search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleansing work"

    கலாசார திருவிழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் கல்லூரி மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் தூய்மையே சேவை இயக்கம் கடந்த 15-ந்தேதி தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதே போல் பரியத்தன் பர்வ (அனைவருக்கும் சுற்றுலா) கலாசார திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    மத்திய அரசின் இந்திய சுற்றுலா, தமிழக அரசின் சுற்றுலா துறை, தஞ்சை சுற்றுலா வளர்ச்சி குழுமம், இன்டாக் அமைப்பு சார்பில் இந்த கலாசார திருவிழா தஞ்சையில் 2 நாட்கள் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த கலாசார திருவிழா தஞ்சை பெரிய கோவிலில் நேற்று தொடங்கியது.

    இதையொட்டி தஞ்சை பெரியகோவில் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் 250-க்கும் மேற்பட்டவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து பெரியகோவிலில் இருந்து தூய்மையே சேவை என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். ஊர்வலம் பெரியகோவிலில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக அரண்மனை வளாகத்தை சென்றடைந்தது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் 1000 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் இந்திய சுற்றுலா உதவி இயக்குனர் தனியரசு, சுற்றுலா அலுவலர் இளங்கோவன், பெரியகோவில் தொல்லியல் துறை அதிகாரி சங்கர், பெரியகோவில் செயல் அலுவலர் மாதவன், இன்டாக் கவுரவ செயலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து பீரங்கிமேடை வரை தொல்லியல் அறிஞர் செல்வராஜ் தலைமையில் பாரம்பரிய நடைபயணமும், அதைத்தொடர்ந்து கண்காட்சி, கோலப்போட்டி, நையாண்டிமேளம், கொம்பு, புலியாட்டம், கும்மியாட்டம், தப்பாட்டம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், காளையாட்டம், தெருக்கூத்து போன்ற நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 
    ×