search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Godown Owner Arrested"

    கோவை அருகே 2350 கிலோ குட்கா பதுக்கிய குடோன் உரிமையாளரை கைது செய்த போலீசார் தலைமறைவான வியாபாரிகளை தேடி வருகின்றனர். #Gutkha #GutkhaSeized
    கோவை:

    கோவை கண்ணம்பாளையத்தில் இயங்கி வந்த குட்கா குடோனில் கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அங்கிருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் போலீசாரும், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் மாவட்டம் முழுவரும் சோதனை நடத்தி குடோன்கள் மற்றும் மளிகை கடைகளில் இருந்து குட்காவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் அன்னூரை அடுத்த மசகவுண்டன் செட்டிப்பாளையத்தில் ஒரு குடோனில் அதிக அளவில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது குடோன் பூட்டப்பட்டு இருந்தது. உடனே பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கு மளிகை பொருட்களுக்கு இடையே ஏராளமான மூட்டைகளில் குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து மொத்தம் 2,350 கிலோ எடை கொண்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் ஆகும்.

    போலீசார் நடத்திய விசாரணையில் இந்த குடோன் அன்னூரை சேர்ந்த சாந்த குமார்(வயது 38) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. கோவை கணபதியை சேர்ந்த பட்டு ராஜன், சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்த தங்கசிங் ஆகியோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த குடோனை வாடகைக்கு எடுத்து குட்கா மூட்டைகளை பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து பட்டு ராஜன், தங்கசிங், சாந்த குமார் ஆகிய 3 பேர் மீதும் புகையிலை பொருட்கள் தடை சட்டம் 2003 மற்றும் கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் சாந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மளிகை கடை நடத்தி வரும் பட்டு ராஜன், தங்கசிங் ஆகியோர் மளிகை கடை வைத்திருப்பதற்காக குடோனை வாடகைக்கு கேட்டதாகவும், அதன் பேரில் ரூ.1500 மாத வாடகைக்கு குடோனை கொடுத்ததாகவும், குட்கா பதுக்கி வைத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.

    தொடர்ந்து சாந்த குமாரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் பட்டு ராஜன், தனசிங் ஆகியோரை தேடி வருகின்றனர். குட்கா விற்பனைக்கு பயன்படுத்திய 1 சொகுசு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பட்டுராஜா, தனசிங் ஆகியோர் பிடிபட்டால் தான் எங்கிருந்து குட்காவை வாங்கி வந்தார்கள்? யார்- யாருக்கெல்லாம் விற்பனை செய்தார்கள்? அவர்களின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்-யார்? என்பது தெரிய வரும். தலைமறைவான இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் இருவரையும் செய்ய கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.  #Gutkha #GutkhaSeized



    ×