search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cost high"

    சிட்டி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் பஸ்களில் கட்டண கொள்ளை நடப்பதாகவும் அதை தடுத்து நிறுத்த கோரியும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.#CityExpress
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    மாவட்டத்தில் ‘சிட்டி எக்ஸ்பிரஸ்‘ ‘எல்.எஸ்.எஸ்.‘ என்ற பெயர்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் பலர் இந்த பஸ்களை புறக்கணித்து கூட்டம் அதிகமாக இருந்தாலும் தனியார் பஸ்களை நாடும் நிலை உள்ளது. கட்டண கொள்ளை குறித்து அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டிருந்தார்.

    அதற்கு வட்டார போக்கு வரத்து அதிகாரி அளித்திருந்த பதிலில், ‘சிட்டி எக்ஸ்பிரஸ்‘, ‘எல்.எஸ்.எஸ்.‘ என்ற பெயரில் பஸ்கள் இயக்க அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது.

    சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் வழித்தடத்தில் ‘சிட்டி எக்ஸ் பிரஸ்‘ என்கிற பெயரில் ரூ. 17- க்கு பதிலாக ரூ. 24 கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்திட கோரி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

    இணை அமைப்பாளர் பிச்சைக்கனி தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் அழகு ஜோதி முன்னிலையில் மாவட்ட அமைப்பாளர் சாராள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மகாலட்சுமி முடித்து வைத்து பேசினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி, மாதர் சங்க முன்னாள் தலைவர் ரேணுகாதேவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகர செயலர் ஜெயகுமார், ஒன்றிய செயலர் சசிகுமார், வீர சதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கையெழுத்து வாங்கிய மனு கொடுக்கப்பட்டது. 
    ×