search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "E-Naam Scheme"

    • 9 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    விளைபொருட்களை இ-நாம் திட்டத்தில் விற்பனை செய்து பயன்பெறலாம் என விவசாயிகளுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைத்து, எங்கிருந்தும் விளைபொருள்களை விற்பனை, கொள்முதல் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூா், உடுமலை, பெதப்பம்பட்டி, வெள்ளக்கோவில, மூலனூா், மடத்துக்குளம், காங்கயம், பொங்கலூா், சேவூா் ஆகிய 9 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில், ஏல நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. துல்லியமான தர அளவுகள் உறுதி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கிறது.

    மேலும், இ-நாம் திட்டத்தில் பண்ணை வாயில் வணிகம் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், விளைப்பொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி, போக்குவரத்து செலவுகளை குறைக்கும் வகையில் விவசாயிகளின் இருப்பிடத்துக்கே ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலா்கள் சென்று இ-நாம் செயலி மூலம் விளைபொருள்களை விற்பனை செய்து தருகின்றனா். இதற்கான பணமும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே, திருப்பூா் மாவட்ட விவசாயிகள் அனைவரும் அந்தந்தப் பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி இ-நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம் மூலம் விளைபொருள்களை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் முதல் முறையாக கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.
    • விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரை தரம் வாரியாக ஏலம் விடப்படுவதால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

    உடுமலை:

    தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டன. ஆனால் ஒவ்வொரு மையத்திற்கும் குறைவான கொள்முதல் இலக்கு வழங்கப்பட்டதால் பெரும்பாலான மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கொப்பரை விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை (இ - நாம்) திட்டத்தின் கீழ் வாரம்தோறும் வியாழக்கிழமை கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.

    இது குறித்து ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணி ப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:-

    தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் முதல் முறையாக கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது. இ - நாம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதால் தேசிய அளவிலான வியாபாரிகளும், உள்ளூர் வியாபாரிகளும் பங்கேற்கலாம். விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரை தரம் வாரியாக ஏலம் விடப்படுவதால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகள் வங்கிக்கணக்கில் உடனடியாக செலுத்தப்படும். விவசாயிகள், வியாபாரிகள் வருகையைப்பொறுத்து ஏல நாட்கள் அதிகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×