search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FOOTBRIDGE SANK"

    • மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் திருச்சி காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
    • இதில் 69 ஆயிரம் கனஅடி நீர் காவிரியிலும் 500 கன அடி நீர் பாசன வாய்க்கால்களிலும் மீதமுள்ள ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 500 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்படுகிறது

    திருச்சி:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் உபரி நீராக காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அங்கு திறக்கப்படும் தண்ணீருடன் பவானிசாகர் மற்றும் அமராவதி ஆறுகளில் வரும் தண்ணீரும் ஈரோடு மற்றும் கரூரில் காவிரியில் ஐக்கியமாகி மாயனூர் கதவனை வாயிலாக முக்கொம்பு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் முக்கொம்பு மேலணைக்கு அதிக வசமாக ஒரு லட்சத்து 37 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. பின்னர் நள்ளிரவு படிப்படியாக உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதில் 69 ஆயிரம் கனஅடி நீர் காவிரியிலும் 500 கன அடி நீர் பாசன வாய்க்கால்களிலும் மீதமுள்ள ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 500 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்படுகிறது. சுமார் இரண்டு லட்சம் கனஅடி நீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் செல்வதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    மேலும் திருச்சியில் இருந்து கல்லணைக்கு செல்லும் உத்தமர்சீலி தரைப்பாலம் இன்று காலை மூழ்கியது.

    இருந்தபோதிலும் ஆபத்தை உணராமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தண்ணீரிலேயே வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

    இதற்கிடையே காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு யாரும் செல்லாதபடி தடுக்க போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் நாளை (18-ந்தேதி) ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் யாரும் அம்மா மண்டபத்திற்கு வரவேண்டாம் என்று மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

    கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

    இரவில் முக்கொம்பு அணைக்கு சென்று பார்வையிட்ட திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.




    ×