search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Nirmalaj"

    திருவாரூர் மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
    திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழை முன்ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க பயன்படுத்தப்படும் “வயர்லெஸ்” கருவிகளை போலீசார் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம் ஆகும். தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்ற பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், சமுதாய கூடங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    ஆறுகளில் நீர் வரத்தை கண்காணிக்க அந்தந்த பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். இந்த கட்டுப்பாட்டு அறையில் அனைத்து தகவல் தொடர்பு கருவிகளையும் வைத்திருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் நீர்வரத்து, வெளியேற்றப்படும் நீர் அளவு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆறுகள், வாய்க்கால் கரைகளின் உடைப்பு ஏற்பட்டால் அதனை அடைப்பதற்கு போதுமான மணல் மூட்டைகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    திருவாரூர் மாவட்டத்தில் 214 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டு அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மண்டல அளவில், வட்டார அளவில் அலுவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
    ×