என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "France Riots"
- 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்
- இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி கலவரமாக வெடித்தது
பிரான்ஸ் நாட்டில் சென்ற மாத இறுதியில் நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவன் பலியானான். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து சில மணி நேரங்களில் அந்நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்து, வன்முறை அதிகரித்தது.
இக்கலவரம் பிரான்ஸில் 2005-ல் நடந்த கலவரத்திற்கு பிறகு நடைபெற்ற ஒரு மோசமான கலவரம் என வர்ணிக்கப்பட்டது.
உயரடுக்கு காவல்துறை சிறப்புப் படைகள் மற்றும் கவச வாகனங்கள் உட்பட சுமார் 45,000 பாதுகாப்பு படைகளை கொண்டு 4 நாட்களாக பெரும் முயற்சி செய்து நிலைமையை அந்நாட்டு அரசாங்கம் கட்டுக்குள் கொண்டு வந்தது.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்து கொண்டனர். இதனால் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வழக்குகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
"உறுதியான மற்றும் முறையான செயலாக்கத்தை நாம் காட்ட வேண்டியது மிகவும் முக்கியமானது. நாட்டின் ஒழுங்கை மீண்டும் நிறுவுவது அவசியம். நீதிமன்றங்கள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்" என பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் எரிக் டுபாண்ட்-மோரெட்டி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கலவரங்கள் தொடர்பாக 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை பாராட்டி மோரெட்டி கருத்து கூறும்போது, நீதிபதிகளின் உறுதியான தீர்ப்பை பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.
மொத்தம் 1,278 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களில் 95 சதவிகிதத்திற்கு அதிகமானோர் பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது, காவல்துறை அதிகாரிகளை தாக்குவது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றுள்ளனர். 600 பேர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில நீதிமன்றங்கள் வார இறுதியில் வழக்குகளை கையாள்வதற்காக திறந்திருந்தன.
கைது செய்யப்பட்ட 3,700 பேரின் சராசரி வயது வெறும் 17 ஆகும். அவர்கள் தனித்தனியாக குழந்தைகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டனர்.
2005-ம் ஆண்டு நடந்த பெரும் கலவரத்தின்போது 400 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனை அப்போதைய எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
- 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து கலவரம்
- கலவரத்தை பயன்படுத்தி கடைகள் சூறையாடப்பட்டன
பிரான்ஸ் நாட்டில் இரு வாரங்களுக்கு முன் நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவன் பலியானான். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
சில மணி நேரங்களில் அந்நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்து, வன்முறை அதிகரித்தது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து தரப்பினரும் போராடி, தற்போது நிலைமை சீரடைந்து அமைதி திரும்புகிறது.
இதற்கிடையே, பிரான்ஸில் 2012 முதல் 2017 வரை அதிபராகவும் முன்னாள் சோசலிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்த பிராங்கோய்ஸ் ஹாலண்டே, பிரான்ஸ் நாட்டில் நடந்த கலவரங்கள் போல் பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கலாம் என எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு காவல் அதிகாரியால் அந்த சிறுவன் கொல்லப்பட்டதன் மூலம் இந்த கலவரம் தூண்டப்பட்டதாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் இது தூண்டப்பட்டிருந்தாலும், பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளால் இது மோசமடைந்தது என்பதே உண்மை.
சமூக ஊடகங்களால், மிக வேகமாக ஒரு "டோமினோ விளைவு" (ஒரு நிகழ்வின் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகள் ஒரு சங்கிலி போல் உருவாகி ஏற்படுத்தும் மொத்த விளைவு) ஏற்பட்டு கலவரம் பரவியது. சமூக ஊடகங்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுவதால், இதுபோன்ற கலவரங்களுக்கு எல்லைகள் கிடையாது.
இவை எந்த நாட்டிலும் உருவாகி வேறொரு நாட்டிற்கும் பரவலாம். தற்போது இந்த கலவரம் காரணமாக எங்களை (பிரான்ஸ்) சற்று கேலியுடன் பார்க்கும் பிற நாட்டவர்கள், அவர்கள் நாட்டிலும் இதுபோன்று நடக்கலாம் என்பதை உணர வேண்டும். கலவரங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், பாரிஸ் நாட்டின் லியோன் மற்றும் மார்செய்ல்ஸ் நகரங்களில் மட்டும் பரவவில்லை.
அவை பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற பிற நாடுகளின் பெருநகரங்களிலும் பரவுகின்றன. சாதாரண நேரங்களில் வாங்க முடியாத பொருட்களை பலர் கலவர நேரங்களில் எளிதாக எடுத்துக்கொள்ள முடியும் என்று தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
பணவீக்கம் மற்றும் கோவிட் லாக்டவுன் காரணங்களால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சில இளைஞர்களிடையே இந்த வெறி அதிகரித்திருக்கிறது.
இவ்வாறு ஹாலண்ட் கூறினார்.
நேஹலின் இறுதிச்சடங்கை தொடர்ந்து 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறை ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கியது.
