search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood Alert To People"

    பில்லூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #PillurDam #FloodWarning
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பில்லூர் அணை உள்ளது.

    நீலகிரி மாவட்டம் மற்றும் பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதி, கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு இந்த அணை கட்டப்பட்டது. பில்லூர் அணையின் நீர் மட்டம் 100 அடியாகும்.

    கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் பலத்த மழை பெய்ததால் நேற்று பகல் பில்லூர் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 93 அடியை எட்டியது.

    பில்லூர் அணை

    அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இரவு 8 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

    இதனால் அணை நீர் மட்டம் 97 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து 4-வது முறையாக அணை நிரம்பியது. கடந்த ஒரு வருடத்தில் இந்த அணை 4-வது முறையாக நிரம்பி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர் மட்டம் ஒரே சீராக இருக்க அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் தொடர்ந்து 4 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள பவானி அம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    மேட்டுப்பாளையம் தாசில்தார் புனிதா மற்றும் வருவாய் துறையினர் பவானி ஆற்றின் கரையோரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து தண்டோரா மூலமும், ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் சோலையார் அணைக்கு வினாடிக்கு 6146.53 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 163.40 அடியாக உள்ளது.

    அணையில் இருந்து வினாடிக்கு 5996.99 கன அடி தண்ணீர் மதகு வழியாகவும், மின் உற்பத்திக்கு பின் சேடல் பாதை வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கன மழை காரணமாக வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 80 மி. மீ. மழையும், சோலையார் அணையில் 165 மி.மீ, சின்னக் கல்லாரில் 170 மி.மீ, நீராரில் 145 மி.மீ. மழையும் பெய்துள்ளது. மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    பொள்ளாச்சியில் இன்று 3-வது நாளாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. பலத்த மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூரில் பழனிச்சாமி என்பவர் வீட்டில் மழை நீர் புகுந்தது.

    மேலும் அங்குள்ள ரே‌ஷன் கடைகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் ரே‌ஷன் பொருட்கள் சேதம் அடைந்தது. பொள்ளாச்சி- கோட்டூர் சாலையில் மேம்பாலம் பகுதியில் வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை அகற்றும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. #PillurDam #FloodWarning
    ×