search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore youth"

    இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கோவை வாலிபர் ஆசிக் கூறியுள்ளார். #srilankablasts

    கோவை:

    கோவையில் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக கோவையை சேர்ந்த ஆசிக் உள்பட 7 பேரை கோவை வெரைட்டிஹால் போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர்.

    பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. கைதானவர்கள் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் கைதான 7 பேருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், கோவையில் கைதானவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


    கோவையில் கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன், வீடியோக்களின் அடிப்படையில் இலங்கையில் அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்திருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறினர். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில் தற்போது ஜாமீனில் இருக்கும் கோவை மரக்கடை பகுதியை சேர்ந்த ஆசிக் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய குழுவுக்கும் , எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இஸ்லாமியர்களை பயங்கரவாதியாக சித்தரிக்கவே என்.ஐ.ஏ அதிகாரிகள் முயல்கின்றனர். எங்கள் மீது சொல்லப்பட்ட குற்றச் சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் தற்போது நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளோம் .

    கைது செய்யப்பட்ட போது எங்களை அடித்து சித்ரவதை செய்து வாக்கு மூலம் வாங்கினார்கள். என்.ஐ.ஏ பதிவு செய்த வழக்கில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியில் வந்த கோபத்தில் எங்களுக்கும் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ தகவல் பரப்புகிறது.

    கைதாகி இருந்த போது என்.ஐ.ஏ அதிகாரிகள் 3 முறை காவலில் எடுத்து என்னிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் நல்ல பெயர் எடுக்க எங்கள் மீது பழியை போட பார்க்கின்றனர்.

    ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. என்னை கைது செய்த பிறகு தான் அந்த அமைப்பை பற்றி தெரிந்து கொண்டேன். இலங்கையை சேர்ந்த ஹசீப் தொடர்பான வீடியோக்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

    இஸ்லாமியர்களை பயங்கரவாதியாக சித்தரிக்க வேண்டும் என்பது மட்டுமே என்.ஐ.ஏ வின் நோக்கமாக இருக்கிறது. என்.ஐ.ஏ அதிகாரிகள் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக என்னிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. விசாரணை மேற்கொண்டால் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #srilankablasts

    ×