search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "France Violence"

    • போராட்ட காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 24 போலீசார் காயம் அடைந்தனர்.
    • மேயரின் மனைவி, மற்றும் அவரது குழந்தை காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், புறநகர் பகுதியான நான்டென் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் காரை ஓட்டி சென்ற நகேல் என்ற 17 வயது ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த சிறுவன் இறந்தான்.

    போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பிரான்சில் பல நகரங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. கார்கள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்கள், குப்பைத்தொட்டிகள் போன்றவை தீ வைக்கப்பட்டது.கடைகள் சூறையாடப்பட்டது. பாரீசில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸ் பகுதியில் போராட்டக்காரர்கள் கார்களுக்கு தீ வைத்தல், கடைகளை அடித்து நொறுக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

    பிரான்ஸ் முழுவதும் 6-வது நாளாக இந்த கலவரம் நீடித்து வருகிறது. போராட்ட காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 24 போலீசார் காயம் அடைந்தனர். வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் பாரீசில் உள்ள ஹேலெஸ் ரோச்சின் மேயர் வின்சென்ட் ஜீன்ப்ரூன் இல்லத்தில் போராட்டக்காரர்கள் நேற்று தாக்குதலில் ஈடுபட்டனர். தீப்பற்றி எரியும் காரை போராட்டக்காரர்கள் ஓட்டிச்சென்று மேயர் இல்லத்தில் மோத விட்டனர். இதில் மேயரின் மனைவி, மற்றும் அவரது குழந்தை காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.,இது கோழைத்தனமான தாக்குதல் என மேயர் வின்சென்ட் ஜீன்ப்ரூன் தெரிவித்து உள்ளார்.

    பிரான்சில் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    பிரான்சில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் போராட்டம் நடந்து வருகிறது. சுவிட்சர்லாந்து பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கும்பல் அங்கிருந்து கடைகளை சூறையாடினார்கள். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பிரான்சின் முக்கிய நகரங்களில் வன்முறை பரவியது.
    • பொது மக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் புறநகர் பகுதியை சேர்ந்த கருப்பின சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் வெடித்த நிலையில், பிரான்சின் முக்கிய நகரங்களில் வன்முறை பரவியது. கடந்த 5 நாட்களாக போராட்டக்காரர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சமூக வலை தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் வன்முறைக்கு நடுவே ஒரு வாலிபர் 'சான்ட்விச்'-ஐ ருசித்து சாப்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது. அதில், பொது மக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர். அப்போது எதை பற்றியும் கவலைபடாமல் ஒரு வாலிபர் தனியாக அமர்ந்து 'சான்ட்விச்'-ஐ ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.

    இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அது வைரலாகியது. இதைப்பார்த்த இணைய பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • வன்முறை தொடர்பாக 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • ஊர்வலம் வந்தபோது நூற்றுக்கணக்கானோர் சாலையோரம் நின்று அஞ்சலி செலுத்தினர்.

    பிரான்சின் பாரிஸ் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரே நகரில் காரில் சென்ற 17 வயது இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி, போலீசாரின் உத்தரவை மீறி காரை இயக்க முயற்சித்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட சிறுவனின் பெயர் நிஹெல் என தெரியவந்துள்ளது.

    சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நான்டெர்ரே நகரில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது. கடந்த 5 நாட்களாக நிகழ்ந்த இந்த போராட்டத்தின்போது, ஏராளமான வாகனங்கள், அரசு கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. வன்முறையை ஒடுக்க பிரான்ஸ் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சில இடங்களில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. முக்கிய நகரங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். வன்முறை தொடர்பாக 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட நிஹலின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. நிஹலின் உடல் நான்டெர்ரே நகரில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டு தொழுகை செய்யப்பட்டது. பின்னர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நான்டெர்ரேயில் உள்ள ஒரு மலை உச்சியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இதில், நிஹெலின் தாயார் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

    ஊர்வலம் வந்தபோது நூற்றுக்கணக்கானோர் சாலையோரம் நின்று அஞ்சலி செலுத்தினர். கல்லறை பகுதியில் பத்திரிக்கையாளர்கள் தடை செய்யப்பட்டனர். சில பத்திரிகையாளர்கள் செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவர்களை வெளியேற்றினர்.

    நிஹல் இறுதிச்சடங்கின் போது வன்முறை அதிகரிக்கலாம் என்பதால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

    • வன்முறையை ஒடுக்க பிரான்ஸ் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • வாலிபர் ஒருவர் வணிக வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையை உடைத்து உள்ளே செல்ல முயன்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நான்டேன் பகுதியில் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது. இதில் வன்முறைகள் வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. 3-வது நாளாக இந்த கலவரம் நீடித்தது.

    வன்முறையை ஒடுக்க பிரான்ஸ் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முக்கிய நகரங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கலவரத்தை பயன்படுத்தி ஒரு கும்பல் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடிக்கும் முயற்சியிலும் இறங்கியது. வடமேற்கு பிரான்ஸ் பகுதியில் வணிக வளாகம் உள்ளது. நேற்று 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இந்த வணிக வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையை உடைத்து உள்ளே செல்ல முயன்றார்.

    அப்போது அவர் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவர் கடைக்குள் நுழைந்து திருட முயற்சி செய்ததாகவும், அந்த சமயம் அவர் கீழே விழுந்து இறந்ததாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    ×