என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flying squad"

    • நமது நிலம் நமதே என்ற அமைப்பின் மூலம் 17 இடங்களில் போராட்டக்குழு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
    • விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் 17 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    அன்னூர்:

    கோவை மேட்டுப்பாளையம், அன்னூர் ஒன்றியங்களில் உள்ள 6 கிராமங்களில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்து, 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிட்டிருந்தது.

    இதற்கு 6 கிராம ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிப்காட் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன பேரணி, நடைபயணம், கடையடைப்பு உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களையும் அவர்கள் நடத்தினர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

    இந்நிலையில் நமது நிலம் நமதே என்ற அமைப்பின் மூலம் 17 இடங்களில் போராட்டக்குழு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    அக்கரை செங்கப்பள்ளி, குன்னிபாளையம், பச்சாகவுண்டனூர், இலக்கேபாளையம், செலம்பரகவுண்டன்புதூர், தொட்டியபாளையம், கரியனூர், சொலவம்பாளையம், ஆலாங்குட்டை, கரியாக்கவுண்டனூர், ஒட்டகமண்டலம், இராசடி பொகலூர், ஆனணப்பள்ளிபுதூர், ஆத்திக்குட்டை, குழியூர் மாகாளி அம்மன் கோவில் திடல் பகுதிகளில் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நமது நிலம் நமதே விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் ரவிக்குமார், செயலாளர் ராஜா ஆகியோர் கூறியதாவது:-

    தமிழக அரசு தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராடி வருகிறோம். அக்கரை செங்கப்பள்ளியில் தொடங்கி மொத்தம் 17 இடங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. நிலம் கையகப்படுத்த அரசு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டாலோ, வெளியாட்கள் நடமாட்டம் இருந்தாலோ விவசாயிகள் இந்த அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் 17 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை ஏற்பட்டால் அந்த பகுதிகளுக்கு பறக்கும் படையினர் விரைந்து சென்று விவசாயிகளுக்கு உதவுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    விவசாய நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன வசதி அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரசார நடைபயணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைிவட வேண்டும். அவினாசி-அத்திக்கடவு திட்டத்தின் மூலம் பயன்படும் விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் ஒருங்கிணைப்புக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி பிரசார நடைபயணம் நடக்கிறது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் அக்கரை செங்கப்பள்ளி கிராமத்தில் பிரசார பயணம் தொடங்குகிறது. 

    • சிறைக் கைதிகள், தனித்தேர்வர்களுக்காக 4 தனியார் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் எடுத்துச்செல்லப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வுக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    183 பள்ளிகள்

    மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 183 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 21 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர்.

    இதுதவிர சிறைக் கைதிகள், தனித்தேர்வ ர்களுக்காக 4 தனியார் தேர்வு மையங்கள் அமைக்க ப்பட்டு இருந்தது. இந்த மையங்கள் அனைத்தும் நேற்றே தயார்படுத்தி வைக்கப்பட்டது.

    1,150 ஆசிரியர்கள்

    தேர்வையொட்டி மாநகரில் 2 பள்ளிகள், மாவ ட்டத்தில் சேரன்மகாதேவி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய இடங்களில் 3 பள்ளிகளில் வைக்கப்ப ட்டு இருந்த வினாத்தாள் கட்டுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    அந்த இடங்களில் இருந்து இன்று காலை 7 மணிக்கு வாகனங்கள் மூலமாக வினாத்தாள்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டது. தேர்வு பணிகளில் சுமார் 1,150 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

    7 பறக்கும் படை

    தேர்வில் முறைகேடு களை தடுக்கும் வகையில் 7 பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணித்தனர். ஒரு பறக்கும் படைக்கு ஒரு தலைமை அலுவலர், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அலுவலர் இடம்பெற்றிருந்தனர். தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 73 நிலையான படை அமைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தேர்வின் போது சிறப்பு அனுமதி பெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சொல்வதை எழுதும் பணிக்காக 187 பேர் நியமிக்கப்பட்டனர். சிறப்பான அனுமதி பெற்ற மாணவர்களுக்கான தேர்வு எழுதும் முறையை கண்காணிக்க 4 அறைக்கு ஒரு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டனர்.

    தேர்வினை நெல்லை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராமசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி ஆகியோர் கண்காணித்து வந்தனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 18,299 பேர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டத்தில் 64 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் தேர்வு தொடங்கியது.

