search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Granite Abuse Case"

    • குற்றம்சாட்டப்பட்ட துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறையினர் 5191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தனர்.
    • விசாரணைக்கு ஆஜரான பின் வெளியே வந்த துரைதயாநிதியிடம் நிருபர்கள், அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பினர்

    மதுரை:

    கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமம் பெற்றவர்கள் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி , மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் கிரானைட் குவாரிகள் மூடப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழு விசாரணை நடத்திய பின்னர் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக 2013-ம் ஆண்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

    இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த கிரானைட் குவாரி முறைகேடு சம்பந்தமான வழக்குகள் மேலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்நிலையில் கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்குகள் கனிம வளக்குற்றங்களை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் நிறுவனமான ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் மீதும் மதுரை மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.257 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே 2013-ம் ஆண்டில் ஒலம்பஸ் குவாரி நிறுவனத்தின் பங்குதாரர் துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

    குற்றம்சாட்டப்பட்ட துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறையினர் 5191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 27-ம் தேதி மேலூர் நீதிமன்றத்தில் துரை தயாநிதி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது குற்றப்பத்திரிகைகளின் நகலை பெற்றுக்கொண்ட பின்பு இந்த வழக்கு மதுரை மாவட்ட கனிமவள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு செப். 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    அதன்படி இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கிரானைட் முறைகேடு வழக்கிற்காக நீதிபதி சிவகடாட்ஷம் முன்பாக துரைதயாநிதி இன்று நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற நவம்பர் 6-ந்தேதி வழக்கை ஒத்திவைத்தார்.

    விசாரணைக்கு ஆஜரான பின் வெளியே வந்த துரைதயாநிதியிடம் நிருபர்கள், அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கோர்ட்டுக்கு வந்துள்ளேன் என பதில் அளித்தவாறு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    ×