search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demolition occupation"

    ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தில் கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. மழைக்காலங்களில் இந்த ஆற்றங்கரையோரம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

    இதனை தடுக்க கெடிலம் ஆற்றங்கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடு மற்றும் கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் தீக்குளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை புதுப்பாளையம் காமராஜர் நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிப்பதற்காக பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

    அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதையறிந்த அந்த பகுதி பெண்கள் உள்பட ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் இன்று இடிக்கப்படும் என்று உங்களுக்கு ஏற்கனவே நோட்டீசு அனுப்பி உள்ளோம். அதன்படிதான் இன்று வந்துள்ளோம். எனவே, இந்த பணியை யாரும் தடுக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறினர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராதா (வயது 69) என்ற பெண் திடீரென்று தான் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.


    அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், ராதாவின் கையில் இருந்த மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். அந்த பெண்ணின் உடலில் தண்ணீரை ஊற்றினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது. இதனை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளை இடிக்கக்கூடாது என்று கோ‌ஷமிட்டனர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதன் பின்னர் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    ×