    இந்த பணிக்காக 1,322 ஆசிரியர்கள் ஈடுபடு த்தப்பட்டு உள்ளனர். முறைகேடுகளை தவிர்க்க 5 பறக்கும் படை, 150 ஸ்கேனிங் அலுவர்கள் பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமையில் அதிகாரிகள் செய்திருந்தனர். தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த தேர்வை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பார்வையிட்டார்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 204 பள்ளிகளை சேர்ந்த 19,998 பிளஸ்-2 மாணவ-மாணவிகள் இன்று தேர்வெழுதினர். மொத்தம் 91 மையங்களில் நடந்த இந்த தேர்வையொட்டி தடையில்லா மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வர்கள் தவிர்த்து மற்றவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. எலக்ட்ரா னிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடுமையான சோதனைக்கு பின்னரே மாணவ-மாணவிகள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
    • தமிழக-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தாளவாடி:

    கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 10-ந் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

    இதையடுத்த பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாநில எல்லைகளில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்குள் செல்லும் பஸ், கார், வேன் போன்ற அனைத்து வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வரு கிறார்கள். மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதோடு வாகன எண், பெயர், முகவரி, என்ன காரணத்துக்காக வருகிறீர்கள் என்று கேட்டு குறித்து கொள்கிறார்கள். கர்நாடக மாநில தேர்தலையொட்டி விடிய, விடிய பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல் பர்கூர்-கர்நாடக எல்லை யிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    • பணம் மற்றும் பொருட்கள் பிடிபட்டால், அந்தந்த பகுதி தலைமை அதிகாரிகளுக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்.
    • நட்சத்திர பேச்சாளர்கள் தங்களது சொந்த தேவைக்காக ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்லலாம்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து பறிமுதல் செய்வதற்கு பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் பணியில் ஈடுபட உள்ள இந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு, தேர்தல் புகார்களை கையாள்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் தேர்தல் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கும், கண்காணிப்பு குழுவினருக்கும் தேர்தல் பணிகள் குறித்தும், தேர்தலின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததும், பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் சரியான முறையில் செயல்பட வேண்டும்.

    பணம் மற்றும் பொருட்கள் பிடிபட்டால், அந்தந்த பகுதி தலைமை அதிகாரிகளுக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்.

    ஒவ்வொரு பகுதி பொறுப்பாளரும் அந்தந்த பகுதிகளுக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

    விதிகளை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்ககூடாது.

    கள்ளத்தனமாக பணம் எடுத்து செல்வது, மதுபானங்கள் வினியோகிக்க கொண்டு செல்வது உள்பட வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் விதமான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த குழுவினர் கண்காணிப்பார்கள்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் முடியும் வரை இந்த குழுவானது செயல்பாட்டில் இருக்கும். லஞ்சம் கொடுப்பது, பெறுவது குறித்த புகார்கள், சமூக விரோதிகள் நடமாட்டம், சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் கைப்பற்றுவது குறித்து போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஆதாரமின்றி எடுத்து செல்லப்படும் பணம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க எடுத்து சென்றதாக கணக்கில் கொண்டு பறிமுதல் செய்ய வேண்டும். அதனை வீடியோவிலும் பதிவு செய்ய வேண்டும்.

    ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், மதுபானங்களை கைப்பற்ற வேண்டும். ரூ.10 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை எடுத்து சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும்.

    நட்சத்திர பேச்சாளர்கள் தங்களது சொந்த தேவைக்காக ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்லலாம். ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் கண்டறியப்பட்டால் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பெண்களின் கைப்பைகளை பெண் போலீசாரே சோதனை செய்ய வேண்டும். அனைவரும் இணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. நாளை மறுநாள்(சனிக்கிழமை) மண்டல குழு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    போலீஸ் அதிகாரிகள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு 11-ந் தேதியும், மைக்ரோ அப்சர்வர்கள் மற்றும் வீடியோ கிராபர்களுக்கு 15-ந் தேதியும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
    • நாகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல்,

    நாகப்பட்டினம்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து நாகை மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கி விட்டனர்.

    இதற்காக நாகை மாவட்டத்தில் 9 பறக்கும் படை, 9 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெற்றாற்று பாலம் அருகே பறக்கும் படை தாசில்தார் வடிவழகன் தலைமையிலான அதிகாரிகள் வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 400 எடுத்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காரைக்காலில் தனியார் பள்ளியில் கணக்கராக பணிபுரிந்து வரும் வெளிப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பதும், பள்ளி மாணவர்களின் கட்டண தொகையை எந்தவித ஆவணங்களும் இன்றி மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வெங்கடேசனிடமிருந்து ரூ.1,53,400-யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நாகை தலைமை இடத்து துணை தாசில்தார் தனஜெயனிடம் ஒப்படைத்தனர்.

    நாகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு வேட்பாளர் பெயர் அடிபடுவதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
    • 2 பேர் உள்ளூர் பிரபலங்கள், 2 பேர் வெளி மாநில அதிகார பிரபலங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    தேசிய கட்சிகளான காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. தனித்து களமிறங்கும் பட்சத்தில் மும்முனை போட்டி சூழல் உருவாகும். அ.தி.மு.க.வில் போட்டியிட 21 பேர் விருப்ப மனு அளித்தனர்.

