமூக வலை தளங்களில் இந்த வீடியோ பரவி வரும் நிலையில் மோகன் சி.லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்து அமைப்புகள் சார்பில் பல இடங்களில் போலீஸ் நிலையயங்களில் மனு அளிக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டம் சூலூரை அடுத்த அரசூரை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிற்ப்படுத்தப்பட்டோர் பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன்(43) என்பவர் சூலூர் மற்றும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையங்களில் ஒரு புகார் கொடுத்தார். அதில் மதஉணர்வை தூண்டும் வகையில் பேசிய மோகன் சி.லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இதேபோல பொள்ளாச்சியை சேர்ந்த விஷ்வ இந்து பரி‌ஷத் மாவட்ட துணை செயலாளர் மனோசங்கர்(35) என்பவரும் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் மோகன் சி.லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.

    இந்த புகார்களின் பேரில் மோகன் சி.லாசரஸ் மீது இந்திய தண்டனை சட்டம் 153(ஏ)- மத உணர்வை தூண்டும் வகையில் பேசி சமுதாயத்தினர் இடையே விரோதத்தை ஏற்படுத்துதல், 295(ஏ)- பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×