அந்த சிறுவன் தன் மீது மோதும் விதமாக காரை ஓட்டியதால் அவரை துப்பாக்கியால் சுட நேர்ந்ததாக அதிகாரி கூறியதாக காவல்துறையினர் முதலில் தெரிவித்தனர். ஆனால், இந்த நிகழ்வுகளின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி அது தவறான தகவல் என்பது உறுதியானது.
2011-ல் 29 வயதான மார்க் டுக்கன் என்பவரை இங்கிலாத்தின் டோட்ட்ன்ஹாம் பகுதியில் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதையடுத்து லண்டன் மற்றும் பிற நகரங்களில் தொடர்ந்து கலவரம் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
- நீங்கள் சேதப்படுத்தும் கார்களோ, பள்ளிகளோ, அல்லது பேருந்துகளோ உங்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை.
- துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிதான் தண்டிக்கப்பட வேண்டியவர்.
பிரான்ஸ் நாட்டில் கடந்த வாரம் நேஹல். எம். 17-வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவன் பலியானான். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. மேலும் அந்நாட்டு காவல்துறை, சிறுபான்மையினருக்கு எதிரானது எனும் எண்ணமும் உருவாகி, அங்கு வன்முறை அதிகரித்திருக்கிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பலியான சிறுவனனின் பாட்டி நாடியா, வன்முறையில் ஈடுபடுவதற்கு போராட்டக்காரர்கள் தனது பேரனை சாக்காகப் பயன்படுத்துவதாக கூறியதுடன், அமைதியாக இருக்ககும்படி அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
இப்போது பொருட்களை உடைக்கும் நபர்களுக்கு நான் சொல்கிறேன்: அதை உடனே நிறுத்துங்கள். நீங்கள் சேதப்படுத்தும் கார்களோ, பள்ளிகளோ, அல்லது பேருந்துகளோ உங்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. அவற்றை சேதப்படுத்தாதீர்கள். தாய்மார்கள்தான் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். எனது பேரனின் படுகொலை, எனது வாழ்க்கையையும் எனது மகளின் (நேஹலின் தாயார்) வாழ்க்கையையும் மாற்றிவிட்டது என்றாலும் காவல்துறையினரை துன்புறுத்துவதை நான் விரும்பவில்லை. நீதி அதன் வழியில் இயங்க வேண்டும். எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிதான் தண்டிக்கப்பட வேண்டியவர். காவல்துறையின் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அந்த அதிகாரிக்காக நிதி சேகரிப்பு பிரச்சாரம் நடந்தது. இதில் சுமார் ரூ.6 கோடி ($731,000) உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கேட்டதற்கு, "என் இதயம் வலிக்கிறது" என நாடியா தெரிவித்தார்.
நேற்று முன்தின நிலவரப்படி, 200க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் காயமடைந்திருக்கின்றனர் என்றும் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களின் சராசரி வயது 17 என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- வன்முறையால் போலீஸ் மற்றும் துணை ராணுவம் தரப்பில் 45 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 20க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள், துணை ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த வாரம் நேஹல்.எம் எனும் 17-வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவன் பலியானான்.
இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால் நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. காவல்துறை சிறுபான்மையினருக்கு எதிரானது எனும் எண்ணம் உருவாகி, அங்கு வன்முறை அதிகரித்திருக்கிறது. மேலும் இது பிரான்சில் கடுமையான இன ரீதியான பதட்டங்களை உண்டாக்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆவர். அவர்கள் கார்களுக்கு தீ வைப்பதிலும், உள்கட்டமைப்புகளை சேதப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்றைய நிலவரப்படி, இது சம்பந்தமாக மேலும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேஹல், பாரிஸுக்கு அருகிலுள்ள சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, காவல்துறை ஒரே இரவில் 719 பேரை கைது செய்துள்ளனர். அதற்கு முந்தைய இரவு சுமார் 1,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறையால் சுமார் 45 காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினர் காயமடைந்திருப்பதாகவும், 577 வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும், 74 கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதாகவும், தெருக்களிலும், பிற பொதுவெளியிலும் 871 இடங்களில் தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள், துணைராணுவ முகாம்கள் (gendarmerie) தாக்கப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பதிவாகி வரும் எண்ணிக்கைகளின்படி, நாடு முழுவதும் பதற்றம் குறைந்து வருவது போல் தெரிந்தாலும், காவல்துறை பல இடங்களில் புது சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பாரிஸின் தெற்கே உள்ள ஒரு நகரத்தின் மேயர், வின்சென்ட் ஜீன்ப்ரூன் வீட்டிற்குள் கலவரக்காரர்கள் ஒரு காரை மோதி, அவரது மனைவி மற்றும் அவரது குழந்தைகளில் ஒருவரை காயப்படுத்தி, தீவைப்பிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த தாக்குதலை "சகிக்க முடியாதது என பிரதம மந்திரி எலிசபெத் போர்ன் தெரிவித்தார். அரசாங்க வழக்கறிஞர்கள், இதனை கொலை முயற்சியாக கருதுவதாக கூறியின்றிருக்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் சுமார் 45,000 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி மாதம் கடும் போராட்டம் வெடித்தது. இந்த தொடர் போராட்டங்களுக்கு பிறகு இப்போதைய போராட்டங்கள் மேக்ரானுக்கு புதிய நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்