search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "correspondent"

    திருச்சி அருகே பள்ளி தங்கும் விடுதியில் ஏழை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் தலைமறைவானார். அவரை போலீஸ் தேடி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் கருணைபுரி இல்லம் என்ற ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கான தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதியில் தங்குவதற்கும், உணவும் இலவசம் என்பதால் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். பெரும்பாலும் ஏழை மாணவிகளே இந்த விடுதியில் அதிகம் தங்கியுள்ளனர்.

    இந்த கருணைபுரி இல்லத்தில் தர்மராஜ் (வயது 65) தாளாளராக உள்ளார். இவர் அவ்வப்போது விடுதிக்கு வந்து ஆய்வு நடத்துவார். அவ்வாறு வரும் சமயங்களில் குறிப்பிட்ட சில மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து குடிநீர் எடுத்து வரச் சொல்வது, அறையினை சுத்தம் செய்ய சொல்வது, வேண்டிய பொருட்களை எடுத்துக் கொடுக்குமாறு கூறுவது உள்ளிட்ட பணி விடைகள் செய்யுமாறு கூறுவாராம்.

    அவ்வாறு வரும் மாணவிகளிடம் அவர்களின் ஏழ்மையினை பயன்படுத்தியும், மறுத்தால் கல்வி பாதிக்கப்படும், கொலை செய்து விடுவேன் என கூறி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். பல மாணவிகள் எதிர்காலம் கெட்டுவிடும் என்பதால் சகித்துக்கொண்டு, வெளியே யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திய தர்மராஜின் பாலியல் சீண்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாளாளர் தர்மராஜ் தொழுதூர் பகுதியில் இருந்து விடுதியில் தங்கி பயின்று வரும் 8-ம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவி தாளாளரின் அறையினைவிட்டு வெறியேறி, விடுதியில் உள்ள அறைக்கு சென்று கதறி அழுதுள்ளார்.

    மேலும் வாழ்வில் விரக்தி அடைந்த மாணவி விடுதி அறையில் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். சக மாணவி கள் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவரது பெற்றோர் சிறுகனூரில் உள்ள விடுதிக்கு வந்தனர். அப்போது மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர் விட்டு கதறியபடி பெற்றோரிடம் கூறினார்.

    அப்போது விடுதியில் தங்கியுள்ள வேறு சில மாணவிகளுக்கும் விடுதி தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனை பாதிக்கப்பட்ட மாணவிகள் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருணைபுரி இல்ல தாளாளர் மீது கடுமையான சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


    தகவல் அறிந்த லால்குடி ஆர்.டி.ஓ. பாலாஜி, மண்ணச்சநல்லூர் சமூக நலத்துறை தாசில்தார் சாந்தி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து லால்குடி மகளிர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.

    விசாரணையில் விடுதியில் தங்கி பயின்று வந்த 5 மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதற்கிடையே தாளாளர் தர்மராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். மாணவிகள் விடுதியில் ஏழ்மையில் வாடும் மாணவிகளுக்கு தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×