search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guruvayoor Temple"

    • முதன்முறையாக ஒரே நாளில் அதிக திருமணங்கள் நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    • மக்கள் கூட்டத்தை சமாளிக்க உள்வட்ட சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று குருவாயூர் கிருஷ்ணர் கோவில். பூலோக வைகுண்டம் என்று குறிப்பிடப்படும் இந்த ஆலயத்திற்கு கேரள மாநிலத்தினர் மட்டுமின்றி தமிழக பக்தர்களும் அதிகளவில் வருகிறார்கள். குழந்தைகளுக்கு முதல் உணவு ஊட்டும் நிகழ்வு இந்த கோவிலில் மிகவும் பிரசித்திபெற்றதாகும்.

    மேலும் விஷேச நாட்களில் இந்த கோவிலில் அதிக திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று முகூர்த்த நாளான நாளை(8-ந்தேதி) குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் 350 திருமணங்கள் நடக்க உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந்தேி 264 திருமணங்கள் நடந்ததும், 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ந்தேதி 277 திருமணங்கள் நடந்ததுமே அதிக திருமணம் நடந்த தினங்களாக இருந்தன.

    இந்தநிலையில் நாளை 350-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற உள்ளது. மலையாள மாதத்தில் சிங்கம் மாதத்தில் வரக்கூடிய முகூர்த்த நாட்கள் புனிதமான நாட்களாக கருதப்படுகிறது. அது புதுமண தம்பதிகளை அதிகம் ஈர்த்ததன் காரணமாகவே நாளை அதிக திருமணங்கள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

    முதன்முறையாக ஒரே நாளில் அதிக திருமணங்கள் நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. நாளை காலை 8 மணிக்கு திருமண நிகழ்வுகள் தொடங்குகிறது. காலை 11 மணி வரை 220 திருமணங்கள் நடைபெற உள்ளன.

    காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை நிவேத்யம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நேரத்தில் திருமணங்கள் எதுவும் நடக்காது. அதன்பிறகு திருமணங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். ஒவ்வொரு திருமண நிகழ்ச்சிக்கும் 20 பேர் வரை திருமண மண்டபத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்குவதற்காக கோவிலுக்கு தெற்கே பட்டர்குளம் அருகே சிறப்பு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    மக்கள் கூட்டத்தை சமாளிக்க உள்வட்ட சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களின் வருகைக்கு ஏற்ப கூடுதல் வாகன நிறுத்தங்கள் அமைக்க ஏற்பாடுகளை செய்யுமாறு தேவசம் போர்டு மற்றும் மாநகராட்சியிடம் போலீசார் கோரியுள்ளனர்.

    ×