என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Green Way Road arrest"
திருவண்ணாமலை:
சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் தென் இந்தியாவின் 2-வது பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
இதற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டு வருகின்றன.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களிலும் விவசாயிகளின் நிலத்தை அளந்து கல் பதிக்கும் பணி 90 சதவீதம் முடிந்து விட்டது. தற்போது திருவண் ணாமலையில் நில அளவு பணி நடந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கி.மீ. தொலைவுக்கு 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் பசுமை வழிசாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
செங்கத்தை அடுத்த அயோத்தியாபட்டணம், கட்டமடுவு பகுதிகளில் விவசாயிகளின் நிலத்தை அளந்து எல்லைக் கற்கள் நடும் பணியை அதிகாரிகள் 2 நாட்களாக மேற்கொண்டுள்ளனர். அதிகாரிகள் நட்டு செல்லும் எல்லைக்கற்களை விவசாயிகள் உடனுக்குடன் பிடுங்கி வீசி எறிகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் 2 நாட்களாக பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.
சில பகுதிகளில் நில அளவீடு செய்யும் அதிகாரிகளை தங்கள் ஊருக்குள் விவசாயிகள் விடவில்லை. இதையடுத்து அயோத்தியாபட்டணம், கட்டமடுவு ஆகிய பகுதிகளில் பசுமை வழிச்சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 1-ந்தேதி (நாளை) திருவண்ணாமலையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியபடி உள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைத் தளங்களில் தகவல்களை பரப்புவது தெரிய வந்தது. பசுமை வழிச்சாலை திட்டம் பற்றி அவதூறு பரப்புவதோடு, மக்களை திசை திருப்பும் வகையில் அவர்கள் வதந்தி பரப்புவதாக போலீசார் கருதினார்கள்.
இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை பேகோபுரத் தெருவை சேர்ந்த விஜயகுமார், திருவண்ணாமலை அருகே உள்ள வேளுகானந்தல் பகுதியை சேர்ந்த மணிகண்டன், பவன்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மூவரும் ‘‘8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் இளைஞர்கள் வருகிற 1-ந்தேதி ஒன்றிணைய வேண்டும்’’ என்று பேஸ்புக், வாட்ஸ்-அப் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பி உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை டவுன் போலீசார் நேற்று மாலை மூவரிடமும் விசாரணை நடத்தினார்கள். இந்த 3 பேரையும் வேறு யாராவது மூளை சலவை செய்து தூண்டி விட்டார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்துக்கு அதிகாரிகள் நில அளவீடு செய்யும் போது பணியை தடுத்ததாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டதாகவும், ‘பேஸ்புக், வாட்ஸ்-அப்’ ஆகிய சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொய்யான செய்தி பரவியது. இதுகுறித்த புகாரின் பேரில் சேலம் மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அவர்களது விசாரணையில் சென்னையை சேர்ந்த செல்வராஜ் என்பவர் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. சேலம் போலீசார் அவரை கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்து உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் கதிர்வேல் (27) என்பவரையும், பசுமை வழிச்சாலை குறித்து பொய்யான தகவலை பேஸ்புக்கில் பரப்பியதாக சேலம் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இதற்கிடையே செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்தை சேர்ந்த ஆலத்தூர், ஓரந்தவாடி, நயம்பாடி, சி.நம்மியந்தல் ஆகிய கிராமங்களில் போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. சி.நம்மியந்தலில் பெண்கள் மற்றும் விவசாயிகள் நிலம் அளவீடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை நிலம் அளவீடு பணிக்கு வந்த அதிகாரிகளின் முன்பு வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக பெண்கள் மற்றும் விவசாயிகள் சி.நம்மியந்தல் கூட்டுரோடு பகுதியில் சாலையோரம் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால், நிலம் அளவீடு பணியை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டு புறப்பட்டு சென்றனர்.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள 8 வழி பசுமைச்சாலை திட்ட நிலம் எடுப்பு பிரிவு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் சென்னை- சேலம் 8 வழி பசுமைச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
அந்த மனுவில் ‘‘நாங்கள் எங்கள் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்கள் விளை நிலத்தில் கிணறு போன்றவை உள்ளன. நாங்கள் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம்.
சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலை அமைக்கப் போவதாகவும், இதற்காக மொத்தம் 277.4 கிலோ மீட்டர் தூரம் சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்டங்கள் வழியாக சென்னை வரை சாலை போடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக நிலம் அளவீடும், சில இடங்களில் எல்லை கல் பதிக்கப்பட்டும் வருகிறது. நாங்கள் எங்கள் நிலங்களை 8 வழிச் சாலைக்கு தருவதற்கு தயாராக இல்லை. எங்களுக்கு 8 வழி பசுமைச் சாலை வேண்டாம்.
இது தொடர்பாக எங்களது ஆட்சேபனைகளை தெரிவித்து கொள்கிறோம்’’
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், கவர்னர், முதல்- அமைச்சர், மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி, பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கும் இதே கடிதத்தை அனுப்பி வைத்தனர். #GreenWayRoad
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்