search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drugs controversy"

    திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தடுக்க சதி நடப்பதாக அவரது அண்ணன் பேட்டியளித்துள்ளார்.
    திருச்சி:

    கத்தார் நாட்டில் உள்ள தோகா நகரில் கடந்த மாதம் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 2.70 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

    பெங்களூருவில் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் கோமதி திருச்சி அருகே உள்ள முடி கண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்கு ஏராளமான பாராட்டுக்களும், பரிசுகளும் குவிந்தன.

    தமிழக அரசு சார்பில் மற்றும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், திரையுலக நட்சத்திரங்கள் சார்பில் நிதியுதவி வழங்கி பாராட்டு விழாக்களும் நடத்தப்பட்டு கோமதி கவுரவிக்கப்பட்டார். ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்கு சொந்த ஊரான முடிகண்டத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பதக்கம் வென்ற கோமதி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் திடீரென கோமதி மீது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அவர் ஆசிய தடகள போட்டியில் பங்கேற்றபோது நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனை முடிவு இப்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் ‘நான்ட் ரோலோன்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோமதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிக்கு முன்பும், பின்பும் ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்படும். கோமதிக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தோல்வி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதாவது ‘ஏ’ மாதிரி ஊக்க மருந்து சோதனையில் அவர் தோல்வியை தழுவியுள்ளார். அடுத்த நிலை சோதனையான ‘பி’ மாதிரி சோதனையிலும் அவர் ஊக்க மருந்தை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கம் பறிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் அவர் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய விபரம் குறித்து அவருக்கு ஈமெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊக்க மருந்து சர்ச்சையை வீராங்கனை கோமதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது வாழ்க்கையில் ஒரு போதும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது இல்லை என்ற அவர் ‘பி’ மாதிரியை சோதிக்க வேண்டும் என்றும் மேல்முறையீடு செய்துள்ளார்.

    சுப்பிரமணி

    வீராங்கனை கோமதி மீது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து திருச்சியில் முடிகண்டத்தில் உள்ள அவரது அண்ணன் சுப்பிரமணியிடம் கேட்டபோது அவர் இதனை முற்றிலும் மறுத்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த எனது சகோதரி கோமதி அவ்வாறு ஊக்க மருந்தை பயன்படுத்தி இருக்க வாய்ப்பில்லை. இது பற்றி நாங்கள் அவரிடம் கேட்ட போதும் அவர் அதனை திட்டவட்டமாக மறுத்தார். நாங்கள் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.

    கோமதி இதற்கு முன்பு பல போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது அடுத்த கட்ட வெற்றிக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் கோமதியின் லட்சியக்கனவு.

    இந்த நிலையில் இது போன்ற புகார்கள் கோமதியின் லட்சியத்திற்கு தடையாக அமையும். மேலும் அடுத்த கட்டமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தடுக்க நடக்கும் சதியோ என்றும் எண்ண தோன்றுகிறது. ஆனாலும் ‘பி’ பரிசோதனைக்கு அவர் இந்திய தடகள கூட்டமைப்புக்கு மேல்முறையீடு செய்துள்ளார். இதில் அவர் நிச்சயம் வெற்றி பெற்று தான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பார்.

    அதற்குள் சிலர் இதை பெரிதாக்குவது, எங்களை மன உளைச்சல் அடைய செய்துள்ளது. எதையும் இறுதி செய்வதற்குள் தவறான தகவல்களை பரப்பக்கூடாது.

    இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.
    ×