search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmalingeswarar temple"

    • இன்று மாலை ஏற்றப்படுகிறது.
    • 3 நாட்கள் தீபம் எரிவதற்காக பக்தர்கள் பசு நெய் வழங்கி வருகின்றனர்.

    குனியமுத்தூர்

    கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் அடுத்த மதுக்கரையில் பழமை வாய்ந்த தர்ம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று மாலை 6 மணி அளவில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இதில் கிட்டத்தட்ட 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதாமாதம் பவுர்ணமி தினத்தன்று கிரிவலத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழக்கமாக கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் நாளை பகல் கிரிவலம் நடைபெறுகிறது. வருடம் தோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று ஒரு லட்சம் பக்தர்கள் வருவது வழக்கம். மேலும் மகா சிவராத்திரியும் இக்கோவிலில் விமர்சையாக நடைபெறும். பிரதோஷ வழிபாடுகளும் சிறப்பாக நடக்கும்.1000 படிகள் ஏறி உச்சியில் சென்று தர்மர் சிவனை வழிபட்டார் என்பது வரலாறு. அந்த சமயத்தில் பீமன் கீழே காவல் காத்ததாகவும், மற்ற தம்பிகள் பாதுகாப்பாக கிரிவலம் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. தர்மர் வழிபட்ட காரணத்தால் தர்ம லிங்கேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    300 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது பசுமாட்டை காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தார். அப்போது மலை உச்சியில் சுயம்புலிங்கத்திற்கு மாடு பால் சொரிந்து கொண்டு இருந்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் தான் இந்த தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு கிராம மக்கள் படையெடுக்க தொடங்கினர். மேலும் கோவிலின் பின்புறத்தில் செல்லும் பாதை வழியாக சேர, சோழ மன்னர்களும் இங்கு வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.இக்கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீப விழா,கார்த்திகை மாதம் 16-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை 20-ந் தேதியான இன்று காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. 4.30 மணிக்கு தர்ம லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    இன்று மாலை 6 மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. நாளை காலை 4.30 மணி அளவில் தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு இரண்டாம் நாள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு மூன்றாம் நாள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 3 நாட்கள் தொடர்ந்து மலை உச்சியில் தீபம் எரிவதற்காக பக்தர்கள் பசு நெய் கோவிலுக்கு வழங்கி வருகின்றனர்.

    ×