search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eriodu"

    • கள்ள நோட்டுகள், கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதியில் அதிக அளவு விவசாயம் நடைபெற்று வருவதால் வியாபாரிகள் நேரடியாக வந்து விளை பொருட்களுக்கு பணம் கொடுத்து கொள்முதல் செய்து செல்கின்றனர்.

    இது தவிர அய்யலூர் ஆட்டுச்சந்தை வாரம் தோறும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் மையமாக உள்ளது. இது போன்ற இடங்களில் சமீப காலமாக கள்ளநோட்டுகள், கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

    கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தற்போது புதிதாக வந்துள்ள 500, 200, 100 ரூபாய் நோட்டுகளில் அசல் எது, போலி எது என கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. நேற்று வடமதுரையில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு வந்த வாலிபர் சாப்பிட்டு விட்டு அதற்கு பதிலாக 200 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.

    அங்கிருந்த சிறுமி சாப்பாட்டுக்கு ரூ.120 எடுத்துக் கொண்டு மீதி ரூ.80 கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது தந்தை கல்லாவில் பார்த்த போது போலியான 200 ரூபாய் நோட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து தனது மகளிடம் கேட்ட போது தற்போதுதான் ஒருவர் பிரியாணி சாப்பிட்டு விட்டு இதை கொடுத்துச் சென்றதாக கூறினார். உடனே மோட்டார் சைக்கிளில் தனது மகளுடன் அங்கிருந்த கடை வீதிகளில் அந்த வாலிபரை தேடிப்பார்த்தபோது அவர் சிக்காமல் தப்பி ஓடி விட்டார்.

    கள்ள நோட்டுகளை மாற்றும் கும்பல் பெரும்பாலும் பெண்கள் இருக்கும் கடைகளிலும், சி.சி.டி.வி. பொருத்தாத கடைகளிலும் சென்று அதனை மாற்றி விட்டு மின்னல் வேகத்தில் சென்று விடுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பின்னர் அந்த நோட்டுகளை மற்றவர்களிடம் கொடுக்கும்போதுதான் அது போலியானது என தெரிய வருகிறது.

    எனவே போலீசார் இது போன்ற கள்ள நோட்டு மற்றும் கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை மாற்றும் கும்பலை தீவிரமாக கண்காணித்து அவர்களை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் இந்த கும்பலுக்கு பின்புலத்தில் உள்ள நபர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் அதிகம் கூடும் டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவற்றை குறி வைத்து கள்ள நோட்டுகளை மாற்றி வந்த கும்பல் தற்போது அங்கு கண்காணிப்பு கேமரா இருப்பதால் தங்களது திட்டத்தை வேறு வகையில் மாற்றி செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×