search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishermen federation"

    துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வருகிற 29-ந் தேதி வீரபாண்டியன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் வரை மவுன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது என மீனவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    தூத்துக்குடி, மே. 27-

    தூத்துக்குடி மாவட்ட அனைத்து பரதர் மீனவர் கூட்டமைப்பு கூட்டம் தூத்துக்குடி திரேஸ்புரம் தோமையார் ஆலய வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டமைப்பு தலைவர் டெப்பா சந்திரன் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அமைதியாக போராடிய அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும், துப்பாக்கி சூட்டையும் வன்மையாக கண்டிக்கிறோம். துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மற்றும் அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.கடந்த 22-ந் தேதி நடந்த கலவரத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். கலவரத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நஷ்டஈடும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான அரசு பணியும் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணமும், மேல் சிகிச்சையும் அரசு சார்பில் வழங்க வேண்டும்.

    தூத்துக்குடி மாநகரத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள போலீசாரை உடனே திரும்ப பெற வேண்டும். தூத்துக்குடி நகர் பகுதியில் இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து விட்டு, வீடு புகுந்து அத்துமீறி அப்பாவி இளைஞர்களை போலீசார் கைது செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் டெப்பா சந்திரன் கூறுகையில், ‘துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வீரபாண்டியன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் வரை மவுன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம்’ என்றார். *** தூத்துக்குடி, மே. 27-

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் கூட்டப்புளியைச் சேர்ந்த பாதிரியார் லியோ ஜெயசீலன் (வயது 70) என்பவர் காயம் அடைந்தார். அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:-

    நான் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களோடு கலந்து கொண்டு அந்த ஆலைக்கு எதிராக மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டேன். மில்லர்புரம் பகுதியில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மக்களோடு நடந்து சென்றேன்.

    கலெக்டர் அலுவலகத்தில் சென்றபோது போலீசார் தடியடி நடத்துவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டனர். இது மிகவும் துயரமானது. நான் துப்பாக்கியால் சுடப்பட்ட போது, மக்கள் நன்மைக்காக போராடுகிறோம். இப்படி துப்பாக்கியால் சுடுகிறார்களே! என்று வேதனை அடைந்தேன். காயம் அடைந்த என்னை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த ஸ்டெர்லைட் ஆலை மக்களை விட்டு அகன்று செல்ல வேண்டும். ஆலை மூடப்பட வேண்டும். இந்த அரசு தங்களின் பதவிகளை தக்க வைப்பதற்காக இதுபோன்ற பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அரசு ஆதரவு இருப்பதால், இந்த ஆலையை நடத்தியே தீருவேன் என்று ஆலை உரிமையாளர்கள் கூறுகிறார்கள். விவசாயத்தை அழித்து, 13 பேர் சாவுக்கு காரணமான இந்த ஆலையை நாங்கள் நடத்த விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். * * * ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பாதிரியார் லியோ ஜெயசீலன்.

    ×