search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electrical attack"

    • ஆத்தூர் அருகே உமரிக்காடு பகுதியில் கோட்டைவாழ் அய்யன் கோவில் உள்ளது.
    • கோவிலுக்கு வரும் மின் இணைப்பு, மரத்திற்கு கீழ் செல்வதால் நிழல் தரும் மரங்களை வெட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உமரிக்காடு பகுதியில் கோட்டைவாழ் அய்யன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் சுற்றுவட்டாரங்களை மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இக் கோவிலை சுற்றி ஏராளமான மரங்கள் உள்ளது. கோவிலுக்கு வரும் மின் இணைப்பு, மரத்திற்கு கீழ் செல்வதால் நிழல் தரும் மரங்களை வெட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கு தீர்வாக கோவில் நிர்வாகம் வயரிங் செய்யும் பி.வி.சி. பைப்புகளை மின்வாரிய ஊழியர்கள் ஒத்துழைப்போடு மின் கம்பியின் உள்ளாக நுழைத்து மாட்டி விட்டது. இதனால் மரங்கள் மின்கம்பியில் உரசும் அபாயம் நீங்கியது. மின்கம்பியை சுற்றி பாதுகாப்பான பி.வி.சி. பைப் இருப்பதால் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசினால் கூட எவ்வித அபாயம் ஏற்படுவதில்லை. மரங்களை பாதுகாக்க மற்ற இடங்களிலும் அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேற்கு மாம்பலம் அருகே மின்சாரம் தாக்கி டெய்லர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் வீரமணி (47). டெய்லர். நேற்று மாலை அவர் வீட்டில் உள்ள பழு தடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர் பாராத விதமாக மின்சாரம் தாக்கி வீரமணி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வீரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயப்பேட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பிளாட்பாரம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டியதில் மின்சாரம் தாக்கியது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பவுன்ராஜ் என்ற வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.

    இதுபற்றி அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்தநிறுவனத்தின் மேற்பார்வையாளர் பாண்டியன் என்பவரை கைது செய்தனர்.

    எரியோடு அருகே பட்டதாரி வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எரியோடு:

    திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு பகுதியை அடுத்த கோவிலூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டில் நேற்று வயரிங் பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் குறிக்கோடாங்கி பட்டியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் மாணிக்கம் (வயது 29) என்பவர் ஈடுபட்டு இருந்தார்.

    இரவு மாணிக்கம் வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலை வீட்டை பார்க்க சென்ற தங்கவேல், மாணிக்கம் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது பற்றி எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. சிவக்குமார், எரியோடு இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே மின்சாரம் தாக்கி மாணிக்கம் பலியானது குறித்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் குறிக்கோடாங்கி பட்டி பொதுமக்கள் திரண்டனர்.

    இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல்- கரூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்கள். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் சிறிது நேரம் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது.

    செங்கம் அருகே மாதா கோவில் தேரில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள அல்லியேந்தல் கிராமத்தில் உள்ள தூய லூர்து மாதா கோவில் திருவிழா நடந்தது. நேற்று இரவு மின் அலங்காரம் செய்யப்பட்ட தேர் ஊர்வலம் நடந்தது. பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் தேரை இழுத்து வந்தனர். வழிநெடுகிலும் ஏராளமானோர் வழிபட்டனர்.

    வண்ணாரப்பேட்டை தெருவில் வந்தபோது தேரின் உச்சி பகுதி மின் கம்பியில் உரசியது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது.

    தேரை இழுத்து வந்த அதே ஊரை சேர்ந்த அன்பரசு (50), ஜெபராஜ் (40), ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். பிலோமின் ராஜ் (45) என்பவர் தூக்கி வீசப்பட்டார். அவர் படுகாயம் அடைந்தார். தேரில் தீப்பொறிகள் பறந்தன.

    இதனைக்கண்ட பொதுமக்கள் சிதறி ஓடினர். அங்கு கூச்சல், அலறல் சத்தம் ஏற்பட்டது. பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இறந்தவர்கள் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    பாய்ச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பிலோமின் ராஜை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பலியானவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அல்லியேந்தல் கிராமம் சோகத்தில் மூழ்கியது.

