என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Erode Rain"
+2
- கனமழை காரணமாக தாழைக்கொம்பு புதூர் பகுதியில் உள்ள 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
- கோபி அருகே உள்ள அரசூர், தட்டான் புதூர் தரைப்பாலம் பலத்த மழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
கோபி:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர், கொடுமுடி, கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய கனமழை தொடர்ந்து பெய்தது.
கோபிசெட்டிபாளையம், கூகலூர், தாழைக்கொம்பு புதூர், சமைதாங்கி, குளத்துகடை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கோபிசெட்டிபாளையத்தில் மட்டும் 80 மில்லி மீட்டர் மழைப்பதிவானது.
கனமழை காரணமாக தாழைக்கொம்பு புதூர் பகுதியில் உள்ள 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளுக்குள் 3 அடி உயரத்துக்கு புகுந்ததால் வீடுகளில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.
தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு சென்றனர். இரவு நேரத்தில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வீட்டில் உள்ள பொருட்களை மேல் பகுதியில் பத்திரமாக வைத்தனர். இன்று காலை வரை மழை நீர் சூழ்ந்திருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வீட்டை சுற்றி மழை நீர் சூழ்ந்து இருந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. மழை பெய்யும் போதெல்லாம் இந்த பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுவது தொடர் கதையாகி வருவது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை கொம்பு புதூரில் ஒன்று திரண்டு அந்த வழியாக சென்ற அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் மற்றும் தாசில்தார் உத்தர சாமி மற்றும் வருவாய் துறையினர், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது பல ஆண்டுகாலமாக மழை நீர் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாகவே பள்ளத்தை சென்றடைந்து வந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் தடுப்பு சுவர் அமைத்ததால் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் 50 வீடுகளில் புகுந்தது தெரியவந்தது.
கோபி அருகே உள்ள அரசூர், தட்டான் புதூர் தரைப்பாலம் பலத்த மழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அப்போது மக்கள் 6 கிலோமீட்டர் சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
பலத்த மழை எதிரொலியாக கொடிவேரி அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை இருபுறங்களிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. கொடிவேரி தடுப்பணை பகுதியில் 1,600 கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.
- பெருந்துறை, சத்தியமங்கலம் பகுதியில் நள்ளிரவில் 3 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
- பவானிசாகர், கொடிவேரி, வரட்டுபள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
ஈரோடு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த ஒரு வாரமாக மழை பொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலையும் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவு 10 மணிக்கு பிறகு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு 12 மணி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஈரோடு மாநகர் பகுதியில் அன்னை சத்யா நகர், மல்லி நகரின் மையப்பகுதியில் பிச்சைக்கார பள்ளம் ஓடை செல்கிறது. இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மழை பெய்யும் போதெல்லாம் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த மழை நீர் வீடுகளுக்குள் புகுவது தொடக்கதையாகி வருகிறது.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் இந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஓடைகளில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் மீண்டும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த மழை நீர் அருகே இருந்த அன்னை சத்யா நகர் மற்றும் மல்லி நகரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் தரைத்தளத்தில் உள்ள மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
வீடுகளில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி. போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை மேல் தளத்திற்கு எடுத்து சென்றனர். மாணவ-மாணவிகளில் பாடப் புத்தகங்கள் மழை நீரில் நனைந்தது. மேலும் வீடுகளை சுற்றியும் மழைநீர் தேங்கி நின்றதால் அவர்களது இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது அன்னை சத்யா நகர், மல்லி நகர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை மக்கள் வாலியால் இறைத்து வெளியே ஊற்றினர்.
