search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt scholls"

    அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் நிலை உருவாக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan
    நெல்லை:

    தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு 2-ம் கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று நடந்தது.

    இந்த விழாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கி நிவாரண பொருட்களை கொடியசைத்து கேரளாவுக்கு அனுப்பி வைத்தார். மொத்தம் நெல்லை, தூத்துக்குடி, குமரி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, விருதுநகர், தேனி ஆகிய 10 மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ரூ.1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரம் மதிப்புள்ள உணவு, மருந்து மற்றும் ஆடைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் 22 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு துறை சார்பிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பாக ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளி கல்வித்துறை சார்பாக முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பப்பட்டன. இன்று 2-ம் கட்டமாக நெல்லையில் இருந்து ரூ.1 கோடியே 62 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பாக மொத்தம் ரூ.4 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்படும். இதன் மூலம் கேரள மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வருவார்கள்.

    தமிழகத்தில் இன்று முதல் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சி தொடங்குகிறது. பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று பிற்பகல் ‘நீட்’ தேர்வு பயிற்சியை தொடங்கி வைக்கிறேன். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 412 ‘நீட்’ தேர்வு மையங்களில் பயிற்சி தொடங்கும்.

    மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலமும் பயிற்சி வழங்கப்படும். இதற்காக 3 ஆயிரத்து 200 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.


    இந்தியா முழுவதுமே ‘நீட்’ தேர்வை ரத்து செய்யலாம். கடந்த ஆண்டு தமிழகத்தில் 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் ‘நீட்’ தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆயிரம் மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதியதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 1,472 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 24 மாணவ- மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 1000 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் நிலை உருவாக்கப்படும்.

    இந்த ஆண்டு பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு புதிய பாட திட்ட புத்தகம் தேவைப்படும் அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சம் பிரதிகள் வழங்கியுள்ளோம். 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில புலமையை அதிகரிக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

    பெண் ஆசிரியர்களுக்கு பாலியல் தொல்லை இருந்தால் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ரகசியமாக புகார் கூற விரும்பினாலும் டோல்பிரி எண்ணான 14417 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். அவருடைய எண்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    ×