search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devotees dies"

    செங்கோட்டை அருகே சாலையை கடந்த அய்யப்ப பக்தர்கள் மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த மேட்டு துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் சிவபண்டாரம். இவரது மனைவி நல்லமுத்து(வயது65). இவரது உறவினர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வடக்கு காரசேரியை சேர்ந்த பேச்சிமுத்து(23). இவர்கள் தங்கள் உறவினர்களுடன் நேற்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஒரு வேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

    பின்பு இன்று அதிகாலை அவர்கள் ஊர் திரும்பினர். வேன் செங்கோட்டை அருகே கேசவபுரம் பகுதியில் வந்தபோது வேனில் இருந்தவர்கள் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கீழே இறங்கினர். வேனை டிரைவர் ரோட்டு ஓரமாக நிறுத்தினார். வேனில் இருந்து இறங்கிய பக்தர்கள் சாலையை கடந்து சென்றனர்.

    அப்போது அந்தவழியே காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு வேன் கேரளா நோக்கி சென்றது. எதிர்பாராதவிதமாக வேன் ரோட்டை கடந்த பக்தர்கள் மீது மோதியது. இதில் நல்லமுத்து, பேச்சிமுத்து உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி  போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே நல்லமுத்து பரிதாபமாக இறந்தார். பேச்சிமுத்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு பேச்சிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனின்றி பேச்சிமுத்து பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இன்று அதிகாலை பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 அய்யப்ப பக்தர்கள் பலியானார்கள். #VillupuramAccident
    மயிலம்:

    ஆந்திர மாநிலம் சத்தியவாடி பகுதியில் இருந்து அய்யப்ப பக்தர்கள் 39 பேர் கடந்த 8-ந்தேதி ஒரு பஸ்சில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் சபரிமலையில் தரிசனம் செய்து விட்டு பின்னர் சொந்த ஊருக்கு அதே பஸ்சில் புறப்பட்டனர். அந்த பஸ் இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த தசரதய்யா (வயது 66) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அவரது தம்பி ராமகிருஷ்ணன் (62) மற்றும் பஸ்சில் இருந்த 39 பேர் இடிபாட்டுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலம் இன்ஸ்பெக்டர் பால்சுதர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் சிக்கி பலியான அய்யப்ப பக்தர் தசரதய்யாவின் உடலை படத்தில் காணலாம்.

    பின்னர் அவர்கள் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே ராமகிருஷ்ணன் இறந்து விட்டார்.

    மற்ற 38 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்களில் சிலர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×