தகவல் அறிந்ததும் மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஓடைகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை சரி செய்து வருகின்றனர். மழைநீர் சூழ்ந்து இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நசியனூர் அடுத்த சாமிகவுண்டன் பாளையம் பகுதிகளில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நீர் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக நள்ளிரவு 2 மணி முதல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சாலையின் இரு புறங்களிலும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
கார், மோட்டார்சைக்கிள் போன்ற சிறியரக வாகனங்கள் மாற்று வழியில் சென்று வருகின்றன. சாமிகவுண்டன்பாளையம், பள்ளத்தூர், மலையம்பாளையம் போன்ற பகுதிகளில் உடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பள்ளத்தூர் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. அந்த பகுதியை சேர்ந்த ராணி என்பவர் வீடு மழையால் இடிந்து விழுந்தது. நல்ல வாய்ப்பாக அங்கு யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இதேபோல் பெருந்துறை, சத்தியமங்கலம் பகுதியில் நள்ளிரவில் 3 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதேபோல் பவானிசாகர், கொடிவேரி, வரட்டுபள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
- கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
- சென்னிமலை, அம்மாபேட்டை, கொடுமுடி, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, வரட்டுப் பள்ளம், கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. குறிப்பாக காலை முதல் மாலை வரை அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்ததால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்கள் கடும் பாதிப்பு அடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை மேலும் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மாலை 5 மணிக்கு பிறகு திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
பின்னர் சிறிது நேரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சோலார், நாடார் மேடு, முத்தம்பாளையம், காளைமாடு சிலை, வீரப்பன்சத்திரம் போன்ற பகுதியில் பரவலாக மழை பெய்தது.
இந்த மழையால் சாலைகளில் ஆறு போல் மழை நீர் ஓடியது. நாடார் மேட்டில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்தது. முத்தம்பாளையத்தில் ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்தது. மழைநீர் வடிகால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓடைகளில் வெள்ளம் நிரம்பியதால் சாக்கடை கழிவுகள் சாலையில் மிதந்து சென்றன.
இதேப்போல் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 75 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. அதாவது 7 சென்டிமீட்டர் மழை பதிவு. இதுபோல் கோபியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வாய்க்கால் ரோடு பகுதியில் மரம் முறிந்து மின் கம்பத்தில் விழுந்தது.
இதுபோல் சென்னிமலை, அம்மாபேட்டை, கொடுமுடி, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, வரட்டுப் பள்ளம், கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருந்துறை-75, கோபி-23.20, ஈரோடு-23, சென்னிமலை-22, அம்மா பேட்டை-17.20, கொடுமுடி-10.20, மொடக்குறிச்சி-7, கவுந்தப்பாடி-7, வரட்டுப்பள்ளம்-6.40, பவானி-3.80, கொடிவேரி-3, பவானிசாகர்-1.20.
- ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது.
- மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் போன்று வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதைடுயத்து ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
பெரிய அக்ரஹாரத்தில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய் சாரம்மா (34), மகன் முகமது அக்தர் (12) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னிமலை டவுன் 9-வது வார்டு பகுதியில் மூன்று மின் கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து வீடுகளின் மேல் விழுந்தது.
- திடீர் மழை காரணமாக சென்னிமலை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கடந்து சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திர வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் சென்னிமலை பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் மாலையில் குறைந்து வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. பின்னர் மாலை 6 மணி அளவில் திடீர் என பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்ட தொடங்கியது. மழை ஒரு மணி நேரம் நீடித்தது.
பலத்த சூறைக்காற்றால் சென்னிமலை-அரச்சலூர் ரோடு காளிக்காவலசு பிரிவில் வேப்பமரம் முறிந்து விழுந்தது. சென்னிலை மலை அடிவாரப்பகுதி மற்றும் சென்னிமலை-ஈங்கூர் ரோடு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்தது.