    வேட்பாளரையும் அக்கட்சி தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையில் அ.தி.மு.க. தலைமை ஈடுபட்டுள்ளதால் அதிகாரப் பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

    அதே வேளையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தேர்வு செய்து பட்டியலை தேசிய தலைமைக்கு அனுப்பிவிட்டது. 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது புதுச்சேரி வேட்பாளரின் பெயர் இடம்பெறும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.


    ஆனால் ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கும் பா.ஜனதாவில் இதுவரை வேட்பாளர் யார்? என்பது தெரியவில்லை. தினசரி ஒரு வேட்பாளர் பெயர் அடிபடுவதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளிடம் கட்சி தலைமை வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தியது.

    அதில் காரைக்காலை சேர்ந்த தொழிலதிபரை வேட்பாளராக நிறுத்த கருத்து கேட்கப்பட்டது. அதில் எம்.எல்.ஏ.க்கள் காரைக்கால் தொழிலதிபரை தேர்தலில் நிறுத்த சம்மதம் தெரிவித்தனர். இதனால் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது.

    இதனிடையே நேற்று பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. நிருபர்களை சந்தித்து பேசிய போது, புதுச்சேரி வேட்பாளர் தேர்வுக்கான பட்டியலில் 4 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். அந்த பட்டியலை டெல்லி கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதில் ஒருவரை கட்சியின் தேசிய தலைமை இறுதி செய்து அறிவிக்கும் என்றார்.


    அதில் 2 பேர் உள்ளூர் பிரபலங்கள், 2 பேர் வெளி மாநில அதிகார பிரபலங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    இதில் ஒருவரை அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் முடிவு செய்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.

    இதற்கிடையே புதுச்சேரி மக்களின் மனநிலை, தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு என்பது தொடர்பான ரகசிய சர்வேயை மத்திய உளவுத்துறை மூலமாக பா.ஜனதா மேலிடம் நடத்தியுள்ளது.

    அதில் புதுச்சேரியில் மக்களின் ஆதரவை பெற்ற பிரபலமான ஒருவரின் பெயர் வெற்றி வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும், வெளிமாநிலத்தவர் 2, 3-ம் இடத்திலும், காரைக்கால் தொழிலதிபர் பெயர் கடைசி இடத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

    இவர்களில் ஒருவரை கட்சி மேலிடம் ஏற்கனவே முடிவு செய்து வைத்து விட்டதால், ஓரிரு நாளில் பா.ஜனதா வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக கட்சி தலைமை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறினர்.

    • தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் முழு வதும் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கி விட்டனர்.

    இதற்காக ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நிலையான கண்காணிப்பு குழுவினர் அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் குமலன் குட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த காரில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    தொடர்பாக காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த டயர் வியாபாரியான சசிகுமார் என்பதும், டயர் விற்பனை செய்த பணத்தை காரில் வைத்து எடுத்து சென்றதும் தெரிய வந்தது.


    ஆனால் அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான ஆவணங்களை வியாபாரி சசிகுமார் காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கானாபுதூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.1.95 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவரது பெயர் வெங்கடாசலம் என்பதும், காரைக்குடியில் இருந்து கோவைக்கு இடம் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் இன்று காலை ஈரோடு வெட்டுக்காடு வலசு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் சூரம்பட்டி பகுதியை சேர்ந்த வடிவேல் என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. 3 லட்சம் பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேப்போல் இன்று காலை பறக்கும் படையினர் ஈரோடு ரெயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வந்து கொண்டிருந்தார்.


    அவரை நிறுத்தி சோதனை செய்தபோது 89 பட்டு புடவைகள், 6 சுடிதார், ஒரு நைட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும் இருந்தது தெரியவந்தது.

    அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கர்நாடகா மாநிலம் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த கஜேந்திர ராவ் என்பதும், திருமண வீட்டிற்க்காக ஈரோட்டிற்கு வந்து புடவைகள் வாங்கி சென்று மீண்டும் கர்நாடகா செல்வதற்காக ரெயிலில் ஏற வந்ததாக கூறினார்.

    ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் அவரது புடவைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம், புடவைகளை கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், தேர்தல் உதவி வட்டாட்சியர் ஜெகநாதன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    • கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பறக்கும் படையினர் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனை மேற்கொண்டு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 கேரள பதிவெண் கொண்ட லாரிகள் வந்தது.

