search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flowers Sold"

    தோவாளை மார்க்கெட்டில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 60 டன் பூக்கள் விற்பனையாகி இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பூக்கள் விற்பனை பாதியாக குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். #OnamFestival
    ஆரல்வாய்மொழி:

    தோவாளையில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு குமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து பலவிதமான மலர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்தும் இங்கு வண்ண, வண்ண மலர்கள் வருகை தருகிறது.

    தோவாளை மார்க்கெட்டில் இருந்து அதிக அளவு பூக்கள் கேரளாவுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான ஓணத்தின்போது இங்கிருந்து கேரள வியாபாரிகள் பூக்களை போட்டிப்போட்டு வாங்கிச் செல்வார்கள்.

    இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கேரளாவில் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய பூக்கள் விற்பனை நடைபெற்றது. இதற்காக தோவாளை மார்க்கெட் நேற்று இரவு 8 மணிக்கே செயல்பட தொடங்கியது. மார்க்கெட் மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள சாலையின் இரு புறங்களிலும் பூ வியாபாரிகள் பலவித பூக்களை குவித்து வைத்து விற்பனை செய்தனர். இரவு ஒரு மணி வரை மிகவும் குறைந்த அளவு பூக்களே விற்பனை ஆனது.

    இந்த ஆண்டு கேரளாவில் வரலாறு காணாத மழை காரணமாக அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு அரசு சார்பில் நடைபெறும் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் இன்னும் வெள்ள பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வராததால் ஓணம் கொண்டாட்டம் களை இழந்தே காணப்படுகிறது.

    ஓணத்தையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை நடந்த காட்சி.

    இதனால் தோவாளை மார்க்கெட்டுக்கு கேரள வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது.

    நள்ளிரவு 1 மணிக்கு பிறகே தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. இங்கு இருந்து பூக்களை டெம்போக்களில் ஏற்றி வியாபாரிகள் கொண்டு சென்றனர். நாகர்கோவில் உள்பட குமரி மாவட்டத்தின் பல்வேறு தனியார் பள்ளி, கல்லூரிகள் சார்பிலும் ஓணம் அத்தப்பூ கோலத்திற்காக அதிகளவு வண்ண மலர்கள் வாங்கிச் செல்லப்பட்டது.

    நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 60 டன் பூக்கள் விற்பனையாகி இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பூக்கள் விற்பனை பாதியாக குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தோவளை மார்க்கெட்டில் இன்று பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. பிச்சிப்பூ கிலோ ரூ.750-க்கும், மல்லிப்பூ கிலோ ரூ.500-க்கும் விற்பனையானது. கடந்த ஆண்டு பிச்சிப் பூ ரூ.1,250-க்கும், மல்லிப் பூ ரூ.1000-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    மற்ற பூக்கள் விலை இரவில் குறைந்தும், அதிகாலையில் உயர்ந்தும் காணப்பட்டது. ஒரு கிலோ வாடாமல்லி இரவு ரூ.70-க்கு விற்பனையானது. இன்று அதிகாலையில் பலமடங்கு விலை உயர்ந்து ரூ.400-க்கு விற்பனையானது. அதே போல ரோஜாப்பூ இரவில் ரூ.150-க்கு விற்கப்பட்டது இன்று அதிகாலையில் ரூ.300 ஆக உயர்ந்தது. சேலம் அரளி ரூ.200-க்கு இரவில் விற்பனை செய்யப்பட்டது அதிகாலையில் ரூ.300 ஆக அதிகரித்தது. மஞ்சள் கேந்தி ரூ.40, சிவப்பு கேந்தி ரூ.60, செவ்வந்தி ரூ.300, பட்டன் ரோஜா ரூ.300, சம்மங்கி ரூ.150, கோழிக்கொண்டை பூ ரூ.80, துளசி ரூ.50-க்கு விற்பனையானது.  #OnamFestival




    ×