சென்னிமலை டவுன் 9-வது வார்டு பகுதியில் மூன்று மின் கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து வீடுகளின் மேல் விழுந்தது. இதில் வீடுகளும் சேதமடைந்தது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு விரைந்து தகவல் கொடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
இதனால் 9-வது வார்டு பகுதி மற்றும் சென்னிமலை மீதுள்ள முருகன் கோவிலிலும் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
இன்று காலை முதல் மின் கம்பங்களை அகற்றி புது மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த திடீர் மழை காரணமாக சென்னிமலை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
- அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, மீனவர் வீதி, பாரதியார் வீதி பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
- அம்மாபேட்டை அருகே உள்ள கோம்பூர் நீரேற்று நிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் 50 கிராமங்களுக்கு குடிநீர் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக நேற்று மாலை 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம், கொடுமுடி ஆகிய பகுதிகள் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, மீனவர் வீதி, பாரதியார் வீதி பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அம்மாபேட்டை அருகே உள்ள கோம்பூர் நீரேற்று நிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் 50 கிராமங்களுக்கு குடிநீர் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கருங்கல்பாளையம் பகுதியிலும் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து செல்கிறது. பவானி நகரம் காவிரி ஆற்று வெள்ளத்தால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் படித்துறையை தாண்டி தண்ணீர் செல்கிறது. மேலும் பவானி காவேரி வீதி, கந்தன்பட்டறை, பசுவேஸ்வரர் வீதி, பாலக்கரை வீதி, வெந்தலை படிக்கட்டு, கீழக்கரை வீதி உள்பட பல பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
மேலும் பவானி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பவானி வாரச்சந்தை ரோடு பகுதியில் உள்ள எரிவாயு தகனமேடை பகுதியில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் செல்வதால் தகனமேடை மூடப்பட்டுள்ளது.
தற்போது காவிரி ஆற்றுடன் பவானி ஆற்று நீரும் கலப்பதால் கூடுதுறை பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கரையோர பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் கொடுமுடி இலுப்பைத்தோப்பு, வடக்குத்தெரு, சத்திரப்பட்டி, காவேரி கரை, ராகவேந்திரா வீதி, வைராபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் 700 பேர் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 வேளை உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
தீபாவளி பண்டிகை நேரத்தில் வீடுகளுக்கு செல்ல முடியாததால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
- ஈரோடு மாநகர பகுதியில் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக நீடித்தது.
- தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மாநகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர், பர்கூர் போன்ற மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் காலை முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. திடீரென இரவில் லேசான மழை பெய்யத் தொடங்கியது.
ஈரோடு மாநகர பகுதியில் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக நீடித்தது. தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மாநகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சில இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இரவு 10 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னரும் மழை தூறி கொண்டே இருந்தது.
இதனால் ஈரோடு பஸ் நிலையம், முனிசிபல் காலனி, பெருந்துறை ரோடு, பெரிய வலசு, வீரப்பன்சத்திரம், மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, ஈ.வி.என்.ரோடு, கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
பிச்சைக்காரன் பள்ளம் ஓடை பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த பகுதியில் உள்ள ஒரு தரைப்பாலம் மழை நீரில் மூழ்கியது. மேலும் ஈரோடு சத்யா நகரில் கீழ்த்தளத்திலுள்ள 50 வீடுகளில் நள்ளிரவில் மழை நீர் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. இதனால் அந்த குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர். பின்னர் அதிகாலை வீடுகளில் புகுந்த மழைநீர் வடிந்தது. மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் ஈரோடு மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட மடிக்காரர் காலனியில் வீதி 1, 2, 3, பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக இந்த பகுதிகளில் உள்ள 25 வீடுகளில் மழை நீர் புகுந்தது.
இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர். கடந்த 3 மாதங்களில் இந்த பகுதிகளில் மட்டும் 5-வது முறையாக வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இந்த பகுதிகளில் மழை நீர் வெளியேற சாக்கடை வசதிகள் இல்லை. வீடுகளில் புகுந்த மழை நீரை அப்பகுதி மக்கள் வாளிகள் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.
இந்த பகுதிகளில் சிறிதளவு மழை பெய்தாலே மழைநீர் வெளியேற வழி இல்லாமல் வீடுகளில் புகுந்து விடுவதாக இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக அமைத்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை, பூதம்பாடி, குருவரெட்டியூர், சித்தார் போன்ற பகுதிகளில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில் அம்மாபேட்டை காமராஜர் வீதியைச் சேர்ந்த சரசாள் (55) என்பவர் தனது மகள் ரத்னா (30) என்பவருடன் அதே பகுதியில் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. தாய்- மகள் இருவரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு 9 மணி அளவில் திடீரென சரசாள் வீட்டை இடி தாக்கியது. இதில் வீடு முடிவதும் இடிந்து விழுந்தது.
