என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking water"

    • இரவில் தொடங்கிய இந்த தகராறு காலை வரை நீடித்தது.
    • பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பும் சமாதானம் அடையவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தாவன்கரே மாவட்டம் ஜகல்பூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவருக்கும் தும்கூர் மாவட்டம் சிரா பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிவானது. இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது.

    கடந்த சனிக்கிழமை இரவு ஹிரியூர் நகரில் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன், மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது. ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். விருந்து முடியும் தருவாயில் சிலர் வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது அவர்களுக்கு கேட்டரிங் ஊழியர்கள் முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    இரவில் தொடங்கிய இந்த தகராறு காலை வரை நீடித்தது. எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பினரும் சமாதானம் அடையவில்லை.

    ஒரு கட்டத்தில் மணமகனும், மணமகளும் தகராறில் ஈடுபட்டனர். உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

    பந்தியில் தண்ணீர் பரிமாறுவதில் ஏற்பட்ட குளறுபடியால் திருமணம் நிறுத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2024க்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

     உடுமலை :

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வரும், 2024க்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

    கிராமப்புற வீடுகளில் முழுமையாக செயல்படும் குடிநீர் குழாய் இணைப்பை 62 சதவீத வீடுகள் பெற்றுள்ளன என மத்திய நீர்வளத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 799 வீடுகள் உள்ளன.கடந்த ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 77 கிராம ஊராட்சிகளில் 25 ஆயிரம் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது.நடப்பாண்டு ஜல் ஜீவன் திட்டம் மட்டுமின்றி 14 மற்றும் 15வது நிதிக்குழு மானிய நிதி திட்டம், குடிநீர் வடிகால் வாரிய திட்டம் மற்றும் மாநில அரசின் பிற திட்டங்கள் என அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி ஊக்குவிக்கப்படுகிறது.

    இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜல் ஜீவன் திட்டம் மற்றும் பிற ஒருங்கிணைந்த மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 729 வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் சில புதிய திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது.மீதமுள்ள 77 ஆயிரத்து 70 வீடுகளுக்கு வரும் ஆண்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 2024ல் முடிக்கப்பட வேண்டிய இலக்கு 2023ல் முடிக்கப்பட்டு விடும் வகையில் செயலாற்றி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வீட்டு வரி குடிநீர் வரி மற்றும் இதர வரி வகைகளை அனைவரும் செலுத்த வேண்டும்.
    • வேளாண்மை திட்ட பணிகளை பற்றி எடுத்து கூறி பயனாளிகளின் பட்டியலை கிராம சபை பார்வைக்கு வைத்தனர்.

    கபிஸ்தலம்:

    ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு கபிஸ்தலம் பகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன

    கபிஸ்தலம் பகுதியில் கபிஸ்தலம், மேல கபிஸ்தலம், சருக்கை, உம்பளப்பாடி, ராமானுஜபுரம், சத்திய–மங்கலம், உமையாள்புரம், தியாக சமுத்திரம், அலவந்திபுரம், ஓலைப்பாடி, கொந்தகை, ஆதனூர், திருவைகாவூர், துரும்பூர், கூனஞ்சேரி, திருமண்டங்குடி, உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை வகித்தனர். மேல கபிஸ்தலம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தஞ்சாவூர் வேளாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் பால சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வேளாண்மை திட்டப் பணிகளை பற்றி எடுத்துக் கூறி பயணாளிகளின பட்டியலை கிராம சபை பார்வைக்கு வைத்தனர்.

    கபிஸ்தலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், சரவண பாபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், ஆனந்தராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் 2022 -23 ஆம் ஆண்டுக்கான வீட்டு வரி குடிநீர் வரி மற்றும் இதர வரி வகைகளை அனைவரும் செலுத்த வேண்டும் எனவும் உள்ளாட்சி தினத்தில் கிராம சபை நடத்த அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

    • மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.
    • எம்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    பல்லடம் :

    கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது சித்தம்பலம்,பருவாய், கரடிவாவி,மல்லேகவுண்டம்பாளையம், புளியம்பட்டி,கே கிருஷ்ணாபுரம்,வடுகபாளையம்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்காததால் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும் இந்த ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், மக்கள் தொகை அடிப்படையில் அத்திக்கடவு குடிநீர் அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து நடராஜன் எம்.பி. 5-ந் தேதி அன்று குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தார். அதன்படி கோவையிலுள்ள நடராஜன் எம்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் சித்தம்பலம், புளியம்பட்டி, கோடாங்கிபாளையம் மல்லேகவுண்டம்பாளையம், கரடிவாவி பருவாய் உள்ளிட்ட ஊராட்சி தலைவர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் விநியோகத்தை அதிகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். கூட்டத்தில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி,பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • இரண்டாவது குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் மராமத்து மற்றும் சீரமைப்புப்பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.
    • வெள்ளிக்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை ,மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகி க்கப்பட்டு வருகிறது. அதன்படி, குடிநீர் விநியோகம் செய்யப்படும் இரண்டாவது குடிநீர் திட்டல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் மராமத்து மற்றும் சீரமைப்புப்பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. அதனால் 2 வது குடிநீர் திட்டத்தில்குடிநீர் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    எனவே, திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1-க்கு உட்பட்ட வார்டு 1, 13, 14 மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு 44, 45, 50, 51 மற்றும் மண்டலம் 4-க்கு உட்பட்ட வார்டு 52, 55 ஆகிய பகுதிகளில் நாளை மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    • கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படுவதில்லை.
    • குடிநீர் வினியோகத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொத்தமங்கலம் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக ராஜகொத்தமங்கலம், சிதம்பரகொத்தமங்கலம், பெரிய கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படுவது இல்லை என கூறியும், குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரியும் கிராம மக்கள் திடீரென காலிக்குடங்களுடன் பள்ளங்கோவில் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது குடிநீர் வினியோகத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன்பேரில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி -மன்னார்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பல்லடம் அருகே உள்ள கரடிவாவி ஊராட்சியில் சுமார் 4000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • பள்ளி நேரங்களில் மாணவ, மாணவியருக்கு போதுமான பஸ் வசதி இல்லை. எனவே பஸ் வசதி செய்து தர வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே கரடிவாவியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் வினீத் கலந்துகொண்டு ரூ.41.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் வினீத்திடம் கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள கரடிவாவி ஊராட்சியில் சுமார் 4000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு மக்களின் பயன்பாட்டிற்காக சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி1.35 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதனை 4 லட்சம் லிட்டராக அதிகப்படுத்தி வழங்க வேண்டும். மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு கரடிவாவி ஸ்ரீநகர் பகுதியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கவேண்டும். அதே போல குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய வேண்டும். பள்ளி நேரங்களில் மாணவ, மாணவியருக்கு போதுமான பஸ் வசதி இல்லை. எனவே பஸ் வசதி செய்து தர வேண்டும். மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
    • தெருக்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் திருடர்கள் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லை யேந்தல் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

    ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தொட்டி அமைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் வருவதற்கு பல லட்சம் செலவில் தமிழக அரசு ஏற்பாடுகள் செய்யப்பட்டும் மக்கள் பயன் பெற முடியவில்லை. இங்கு மாதத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் மட்டும் காவிரி தண்ணீர் வருகிறது. மற்ற நாட்களில் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.

    இதனால் இந்தப்பகுதியில் உள்ள பெண்கள் முதல் சிறுவர், சிறுமிகள் 2 கிலோ மீட்டர் தொலைவில் இ.சி.ஆர். சாலையில் உள்ள கீழக்கரை துணை மின்நிலையம் அருகில் உள்ள குழாய்களில் இரவும், பகலுமாக தள்ளு வண்டிகளில் குடங்களை வைத்து இழுத்துச்சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை இருந்து வருகிறது.

    லாரியில் விற்கப்படும் குடம் தண்ணீர் ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். உடனடியாக குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி தில்லையேந்தல் ஊராட்சி பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்து கலெக்டர் நேர்முக உதவியாளர் ஷேக் மன்சூ ரிடம் மனு அளித்தனர்.

    இது தொடர்பாக ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-

    தில்லையேந்தல் ஊராட்சிக்கு காவிரி குடிநீர் முறையாக வருவது கிடையாது. மாதத்திற்கு 2 அல்லது 3 முறை தண்ணீர் திறந்து விடுவதால் மக்கள் குடிநீருக்காக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தில்லை யேந்தல் ஊராட்சியில் அனைத்து பகுதியில் உள்ள குடிதண்ணீர் குழாய்களில் தடையில்லாமல் குடிநீர் கிடைக்கவும், ஊரணிகள் தூர்வாரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பாலையாறு அருகே ஒரு கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்க வேண்டும்.

