search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drummers"

    • தொழில் நலிவடைந்ததால் ஜிம்ப்ளா மேள கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.
    • தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    அபிராமம்

    தமிழகம் முழுவதும் ஜிம்ப்ளா மேளத் தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் மேளம் என்றாலே ஜிம்ப்ளா மேளம்தான் என்ற பெயர் உண்டு. கோவில் திருவிழாக்கள், எருதுவிடும் திருவிழா, இல்ல வைபவங்கள், துக்க நிகழ்ச்சிகள், கலை இரவு போன்றவற்றில் இந்த வகை மேளம் பயன்படுத்தப்பட்டது.

    காலப்போக்கில் இந்த மேளத்துக்கு மவுசு குறைந்துவிட்டது. இந்த தொழில் செய்து வந்த மேள கலைஞர்கள் தற்போது கஷ்டப்பட்டு வருகின்றனர். குடும்பத்தின் அத்தியாவசிய செலவுக்கு கூட சிரமப்படுகின்றனர். இந்த நிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்படும் ஜிம்ப்ளா மேள கலைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து ஜிம்ப்ளா மேளக்கலைஞர் ராசு கூறியதாவது:-

    எங்களது பூர்வீக தொழில் ஜிம்ப்ளா மேளம் அடிப்பதாகும். தமிழகம் முழுவதும் நாங்கள் பரவலாக இருந்து வருகிறோம். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் கீரனூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருந்து ஜிம்ப்ளா மேளத்தொழில் செய்து வருகிறோம். ஆரம்பகால கட்டத்தில் தென்மாவட்டங்களில் எல்லா விழாக்களுக்கும் ஜிம்ப்ளா மேளம்தான் தேவைப்பட்டது. காலப்போக்கில் அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் டிரம் செட், பேண்டு வாத்தியம், செண்டை மேளம் என நவீன கருவிகளுக்கு மக்கள் மாறிவிட்டனர். இதனால் பாரம்பரிய ஜிம்ப்ளா மேளத்திற்கு தற்போது மவுசு குறைந்து வருகிறது. இதனை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான மேள கலைஞர்கள் வேலையிழந்து வாடும் நிலை உள்ளது.

    இளமை காலங்களில் எப்படியும் பிழைத்துக்கொள்ளும் நாங்கள், வயதானவுடன் வாழ வழியின்றி தவித்து வருகிறோம். அழிந்துவரும் இந்த ஆதிகாலத்து கலையை மீட்டெடுத்து ஜிம்ப்ளா மேள கலைஞர்களுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×