நல்ல வேளையாக இடி சத்தம் கேட்டவுடன் தூங்கிக் கொண்டிருந்த சரசாள் மற்றும் அவரது மகள் ரத்னா ஆகியோர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. ஒருசில இடங்களில் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இந்த மழையின் காரணமாக கடும் குளிரும் நிலவியது.
- தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி தோட்டம் குளம் போல மாறியது.
- இடைவிடாமல் தினமும் மழை பெய்து வருவதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி செடிகள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக தாளவாடி, சத்தியமங்கலம், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.
மழை காரணமாக வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் அடிக்கடி தாளவாடி பகுதிகளில் உள்ள தரைமட்ட பாலத்தை முழ்கியபடி செல்கிறது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், பவானி சென்னிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் காடக நல்லி பகுதியில் உள்ள சிக்கூர், பெரிய உள்ளேபாளையம், சின்ன உள்ளே பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பீன்ஸ், உருளை கிழங்கு, வெள்ளைபூண்டு, மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தனர்.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த தோட்டங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி தோட்டம் குளம் போல மாறியது. மேலும் இடைவிடாமல் தினமும் மழை பெய்து வருவதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி செடிகள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தண்ணீர் வடிய வழியில்லாமல் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள காய்கறி செடிகள் அழுகி வருகிறது. எனவே வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பயிர் சேதங்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-12, பெருந்துறை-53,கோபி செட்டிபாளையம்-46, தாளவாடி-8.3, சத்தியமங்கலம்-2, பவானிசாகர்-4, பவானி-8.4, நம்பியூர்-7, சென்னிமலை-50, மொடக்குறிச்சி-11, கவுந்தப்பாடி-4.6, எலந்த குட்டை மேடு-11.2, கொடிவேரி-6, குண்டேரி பள்ளம்-4.2, வரட்டுப்பள்ளம்-5, மாவட்டம் முழுவதும் மொத்தம் 232.7 மி.மீ. மழை பெய்தது.
- கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, குண்டேரிபள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
- குறிப்பாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பெரியவர்கள், குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. அனல் காற்று அதிக அளவில் இருந்ததால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.
இந்நிலையில் மாலை 5:45 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. இதைத்தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 20 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
இதேபோல் கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, குண்டேரிபள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 24 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கோபி -24, ஈரோடு -19, நம்பியூர் -14, கவுந்தப்பாடி -10.20, பெருந்துறை -8, குண்டேரிபள்ளம் -6, பவானிசாகர் -2.
- ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு செய்யும் இடத்தில் மழைநீர் புகுந்தது.
- இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறாவளியுடன் விடிய, விடிய மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேப்போல் மின்கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்தன. இதனால் மின் தடையும் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் ரோடுகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் 3-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணிக்கு பிறகு மாநகர் பகுதியில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.
சுமார் 1½ மணி நேரம் பெய்த பலத்த மழையால் மாநகர் பகுதி முழுவதும் வெள்ள காடானது. ரோடுகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
பல்வேறு இடங்களில் தற்போது திட்ட பணிகள் நடந்து வருவதால் அதற்காக தோண்டப்பட்ட இடத்தில் மழை நீர் தேங்கி நின்றது.
ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு செய்யும் இடத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளித்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இங்கு லேசான மழை பெய்தாலே சேறும் சகதியுமாக காட்சி அளிப்பது தொடர்கதையாகி வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
இதேபோல் கவுந்தபாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 63.8. மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி வழிகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வரட்டுப்பள்ளம்-63.8, ஈரோடு-46, கவுந்தப்பாடி-44.20, பவானிசாகர்-14.4, பெருந்துறை-10, தாள வாடி-3, சென்னிமலை, கோபி-1.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
ஈரோட்டில் நேற்று மதியம் திடீரென வெயில் அடிக்க தொடங்கியது. இந்த நிலையில் மாலை மீண்டும் மேகமூட்டமாக காணப்பட்டது. இதையடுத்து சாரல் மழை தூறியது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாக்கடைகள் நிரம்பி மழை தண்ணீர் வீடுகள் முன்பு தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். அதன் பிறகு மழை வெள்ளம் வடிந்தது.