    ஊராட்சி பகுதிகளை சுத்தம் செய்ய கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். உடனுக்குடன் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய டிராக்டர் வசதி செய்து ஏற்படுத்தி தர வேண்டும்.

    கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் அதிகமான பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போதிய தெரு விளக்கு வசதிகள் செய்யவில்லை. தெருக்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் திருடர்கள் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு வாரத்துக்கும் அதிகமாக சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தில், சோதனை ஓட்டத்தின் போதே பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவி, காரத்தொழுவு மற்றும் மெட்ராத்தி ஊராட்சிக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இத்திட்ட குழாய்கள், திருமூர்த்தி அணையில் இருந்து மடத்துக்குளம், கணியூர் வழியாக திட்ட கிராமங்களுக்கு செல்கிறது. இதில்உடையார்பாளையம் நீர் உந்து நிலையத்தில் இருந்து, துங்காவி, மெட்ராத்தி மற்றும் காரத்தொழுவு ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்தடை, பிரதான குழாய் உடைப்பு, புதிய குடிநீர் திட்டத்துக்கான சோதனை ஓட்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்களால் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

    ஒரு வாரத்துக்கும் அதிகமாக சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீருக்காக உள்ளூர் நீராதாரங்களை தேடிச்செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: - உடையார்பாளையம் நீர் உந்து நிலையத்தில் இருந்து, மூன்று ஊராட்சிகளுக்குட்பட்ட 25 கிராமங்கள் வரை பயன்பெற்று வருகின்றன. ஒரு வாரமாக வினியோகத்தில், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

    அதிக கிராமங்கள் பயன்பெறுவதால் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகளை தவிர்க்க குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தில், சோதனை ஓட்டத்தின் போதே பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

    குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அத்திட்டத்துக்கான சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுவதால் வினியோகம் பாதித்துள்ளது. விரைவில் வினியோகம் சீராகும் என்றனர்.

    • திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி நிலுவையில் உள்ளது.
    • இதையடுத்து நகராட்சியில் வரியினங்களை செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்தும், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி நிலுவையில் உள்ளது. நகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கடை மற்றும் குத்தகை தொகையை செலுத்தகோரி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வரியினங்கள், கடை வாடகை ஆகியவற்றை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    இதையடுத்து நகராட்சியில் வரியினங்களை செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்தும், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

    • நெல்லை மாநகர பகுதியில் தற்போது ஓரளவு குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது.
    • பாளை மண்டலத்தில் சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் பெரும் அளவில் கண்டுபிடிக்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி யில் உள்ள 4 மண்டலங்களிலும் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

    குடிநீர் தட்டுப்பாடு

    இங்குள்ள மக்களுக்கு தினமும் சராசரியாக 75 முதல் 79 எம்.எல்.டி. குடி தண்ணீர் தேவைப்படுகிறது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு மாநகரப் பகுதியில் ஓடி தூத்துக்குடி மாவட்டத்தை அடைகிறது.

    இதன் காரணமாக மாநகரப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்கக் கூடாது. ஆனால் ஆற்றின் கரையை ஒட்டி அமைந்திருக்கும் கொக்கிரகுளம் பகுதியில் கூட வாரம் ஒரு முறை தான் தண்ணீர் கிடைக்கிறது என்ற நிலைதான் தற்போது நெல்லை மாநகராட்சியில் நிலவி வருகிறது.

    அரியநாயகிபுரம் திட்டம்

    மொத்த தேவையான 79 எம்.எல்.டி. தண்ணீருக்கு இதுவரை பழைய திட்டத்தின்படி 47 முதல் 48 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே மாநகரப் பகுதி மக்களுக்கு கிடைத்து வந்தது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட அரியநாயகிபுரம் திட்டத்தின் மூலம் இந்த குடிநீர் தேவை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தற்போது 65 எம்.எல்.டி. தண்ணீர் கிடைப்பதால் மாநகர பகுதியில் ஓரளவு குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது. குறிப்பாக நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம் மண்ட லங்களில் சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு பெரு மளவுக்கு குறைந்துள்ளது.

