search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former Police Superintendent"

    துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து தூத்துக்குடி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனிடம் விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.

    போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் தூத்துக்குடி நகரமே கலவர பூமியாக மாறியது. போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 48 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி நகரில் அரங்கேறிய துப்பாக்கி சூடு, தடியடி, தீ வைப்பு உள்ளிட்டவைகள் குறித்து தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், சிப்-காட் போலீஸ் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டது. கலவரம் தொடர்பாக மொத்தம் 5 வழக்குகள் பதியப்பட்டன.

    இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. அவர்கள் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தூத்துக்குடி போலீசாரிடமிருந்து பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி கலவரம் தொடர்பான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் தூத்துக்குடி வருகிறார். அவரது நேரடி கண்காணிப்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தும் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான போலீஸ் சூப்பிரண்டு புபுல்தத்தா பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்பீர்சிங், இன்ஸ்பெக்டர்கள் லால்பகர், நிதின்குமார், அருள்தியாகி ஆகிய 5 பேர் தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளனர்.

    கடந்த 2-ந் தேதி தங்களது விசாரணையை துவங்கிய அவர்கள் முதலில் துப்பாக்கி சூடு மற்றும் மோதல் நடந்த இடங்களை பார்வையிட்டனர். மேலும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினர்.

    அவர்கள் கடந்த 4-ந் தேதி 144 தடை உத்தரவை அமுல்படுத்துவதற்காக பணி அமர்த்தப்பட்டிருந்த தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள் 9 பேரிடமும், வன்முறையில் காயமடைந்த 29 பெண் போலீசார் உள்பட 99 போலீசாரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி மேற்குமண்டல அலுவலகத்தில் வைத்து துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் இறந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள், மேலும் வழக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.

    நேற்று துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரிடம் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர். இதற்காக துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படும் போலீஸ்காரர் ராஜா உள்ளிட்ட 9 போலீசார் உள்பட 45 பேர் ஆஜரானார்கள்.

    எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினீர்கள், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார், துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போது அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என பல்வேறு கேள்விகளை துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் எழுப்பினர்.

    அதே போல் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது அங்கிருந்த மற்ற போலீசார் மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

    துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து தூத்துக்குடி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனிடம் விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு ஆஜராக போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் இன்று தூத்துக்குடி வரலாம் என கூறப்படுகிறது.

    ×