search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edappadi family dispute"

    எடப்பாடி அருகே மனைவியிடம் அடி தாங்க முடியாமல் கதறி அழுத ஐஸ் வியாபாரி அரசு ஆஸ்பத்திரி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    எடப்பாடி:

    எடப்பாடி அருகே உள்ள அரசிராமணி ஊராட்சிக்கு உட்பட்ட மோளக்கவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (44).

    ஐஸ் வியாபாரியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 4-வதாக தமிழரசி (38) என்ற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது அவருடன் மோளக்கவுண்டன் கொட்டாய் பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் அண்ணாமலை சரியாக வியாபாரத்திற்கு செல்லாமல் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழரசி மற்றும் அவரது உறவினர்கள் அண்ணாமலையை கண்டித்தனர். நேற்று முன்தினம் அதிகாலை அண்ணாமலைக்கும் அவரது மனைவி தமிழரசிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அண்ணாமலையை அவரது மனைவியும், உறவினர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அண்ணாமலை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அப்போது அண்ணாமலை தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை போலீசாரிடம் புகாராக தெரிவிக்க வேண்டும் என மருத்துவமனை ஊழியர்களிடம் கூறினார். அவரை பார்க்க வந்த மனைவி தமிழரசி மற்றும் அவரது தாயார், அண்ணாமலையை சமாதானம் செய்தனர். இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்ளலாம் போலீசில் புகார் வேண்டாம் எனவும் கேட்டு கொண்டனர்.


    அதில் சமாதானம் அடையாத அண்ணாமலை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் திடீரென ஆஸ்பத்திரி கட்டிடத்தின் மீது ஏறினார்.

    அப்போது மனைவி மற்றும் அவரது உறவினர்களின் அடியை என்னால் தாங்க முடியவில்லை, இதனால் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கதறினார். இதை பார்த்த அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அண்ணாமலையிடம் நைசாக பேசியபடி, மருத்துவமனை கட்டிடத்தின் மீது ஏறி அவரை மீட்க முயற்சித்தனர்.


    அப்போது அவர் தீயணைப்பு வீரர்களிடம் சார் என்னால் அடி தாங்க முடியவில்லை என்னை விட்டுவிடுங்கள், நான் செத்து விடுகிறேன் என கண்ணீர் மல்க கெஞ்சிய காட்சி காண்போரை கலங்க வைத்தது.

    அண்ணாமலையை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவரை சமாதானம் செய்து மருத்துவமனையின் பாதுகாப்பான இடத்தில் தொடர் சிகிச்சைக்காக விட்டுச்சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×