    பாளை மண்டலம்

    ஆனால் பாளை மண்ட லத்தில் மட்டும் குறிப்பாக அந்த மண்டலத்துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளில் மட்டும் குடிநீர் தட்டுப்பாடு என்பது இன்னும் தீரவில்லை.

    இதற்காக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

    ஆனாலும் தொடர்ந்து அந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

    மின்மோட்டார்கள்

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:-

    பாளை மண்டலத் துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் குடிநீரை மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுக்கிறார்கள். இது தொடர்பாக பலமுறை மனு அளித்து இருக்கிறோம்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் பெரும் அளவில் பாளை மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. 2 நாட்களுக்கு முன்பு குடிநீர் உறிஞ்சிய 59 மின் மோட்டார்கள் அந்த மண்டலத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    செயற்கை தட்டுப்பாடு

    இந்த பகுதியில் செயற்கையாக தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது. ஒரு சில குடிநீர் வால்வு ஆபரேட்டர்கள் அரசியல் பிரமுகர்களுக்கு சாதகமாக செயல்பட்டு அவர்களுக்கு தேவையான நபர்கள் உள்ள தெருக்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது.

    எனவே செயற்கை குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் கண்டுபிடித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்று ஆதங்கமாக கூறினர்.

    இது தொடர்பாக கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, பாளை பகுதியில் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதாக தகவல் கிடைத்ததால் அங்கு சிறப்பு குழு மூலமாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் 59 சட்ட விரோத மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இது போன்ற செயற்கை குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக முழுமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கம்ப்யூட்டர் மூலம் தண்ணீர் சப்ளை மேற்கொள்ள திட்டம் செயல்படுத்த உள்ளோம். முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்கல் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வார்டுக்கும் எத்தனை மணிக்கு தண்ணீர் திறந்து விடப்படும், எத்தனை மணிக்கு தண்ணீர் நிறுத்தப்படும், எவ்வளவு தண்ணீர் ஒரு வார்டுக்கு தேவை என்று அனைத்து விபரங்களும் கம்யூட்டரில் ஏற்றப்பட்டு அதன் மூலம் எவ்வித தட்டுப்பாடும் இன்றி குடிநீர் சப்ளை செய்ய ஒரு திட்டத்தை பரிசீலனை செய்து வருகிறோம்.

    இது தவிர பாளை மண்டலம் விரிவாக்கப் பகுதிகளில் மாற்று ஏற்பாடாக முறப்பநாட்டில் இருந்து வரும் குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் சப்ளை செய்வதற்கு ஒரு திட்டம் பரிசீலனையில் உள்ளது.

    விரைவில் அந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் விரிவாக்கப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறைக்கப்படும். வால்வு ஆபரேட்டர்கள் குறித்து தொடர்ந்து புகார் வந்ததால் முருகேசன், மந்திரம் என்ற 2 பேரை வேறு இடத்துக்கு மாற்றம் செய்துள்ளோம். தொடர்ந்து வேறு எந்த பகுதியிலும் இது போல் புகார்கள் வந்தால் அங்கும் வால்வு ஆபரேட்டர்கள் மாற்றம் செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டன.
    • விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் பைப்பை திறந்து துவக்கிவைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கள்ளிமேடு கிழக்கு பகுதியில் 63 குடும்பத்தினர் வசதித்து வருகின்றனர்.

    இந்த குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கும் பணி ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 350 மீட்டர் பைப் லைன் போடப்பட்டு முதல் கட்டமாக 18 குடும்பங்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார்.

    மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் பைப்பை திறந்து துவக்கிவைத்தார்.

    முன்னதாக குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து சந்தனம் - குங்கும் பொட்டுவைத்து தேங்காய் உடைக்கபட்டு தீபாரதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணை தலைவர் உத்திராபதி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர், மச்சழகன், ஊர் பிரமுகர்கள் நமசி. நாகராஜ் திவாஸ்கர் ஊராட்சி செயலாளர் பிரியங்கா, ஊராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி கஸ்தூரிபாய், ஊராட்சிமன்ற உறுப்பினர் ரேவதி தியாகராசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    ×