    அதிகாரிகள் அந்த லாரிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 லாரிகளிலும் ரூ.11.80 லட்சம் பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • மணப்பாறையை சேர்ந்த தர்மலிங்கம், சுரேஷ்குமார் ஆகியோரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 3,500 இருந்தது கண்டறியப்பட்டது.
    • ஆவணம் ஏதும் இல்லாத காரணத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்றத் தொகுதி பகுதிகளில் அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். குளித்தலை அருகே கரூர் முதல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மருதூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்ட போது பெட்டவாயிலிருந்து மணப்பாறை நோக்கி சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த தர்மலிங்கம், சுரேஷ்குமார் ஆகியோரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 3,500 இருந்தது கண்டறியப்பட்டது,

    தொடர்ந்து மருதூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்ட போது மற்றொரு வாகனத்தில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஜீவா தெரு கலைவாணன் என்பவரிடம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டது. சரியான ஆவணம் ஏதும் இல்லாத காரணத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்பு அந்த பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குளித்தலை ஆர்.டி.ஓ. தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

    அப்போது குளித்தலை வட்டாட்சியர் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ், குளித்தலை வருவாய் ஆய்வாளர் ஸ்ரீவித்யா மற்றும் காவல்துறையினர் இருந்தனர்.

    • தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செட்டியப்பனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி ஜோலார்பேட்டை தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெயசித்ரா தலைமையிலான அதிகாரிகள் செட்டியப்பனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம், அணைக்கட்டை சேர்ந்த விஜயன் (வயது 41), முட்டை வியாபாரி என்பதும், இவர் உரிய ஆவணம் இன்றி ரூ.2,01,900 நாமக்கல்லுக்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து, நாட்டறம்பள்ளி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜராஜனிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அரசின் சாதனைகள் குறித்த தகவல்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர்.
    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளி்ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 83 ஆயிரத்து 710.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு 3687 வாக்குச்சாவடிகளும், 1301 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இவற்றில் 281 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை. 6 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சா வடிகளில் தேர்தல் நாளன்று நடக்கும் அனைத்து நடைமுறைகளும் சி.சி.டி.வி. மூலம் நேரடியாக மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக மொத்தம் 9119 வாக்குப்பதிவு கருவிகளும் 4821 கட்டுப்பாட்டுக் கருவிகளும் 5333 யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவியும் பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்துவதற்காக 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் 90 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழுக்கள், 20 காணொலி கண்காணிப்பு குழுக்களும், 10 காணொலி பார்வையாளர் குழுக்களும், வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு 10 உதவி செலவின குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.


    மாவட்டத்தில் 87 துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் தங்களது துப்பாக்கிகளை உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். வேட்பாளர்களாக இருப்பவர்கள் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் போன்றவற்றிற்கு அனுமதி பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் சுவிதா 'Suvidha' என்ற இணையதளம் வழியில் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இந்த இணையத்தின் முகவரி 'http:\\suvidha.eci.gov.in' ஆகும். வேட்பாளர்கள் மேற்கண்ட இணைய தளத்தின் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

    இந்த இணையத்தின் மூலம் அனுமதி பெற 48 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் இந்த சுவிதா இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். அதேபோல் சி.விஜில் என்னும் கைபேசி செயலி இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை புகார் அளிக்க வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க பொது மக்களுக்காக 044-2766 0642, 044-2766 0643, 044-2766 0644 மற்றும் இலவச தொலைபேசி எண் 1800 425 8515-ல் தங்கள் புகார்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமன்ற தலைவர் அறை மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர். இதேபோல் அரசின் சாதனைகள் குறித்த தகவல்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர். நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மாற்றப்பட்டிருந்த தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டது. இரவு முதலே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.

    • மாவட்ட எல்லைகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7088, 044-27427412, 044-27427414 ஆகிய தொலை பேசி எண்களில் புகார்கள் பற்றி தெரிவிக்கலாம்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து உள்ளன.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 123 தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1417 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 178 வாக்குச் சாடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 12 பறக்கும் படை குழுக்களும், 12 கண்காணிப்பு குழுக்களும், 4 காணொலி கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட எல்லைகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் விதிமுறைகளால் காஞ்சிபுரத்திற்கு பட்டு புடவைகள் வாங்குவதற்கு அதிக அளவில் பணம் எடுத்து வருபவர்கள் சிரமம் அடைந்து உள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 21 பறக்கும் படைகள், 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 14 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத் தப்பட்டு உள்ளன. 24 மணிநேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7088, 044-27427412, 044-27427414 ஆகிய தொலை பேசி எண்களில் புகார்கள் பற்றி தெரிவிக்கலாம்.

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 90 பறக்கும் படையினர் மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழுக்கள், 20 காணொலி கண்காணிப்பு குழுக்கள், 10 காணொலி பார்வையாளர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க 10 உதவி செலவின குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.

    ×