    பாய்ச்சல் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முகப்பேரில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    பழைய வண்ணாரப்பேட்டை நாராயண மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (55) பெயிண்டர். இவர் இன்று காலை கிழக்கு முகப்பேர் இளங்கோ தெருவில் புதிதாக கட்டிவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    முதல் தளத்தில் உள்ள பால்கனியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் சென்ற மின் கம்பியின் மீது கை உரசியதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஜே.ஜே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளரை விசாரித்தார்.

    செங்கோட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை காலசாமி தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராஜ்(வயது38). கூலி தொழிலாளி. இவர் நேற்றிரவு வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கினார். காற்றுக்காக மின்விசிறியை கட்டிலில் வைத்திருந்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதை யாரும் கவனிக்க வில்லை. இதனிடையே காலையில் வெங்கட்ராஜ் கட்டில் அருகே இறந்து கிடந்ததை பார்த்து அவரது வீட்டினர் கதறி அழுதனர். இதுபற்றி செங்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமழிசை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செவ்வாய்பேட்டை:

    திருமழிசையை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் வசிப்பவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி ருக்மணியம்மாள் (வயது 60). இன்று காலைஅவர் வீட்டின் வாசலில் கோலம் போடுவதற்கு வந்து நின்றார். அப்போது வீட்டின் மேலே சென்ற உயர்அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து ருக்மணியம்மாள் மீது விழுந்தது.

    இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ருக்மணியம்மாள் உயிரிழந்தார். வெள்ளவேடு போலீசார் ருக்மணியம்மாளின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய துணை பொறியாளர் விஜயசங்கர் தலைமையில் மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து மின்கம்பியை அப்புறப்படுத்தினர்.

    கும்பகோணத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் திருப்பனந்தாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (வயது55). இவர் நேற்று கும்பகோணத்திலுள்ள பழனிச்சாமி நகரை சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவரது வீட்டில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது கம்பி இறக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சார வயரில் உரசியதால் தூக்கி வீசப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.

    இது சம்பந்தமாக கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்

    கம்பம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அப்பாவு பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி செந்தாமரை செல்வி (40). இவர்கள் இருவரும் கம்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவில் உள்ள ஓம் சக்தி மன்றத்தில் பொறுப்பாளர்களாக இருந்து வந்தனர்.

    நேற்று அந்த மன்றத்தை காலி செய்து விட்டு அங்கிருந்த பொருட்களை தங்கள் வீட்டுக்கு எடுத்து வந்தனர். நேற்று இரவு 11.30 மணியளவில் பொருட்களை எடுத்து வந்த போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி முருகன் மற்றும் அவரது மனைவி மீது உரசியது.

    இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    உத்தமபாளையம் டி.எஸ்.பி. வீரபாண்டி மற்றும் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான முருகன்-செந்தாமரை செல்வி தம்பதியினருக்கு சுந்தரலிங்கம் என்ற மகனும் ராமு பிரியா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    கொடுமுடி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     கொடுமுடி:

    கொடுமுடி அடுத்த சூளை கல்பாளையம், பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35). லோகநாதன் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலையை சொந்தமாக மிஷின் வைத்து வேலை பார்த்து வந்தார்.

    நேற்று கட்டிட வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லோகநாதனை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    டாக்டர்கள் பரிசோதித்து விட்டு லோகநாதன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர்-வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது45), லாரி டிரைவரான இவர் நேற்று தனது லாரியில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்துக்கு புறப்பட்டார்.

    அவருடன் காரைக்குடி அருகே உள்ள பெரும்பச் சேரியைச் சேர்ந்த வெங்கடேஷ் (20), லட்சுமி (45) ஆகியோரும் சென்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ராதானூர் கிராமத்தில் லாரியை நிறுத்திய சம்பத்குமார் ஆடுகளை இறக்க முற்பட்டார்.

    அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்வயர் எதிர்பாராதவிதமாக லாரி மீது உரவியது. இதனால் லாரியில் மின்சாரம் பாய்ந்தது. அதில் இருந்த சம்பத்குமார், வெங்கடேஷ், லட்சுமி ஆகியோரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சம்பத் குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேஷ், லட்சுமியை சாதுர்யமாக மீட்டனர்.

    பின்னர் அவர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார். லட்சுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×