search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Computer printers"

    ரூ. 36 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    விருதுநகர்:

    விருதுநகர் சீதக்காதி தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் (வயது 52) இவர் மூலிப்பட்டி அரண்மனை முன்பு தீபாவளி பண்டிகையையொட்டி சாலையோர துணிக்கடை அமைத்திருந்தார். தீபாவளிக்கு முதல் நாள் அங்கு ஏராளமானோர் குவிந்து துணி எடுத்தனர்.

    அப்போது ஒரு வாலிபர் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அப்துல்காதருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் வேறு ரூபாய் தரும்படி அவர் கேட்க, அந்த வாலிபர் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பிரச்சினை ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்தது கள்ள நோட்டு என தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரையும் அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் கோபிநாத் (26), சூர்யா (27) என தெரிய வந்தது. விருதுநகர் செவல்பட்டியைச் சேர்ந்த இவர்கள், அதே ஊரைச் சேர்ந்த பிளம்பர் முருகன்தான் கள்ள ரூபாய் நோட்டை கொடுத்ததாக தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் முருகனை பிடித்து விசாரித்தபோது கொக்கலாஞ்சேரியை சேர்ந்த திருவாசகம் (37) என்பவர் ரூ. 30 ஆயிரம் அளவில் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் முருகன், சூர்யா , கோபிநாத் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திருவாசகம் போலீசாரிடம் சிக்கினார்.

    மதுரையில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக திருவாசகம்தான் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். சிவகாசி அருகே உள்ள எரிச்சநத்தம் புதுக்கோட்டையைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி ராஜகோபால் (42) என்பவர்தான் திருவாசகத்துக்கு கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். அவருக்கு மதுரை துவரிமான் பகுதியைச்சேர்ந்த இளங்கோ (52) என்பவர் கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகித்துள்ளார்.

    இதன் பேரில் போலீசார் இளங்கோ, ராஜகோபால், திருவாசகம் ஆகியோரை கைது செய்தனர். இளங்கோ வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரிண்டர், மை பாட்டில்கள், மோட்டார் சைக்கிள், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அங்கு அச்சடித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 36 லட்சத்து 33 ஆயிரத்து, 950 மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர்.

    அதில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு 24 லட்சத்து 6 ஆயிரத்து 800 மதிப்பிலும், 500 ரூபாய் கள்ள நோட்டு 8 லட்சத்து 91 ஆயிரத்து 500 மதிப்பிலும், 200 ரூபாய் கள்ள நோட்டு 1 லட்சத்து 89 ஆயிரத்து 400 மதிப்பிலும், 100 ரூபாய் கள்ள நோட்டு 49 ஆயிரத்து 600 மதிப்பிலும், 50 ரூபாய் கள்ள நோட்டு 2 ஆயிரத்து 300 மதிப்பிலும் இருந்தது.

    கள்ள நோட்டுகள் தயாரிப்பில் ஈடுபட்ட கும்பல் இதனை மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக இளங்கோ உள்பட 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த ஒரு கும்பல் விருதுநகர் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழகத்தில் விட்டு கைதானது. அந்த கும்பலுக்கும், தற்போது கள்ள நோட்டு தயாரித்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இவர்கள் வேறு எங்கெல்லாம் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடடுள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் இளங்கோ போலீசாரிடம கூறுகையில், சென்னையை சேர்ந்த முருகேசன், வீரபத்திரன் ஆகியோர் குறைந்த விலைக்கு இரிடியம் வாங்கி தருவதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அதன் பிறகுதான் கள்ள நோட்டு அச்சடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×