search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gaja cyclone effected"

    கஜா புயல் காரணமாக கொடைக்கானல் பகுதியில் பயிர்கள் சேதம் அடைந்தது. இதனை பார்வையிடுவதற்காக வந்த அமைச்சர் மற்றும் எம்பி காரை மலை கிராம மக்கள் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #gajayclone

    பெரும்பாறை:

    கஜா புயல் காரணமாக கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரும்பாறை, கே.சி.பட்டி, குப்பமாள்பட்டி, பெரியூர், பாச்சலூர், மஞ்சள்பரப்பு, தாண்டிக்குடி, காமனூர், பண்ணைக்காடு, ஆடலூர், சோலைக்காடு, பன்றிமலை, பூலத்தூர் உள்ளிட்ட இடங்களில் பயிரிட்டிருந்த காபி, மிளகு, வாழை, அவக்கோடா, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது.

    இதனை பார்வையிடுவதற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் உதயகுமார் எம்.பி., கலெக்டர் வினய் மற்றும் அதிகாரிகள் கொடைக்கானல் பகுதிக்கு சென்றனர். கே.சி.பட்டி பகுதியில் சென்ற போது மலை கிராம மக்கள் திடீர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் எம்.பி. காரை மறித்தனர்.

    அப்போது மக்கள் ஆவேசமாக எங்களது பகுதியில் கஜா புயலால் கடும் பாதிப்பு அடைந்தோம். எங்களை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை போல் எங்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் உதவவில்லை என்று கூறினர்.

    உடனே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காரை விட்டு கீழே இறங்கி மக்களை சந்தித்து குறைகேட்டார். அப்போது மலை கிராம மக்கள் அவரிடம் மனுக்களை அளித்தனர்.

    அந்த மனுவில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் எம்.பி. இதுவரை தங்களது பகுதிக்கு வரவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எந்த பணியும் மேற்கொள்ள வில்லை.

    எங்களது பகுதியில் யானைகள் வாழையை அழித்து விட்டு செல்கின்றன. கஜா புயல் காபி தோட்டங்களை முற்றிலும் அழித்து விட்டது. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தனர்.

    மனுக்களை வாங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். #gajayclone

    ×