search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress member death"

    அஞ்சுகிராமம் அருகே இன்று காங்கிரஸ் நிர்வாகி கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அஞ்சுகிராமம்:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள எட்டுகூட்டு தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 50). இவர் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவராகவும் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பதவி வகித்து உள்ளார்.

    இன்று முகூர்த்த நாள் என்பதால் திருமண வீடு, புதுமனை புகுவிழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பாலச்சந்திரனும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொள்ள இருந்தனர்.

    இந்த நிலையில் தொழில் வி‌ஷயமாக பாலச்சந்திரன் அவசரமாக நெல்லை செல்ல வேண்டியது இருந்தது. இதனால் அவர் இன்று தனது குடும்பத்தினரிடம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு புறப்பட்டு தயாராக இருக்கும்படியும், தான் காலையிலேயே நெல்லைக்கு சென்றுவிட்டு வந்துவிடுவதாகவும் கூறி உள்ளார்.

    அதன்பிறகு தனது காரில் இன்று காலை பாலச்சந்திரன் நெல்லை நோக்கி புறப்பட்டார்.

    அஞ்சுகிராமம் அருகே 4 வழிச்சாலையில் காரில் பாலச்சந்திரன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாழை தோட்டம் பகுதியில் சென்ற போது கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அதன்பிறகு அங்கிருந்த போலீஸ் தடுப்பு மீது அந்த கார் மோதியது. இதன் பிறகு தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் சாலையோரத்தில் 10 அடி பள்ளத்தில் இருந்த வாழை தோட்டத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் உருண்டு சென்ற கார் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்ததால் காரில் பயணம் செய்த பாலச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். வாழைத் தோட்டத்தில் இருந்த சகதியில் அவரது முகம் புதைந்ததால் மூச்சு திணறி அவர் உயிரிழந்து உள்ளார்.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் அஞ்சு கிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். காருக்குள் சிக்கி பலியான பாலச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து பற்றி பாலச்சந்திரனின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    அதேபோல பாலச்சந் திரன் மரணமடைந்த தகவல் காங்கிரஸ் கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த பாலச்சந்திரன் விபத்தில் மரணமடைந்ததை கேட்டதும் கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டில் திரண்டனர். மேலும் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினரும் அங்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

    மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் உறவினர்களும், கட்சி நிர்வாகிகளும் திரண்டிருந்தனர்.

    பாலச்சந்திரன் கேபிள் டி.வி. தொழிலும் நடத்தி வந்தார். இவருக்கு பூங்கோதை என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் பஞ்சாப் மாநிலத்தில் படித்து வருகிறார். 2-வது மகன் குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    ×