நம்பியூர் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மொட்டணம் கிராமம் மஜ்ரா பழையூர் பகுதியில் பாட்டப்பா கவுண்டர் (72) என்பவரது வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவர் தத்தளித்து கொண்டு இருந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் அவருக்கு சொந்தமான வீடு இடிந்து விழுந்து சேதமானது. இதே போல் மழை காரணமாக சென்னியப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டு சுவரும் இடிந்து விழுந்தது.
தொடர் மழை காரணமாக நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 48 ஏக்கர் குளம் 30 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பி வழிகிறது. தண்ணீர் சாலையில் 5 அடிக்கும் மேல் ஓடியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தண்ணீர் வடிந்ததும் போக்குவரத்து தொடங்கியது.
இதே போல் அந்தியூர் அருகே உள்ள 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியும் நிரம்பி வழிகிறது. உபரி நீர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் வாழை, நெல், கரும்பு, சோள பயிர்கள் அழுகி வருகிறது.
இதேபோல் ஆப்பக்கூடல் அருகே உள்ள சஞ்சீவிராயன் ஏரியும் நிரம்பி வழிகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது.
ஈரோடு நகரில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நடை பாலத்தை தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-25, நம்பியூர்-12, பெருந்துறை-7, எலந்தகுட்டை மேடு-3.2, அம்மாபேட்டை-1, கொடி வேரி-1.2, கோபி-2.2, பவானிசாகர்1.2, அம்மாபேட்டை-1, வரட்டுபள்ளம்-1.
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று 2-வது நாளாக மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. அதிக பட்சமாக கொடுமுடி, ஊஞ்சலூர், சாலைப்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அதிக மழை கொட்டியது. கொடுமுடி பகுதியில் மட்டும் அதிகப்பட்சமாக 44மி.மீ மழை கொட்டியது.
இதேபோல் ஈரோடு, கவுந்தப்பாடி, கோபி, எலந்தகுட்டை மேடு ஆகிய பகுதிகளிலும் அதிக மழை கொட்டியது.
ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை தொடர்ந்து அரைமணி நேரத்துக்கு மேலாக பலமாக கொட்டியது.
நேற்று பெய்த மழையின் போது காற்று அதிகமாக பெய்யவில்லை. இதனால் மழை பலமாக கொட்டியது. இந்த மழையால் கே.என்.வி. ரோடு, சூரம்பட்டி ரோடு, கொல்லம்பாளையம், மூலப்பாளையம், பெருந்துறை ரோடு ஆகிய இடங்களில் மழை தண்ணீர் ரோட்டில் இருபுறமும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவு நேரத்தில் ஈரோட்டில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது.
ஈரோடு காளைமாட்டு சிலையிலிருந்து கொல்லம் பாளையம் ரெயில்வே மேம்பாலம் வரை வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு முந்தி சென்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் பூந்துறை ரோடு மூலப்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே ஏற்கெனவே பாதாள சாக்கடை பணியில் பழுது காரணமாக 3 மாத காலமாக வேலை நடந்து வருகிறது. அந்த பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
நேற்று இரவு மழை பெய்ததையொட்டி மிகவும் நெரிசல் ஏற்பட்டு மக்களும் வாகன ஓட்டிகளும் படாதபாடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொடுமுடி- 44
எலந்தகுட்டைமேடு- 34.4
கவுந்தப்பாடி-25
ஓலப்பாளையம்-24
ஈரோடு - 21
கோபி-17
பவானி - 14.4
வரட்டுப்பாளையம் அணை-10
சென்னிமலை-5
மொடக்குறிச்சி-4
மொடக்குறிச்சி - 4
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்